04/09/2019

சோதிடமும் ஜோதிடமும் ஒன்றல்ல - சோதிடத்தின் எதிர்காலம் 1

சோதி+திடம்=சோதிடம், ஜோதி+இடம்=ஜோதிடம் என்ற எளிமையான பொருளில் ஜோதிடத்தின் பிறப்பை விளக்கி விடலாம்.

ஜோதிடத்திற்கும் சோதிடத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

ஜோதிடம் என்றால் நட்சத்திரத்தை மையப்படுத்தி கணிப்பது. சோதிடம் என்றால் நாடியை மையப்படுத்தி கணிப்பது.

ஜோதி என்ற சொல் நட்சத்திரத்தை குறிக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. நட்சத்திரங்களின் ஒளிர்வை வைத்து வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என நேரத்தை பிரித்து நேரத்திற்கு ஏற்ப சாதக பாதகங்களை சொல்லும் நடைமுறை தான் ஜோதிடம்.

சோதிடம் என்றால் கையில் நாடியை பிடித்தறிந்து, நாடியின் திடத்திற்கு ஏற்ப உடலியல், மனவியல் சாதக பாதகங்களை கூறுதல்.

நட்சத்திர ஜோதிடத்தின் முன்னோடி இந்த நாடி சோதிடம் தான். இந்த நாடி சோதிடத்தின் முன்னோடி நாடி மருத்துவம். நாடி மருத்துமே சித்த மருத்துவமாக இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

பண்டைய காலத்தில் சோதிடத்தை விட மருத்துவமே முதலாவதாக தேவைப்பட்டது. மருத்துவ முறைகளே பின்னாளில் சோதிடத்திற்கான அடித்தளத்தை அமைத்தது. உடல் நாடிகளின் திடத் தன்மையை சோதித்து நோயை கணிக்கும் முறை சித்த மருத்துவம். நோய் மட்டும் அன்றி மனநிலையையும் நாடியை வைத்து கணித்து விட முடியும் என்ற முயற்சியில் தான் நாடிசோதிடம் பிறந்தது.

நாடி சோதனையில் உடல்நிலையை கணிப்பது மருத்துவமாகவும், மனநிலையை கணிப்பது சோதிடமாகவும் விரிவடைந்தது. நாடிசோதிடத்தின் அடுத்த பரிணாமமே ஆருடம், குறிசொல்லுதல், ராசிஜோதிடம் எல்லாம்.

மனிதர்களில் நாடியை கணித்ததை போல, காலநிலையை கணிக்க நிலவின் நாடியை சோதிக்க முற்ப்படனர். இங்கே தான் இன்றைய ஜோதிடத்தின் உச்சாதிபதியான நாழிகை ஜோதிடம் பிறந்தது.


மனித நாடி நகர்வுகளுடன் நிலவின் நகர்வை கண்காணித்தனர். நாடி கணத்தில் நிலவை துள்ளியமாக கவனிப்பதில் உள்ள சிக்கலை தீர்க்க நாழிகை மற்றும் யோகம் முறைகளை வந்தனர்.

நாழிகை என்பது பழங்கால அளவீட்டு முறையில் நான்கில் ஒரு பங்கை குறிக்கும் சொல். அதாவது கால் பங்கை குறிப்பது. இரவு/பகல் பொழுதுகளை பண்டைய தமிழர்கள் 6 சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தனர். ஒரு சிறு பொழுதில் நிலவின் கால்பங்கு நகர்ச்சியை நாழிகை என குறிப்பிட்டனர். ஒரு சிறுபொழுதுக்கு 4 நாழிகைகள் என 6 சிறுபொழுதுக்கு 24 நாழிகைகளில் ஒரு இரவு பகலை நிலவு பூர்த்தி செய்தது.

நிலவின் நாழிநகர்வுக்கு தகுந்தாற்போல யோகம், நாழிகை, சிறுபொழுது, பொழுது, பிறை என நிலவிற்கு ஐந்திறம் கொடுக்கப்பட்டது. இந்த ஐந்திறமே அனைத்து ஜோதிடங்களின் வேதமாக இன்று வரை போற்றப்படுகிறது.

ஐந்திறம் என்றால் என்ன என இதுவரை புரியாதவர்களுக்கு இந்த பெயரை சொன்னால் பட்டென புரியும். ஐந்திறத்தை தான் சமஸ்கிருதத்தில் பஞ்சாங்கம் என குறிப்பிடுகின்றனர்.

தமிழின் தொன்மையான நூல் தொல்காப்பியம் முதல் தற்போதைய பாம்பு பஞ்சாங்கம் வரை அத்தனைக்கும் அடிப்படை இந்த ஐந்திறம் தான்.

நிலவின் ஐந்து திறன்களை வைத்து கணக்கிடும் முறை தான் ஐந்திறம். யோகம், நாழிகை, சிறுபொழுது, பொழுது, பிறை என்ற ஐந்திறத்தின் சோதிட முறைதான், யோகம், நட்சத்திரம், கரணம், திதி, வாரம் என்ற பஞ்சாங்க ஜோதிடமாக முடிசூடிக்கொண்டது.

மனிதனின் நாடி சோதித்து கணிப்பது நாடிசோதிடமாகவும், நிலவின் நாழிகை பார்த்து கணிப்பது நாழிகை சோதிடமாகவும் போற்றப்பட்டது. 

மனித உடலின் நாடிக்கும், நிலவின் நாழிகை நகர்வுக்கும் என்ன தொடர்பு? இந்த தேடலில் தான் சாதகத்தின்(ஜாதகத்தின்) சுவாரசியம் தொற்றிக்கொண்டது.

உண்மையில் நிலவின் நகர்வுகள் மனிதர்களின் நாடித்துடிப்பை பாதிக்கின்றனவா?

வானில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கும் போது நிலவு மட்டும் எப்படி மனிதர்களை துரத்துகிறது?

நாடிபிடித்தல் தொடரும்...

No comments:

Post a comment