14/06/2019

அறிவு பயணம் Time travel - 1

 கால பயணம் சாத்தியமா? நான் என் சிறுவயதிற்கு திரும்ப செல்ல முடியுமா? எதிர்காலம் எப்படி இருக்கும்? மரணம் இல்லாத வாழ்வு கிடைக்குமா? இவை நமக்குள் உற்சாகத்தை தரும் கேள்விகள்!

இந்த கட்டுரைத் தொடரை சமூக வலைதளத்தில் எழுதுவதால், சுருக்கமாக கூடுதல் விளக்கங்கள் இல்லாமல் எழுத முயல்கிறேன். ஒவ்வொரு கட்டுரையும் 100 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத முற்படுகிறேன். விளக்கம் தேவைப்படுபவர்கள் மட்டும் பின்னூட்டம் வழி கேளுங்கள். அல்லது எனது மின்னஞ்சல், இணையதளம் வழியாகவும் விளக்கம் பெறலாம். 

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா, அங்கு மனிதர்கள் வாழ முடியுமா? என்பது போன்ற ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக காலப்பயணம் ஆராய்சி தான் வானியலாளர்களின் தீவிர தேடல்.
இதற்கு அவர்கள் இறுக பிடித்துள்ள கோட்பாடு கருந்துளை(பிளாக் ஹோல்) மற்றும் காலவெளி (ஸ்பேஸ்டைம்) சார்பியல் கோட்பாடு.

கருந்துளை மற்றும் ஸ்பேஸ்டைம் ஆராட்சிகள் புதிருக்குள் புதிராக தான் தொடர்கிறது. இன்று வரை ஒரு தீர்வையும் தந்துவிடவில்லை. ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்கள் கூட சில தீர்வை முன்வைத்து விட்டார்கள். ஆனால் காலப் பயண ஆராட்சியாளர்கள் இன்னும் மௌனிகளாகவே இருக்கிறார்கள். 

கணக்குகளுக்கு மேல் கணக்கை போட்டு ஒருபுறம் காகிதத்தில் நடக்கிறது  காலப்பயண ஆராட்சி  . இன்னும் சில அறிவியலாளர்கள் காலப் பயணத்திற்கு ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்க முற்படுகிறார்கள். ஆனால் சர்வதேச வானியலாளர்களால்   
கவனிக்கபடாமல் போன விசயம் சித்தர் இலக்கியம். 

சித்தர் இலக்கியம் என்பது ஏதோ தமிழாசிரியர்கள் மட்டும் படிக்கும் ஒரு பாடப்பிரிவாக சுருங்கி விட்டது. சித்தர் இலக்கியம் என்றால் சித்தமருத்தும் தொடர்புடையது என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டு விட்டது.

கடவுள் யார்?, பிரபஞ்ச தோற்றம் இயக்கம் ரகசியங்கள் என்ன?, மரணம் ஏன் சம்பவிக்கிறது?, அல்லா, இயேசு, சிவபெருமான், பெருமாள் என தெய்வ சக்திகள் உண்மையா?, சொர்க்கம் நரகம் உண்டா?, இப்படி எளிமையான கேள்விகளுக்கு சித்தர் இலக்கியங்கள் அறிவியல் பூர்வமான விளக்கங்களை தருகின்றன. காலப்பயணம் குறித்து அதிதீவிரமாக ஆய்வு செய்த சித்தர்களை இன்றைய வானியல் அறிவியலாளர்கள் கவனிக்காமல் போனது வியப்பாக உள்ளது.

சித்தர் இலக்கியங்களையும் அறிவியலையும் ஒரு சேர சீர்தூக்கி பார்க்கும் ஒரு சிறு முயற்சி தான் இந்த அறிவு பயணம் கட்டுரைத் தொடர்.

சித்தர் இலக்கியம் என்றதும் ஓ இது ஏதோ சாமியார் மேட்டர் போல என யாரும் ஓடி விட வேண்டாம். இது முழுக்க முழுக்க அறிவியல் கட்டுரை. நியூட்டனின் ஈர்ப்பு விசை முதல் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்போடு, ஸ்டிபன்ஹாங்கின் கருந்துளை விசயங்கள், ஏலியன்ஸ் என அதே அறிவியல் போக்கில் தான் ஆராய்ச்சி செய்யப் போகிறோம். சின்ன வேறுபாடு நாம் கொஞ்சம் எதார்த்தமாக பயணிக்கப் போகிறோம் அவ்வளவே.

அறிவு பயணம் தொடரும்.

No comments:

Post a comment