15/07/2019

7ம் அறிவு என்பது என்ன? - Time Travel 8

தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகர் உணர்வு, பார்வை உணர்வு, கேட்டல் உணர்வு, மன உணர்வு என்பவை தான் 6 அறிவு பரிணாமங்கள். இந்த 6 அறிவில் அறிவியலுக்கும் சித்தர்களும் முரண்படு இல்லை. ஆனால் 7ம் அறிவு எது என்பதில் தான் பெரும் முரண்பாடு. 7ம் அறிவு எது என்பதில் சித்தர்களுக்குள்ளேயே முரண்பாடு உள்ளது.

ஒரு அறிவு முதல் 6 அறிவு வரை உயிராக இருப்பது ஆன்மா என்ற புதிரான வாதத்தில் சித்தர்களே பிளவுபடுகின்றனர். ஆன்மாவை நம்பும் சித்தர்கள் கடவுள் கொள்கை உடையவர்களாகவும், ஆன்மாவை ஏற்காத சித்தர்கள் கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களாகவும் பிரிகின்றனர்.

ஆன்மாவை 7வது பரிணாமமாக ஒரு பிரிவு சித்தர்கள் கூறுகின்றனர். அறிவை 7வது பரிணாமமாக மறுபிரிவு சித்தர்கள் விளக்குகின்றனர்.
இதில் ஆன்மா கோட்பாட்டை அறிவியல் ஏற்பதில்லை. காரணம் ஆன்மாவிற்கு காலமும், பரிமாணமும் இல்லை. காலமும், பரிமாணமும் இல்லாத ஒன்றை பரிணாமமாக ஏற்க முடியாது என்கிறது அறிவியல். பரிமாணமும், காலமும் அறிவியலுக்கு தான் தேவை. கடவுளுக்கு அது தேவை இல்லை என்கின்றனர் ஆன்மா வாதிகள். பரிமாணமும், காலமும் உள்ள மனிதனுக்கு பரிமாணமும் காலமும் இல்லாத கடவுளே தேவையில்லை என முடித்துக்கொள்கிறது அறிவியல்.

அப்படியானால் 7வது பரிணாமம் எது?

பகுத்தறிவு என்று உறுதியாக சொல்கின்றனர் சித்தர்கள். பகுத்தறிவு தான் 7ம் அறிவு. மனம் என்பது வெறும் நினைவு தொகுப்பு மட்டுமே. நினைவை பகுத்தறியும் பகுத்தறிவே 7ம் பரிணாமம். பகுத்தறிவே 7ம் அறிவு என்பதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. ஏனென்றால் பகுத்தறிவு தான் அறிவியலாகவே பரிணாமம் அடைந்துள்ளது. இங்கே சித்தர்களும் அறிவியலாளர்களும் கைகோர்த்துக் கொள்கிறார்கள்.

பகுத்தறிவு தான் 7ம் அறிவு என்றால் இயற்கை என்ன ஆவது? படைப்பின் அர்த்தமே பாழாகிப்போகும். மனம் என்பது மிருகமாகும். மனிதன் கீழ்நிலையான மிருகமாவது எப்படி 7ம் பரிணாமமாகும் என எதிர்வாதம் வைக்கின்றனர் ஆன்மீகவாதிகள்.

ஆன்மா கோட்பாட்டில் கடவுளுடன் பரிணாமப் பயணம் முடிகிறது. புல்லாகி பூண்டாகி புழுவாகி, பறவையாய், விலங்காய் மனிதனாய் பிறப்பு எடுத்த ஆன்மா, மனிதனுக்கு பின் தெய்வமாய் உறைந்துவிடும் என்பதே ஆன்மா கோட்பாடு.

மனிதன் தெய்வமாக பரிணாமிக்கும் ஆன்மா கோட்பாட்டை அறிவியல் ஏற்பதில்லை. காரணம் ஆன்மா என்பது மனதின் போதையே தவிர உடல் சார்ந்த உண்மை இல்லை என்கிறது அறிவியல்.

உடலும் மனதும் இணைந்தது தான் உயிர். ஒன்றில் இருந்து ஒன்றை பிரித்தாலும் அங்கே உயிர் இருப்பதில்லை. உடல் இல்லாத உயிரை மனிதன் அறிந்தல்லை. அதே போல உயிர் இல்லாத உடலை நாம் உயிர் என உணர்வதில்லை. அப்படி உணர்வது மூடநம்பிக்கை என்கிறது அறிவியல்.

கடவுள் விடயத்துக்கு வருவோம்

கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்கள் போதிக்கும் உடல் இல்லாத உயிர் மட்டுமே உள்ள கடவுளை அறிவியல் ஏற்பதில்லை. அதே போல இந்து மதம் போதிக்கும் உயிர் இல்லாத உடல்(சிலை) மட்டும் உள்ள கடவுள்களையும் அறிவியல் ஏற்பதில்லை.

அப்படியானால் கடவுளே இல்லை என்பது தான் அறிவியலா என்றால். அதுவும் இல்லை என்பது தான் பதில். கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு அறிவியலால் இருக்கிறார்/இல்லை என்ற தீர்க்கமான பதிலை தர முடியவில்லை. இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என அறிவியல் ஒதுங்கிக்கொள்கிறது.

ஆனால் சித்தர்கள் கடவுள் இருக்கிறார் என்ற உறுதியான பதிலை வைத்துள்ளனர்.

கடவுள் இருக்கிறார் என்றால் அந்த கடவுள் யார்? எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? காலத்தை வென்று மரணம் இல்லாத வாழ்வு கடவுளுக்கு எப்படி சாத்தியப்பட்டது? மரணம் இல்லாத வாழ்வு நமக்கும் சாத்தியப்படுமா?

ஆம் என்ற அதிசய பதிலை தருகின்றனர் சித்தர்கள்...

அறிவுப் பயணம் தொடரும்....

முந்தைய கட்டுரைகளை படிக்க : www.arivakam.org

No comments:

Post a comment