23/06/2019

கால இயந்திரம் THE TIME MACHINE - Time travel 4

36 வயதுக்கு மேல் தான் காலப் பயணம் குறித்து யோசிக்கிறோம். அதன் சுவாரசியங்களை தேடி ஒடுகிறோம். பள்ளிப் பருவம் என்ற அந்த அழகிய வாழ்க்கை திரும்ப கிடைக்காத என ஏங்குகிறோம். இது தான் சராசரி மனிதர்களின் காலப் பயண தேடல்.

ஆனால் அறிவியலாளர்களின் காலப்பயண தேடல் அது அல்ல. அவர்கள் இந்த பிரபஞ்ச தோற்றத்தின் எல்லைக்கே செல்ல வேண்டும் என நினைக்கின்றனர். சிறுவயதை தாண்டி, தன் தாத்தா காலம், அதற்கு முந்தைய காலம், கற்காலம், டைனோசர் காலம், உயிர்கள் தோன்றா காலம் என பலநூற்றாண்டுகள் கடந்து செல்ல முடியுமா? இது தான் அறிவியலாளர்களின் காலபயண தேடல்.

இன்னும் சில அறிஞர்கள் எதிர்காலம் செல்ல முடியுமா என ஆய்வு செய்கின்றனர். உதாரணமாக 2050க்கு செல்ல முடியுமா என்பது போன்ற ஆய்வுகள் கூட நடக்கிறது.


மெஸ்மெரிசம், ஹிப்னாட்டிசம் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். இந்த மனவசிய கலை மூலம் ஒருவரது மூளையில் பதிந்துள்ள நினைவுகளை வெளிக் கொண்டு வர முடியும். அதன்படி பள்ளிப் பருவ நினைவுகளை ஒர கனவு போல கொண்டு வர முடியும். ஆனால் அது கனவு தானே தவிர, உண்மையான காலப் பயணமாக இருக்காது.

நமது உடலும் அந்த சின்ன வயதிற்கு செல்ல வேண்டும். நாம் உடலாலும் மனதாலும் பள்ளி பருவத்திற்கு செல்ல வேண்டும். நாம் மட்டுமல்ல, நாம் தொடர்புடைய அத்தனையும் அதே பருவத்திற்கு செல்ல வேண்டும். அது தான் உண்மையான காலப் பயணமாக இருக்கும். இது சாத்தியம் இல்லை என்கின்றனர் அறிவியலாளர்கள்.
உடல் ஒருபோதும் இளமைக்கு திரும்பாது. அப்படி திரும்ப வேண்டும் என்றால் பிரபஞ்சத்தின் மொத்த அடிப்படை இயக்கங்களும் நேர் எதிராக திரும்ப வேண்டும். இது சாத்தியமே இல்லை என்கின்றது அறிவியல்.

அப்படியானால் காலப் பயணம் குறித்து அறிவியலின் கோட்பாடு தான் என்ன?

நமது உடல் இளமைக்கு திரும்பாது, அதே நேரத்தில் காலத்தை இறந்த காலத்திற்கு திருப்பலாம். இது தான் அறிவியலில் காலப் பயண கோட்பாடு. நமது உடல் தற்போதைய நிலையிலேயே இருக்கும். இதே நிலையில் இருந்தவாரே நமது இறந்த காலத்தை நம்மால் பார்க்க முடியும். உணர முடியும். வாழ முடியும். அதே போல நமது எதிர்காலத்தையும் நம்மால் பார்க்க, உணர முடியும். இதற்கு தேவை காலப் பயணம் செய்ய தகுந்த ஒரு இயந்திரம்.

காலப் பயண இயந்திரம் என்பது ஒரு கற்பனை. சுவாரசிய திரைப்படம் எடுக்க வேண்டுமானால் பயன்படும். அனால் எதார்த்தத்தில் அது சாத்தியமில்லை என்பதே பெரும்பான்மை அறிவியலாளர் கருத்து.

சாத்தியமே இல்லை என்று சொல்லப்பட்ட பலவற்றை பிற்காலத்தில் சாத்தியப்படுத்தி உள்ளது அறிவியல். அறிவியலால் முடியாதது எதுவும் இல்லை. அந்த நம்பிக்கையில் நாமும் காலப்பயண இயந்திரத்தை கட்டமைக்க முற்படுவோம்.

காலப் பயண இயந்திரத்தை கட்டமைக்க நமக்கு அடிப்படைத்தேவை காலம், இடம், பரிமாணம் குறித்த அறிவியல் புரிதல்கள். அடுத்து அதிக வெப்பம் மற்றும் குளிரை தாங்கும் உலோகம் அல்லது அலோகம் அவ்வளவு தான்.

அறிவு பயணம் தொடரும்....

No comments:

Post a comment