16/09/2019

பாகிஸ்தானின் மொழி இந்தி - இந்தியாவின் தேசிய மொழி சமஸ்கிருதம் 2

சுதந்திரத்திற்கு முன்னர் பிரிட்டீஷ் ஆட்சியில் இந்தியாவின் அலுவல் மொழியாக எந்த மொழியை தேர்ந்தெடுப்பது என்ற விவாதம் நடந்தது. கல்கத்தாவில் வைத்து இந்த விவாதம் நடந்தது.

இதில் மூன்று மொழிகள் சிபாரிசு செய்யப்பட்டன. 1.சமஸ்கிருதம், 2.தமிழ், 3.வங்காளி. அப்போது இந்தியும் இல்லை. உருதும் இல்லை. இரண்டும் இந்துஸ்தானி என்ற ஒற்றை பெயரில் தான் அறியப்பட்டது. ஒற்றை மொழியாகவே இருந்தது.

சமஸ்கிருதம், தமிழ், வங்காளி மொழிகளுக்கு இடையே தீராத சண்டை. இந்த சண்டையை தவிர்க்க நான்காவது மொழியான இந்துஸ்தானி போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டது. தமிழ் மீது உள்ள வெறுப்பில் பிராமணர்கள் இந்துஸ்தானிக்கு கொடி அசைத்தனர். ஆங்கிலத்துடன் இந்துஸ்தானியும் அலுவல் மொழியாக இருக்கும் என்ற நடைமுயை அப்போதே நடைமுறைக்கு வந்தது.

இனி சுதந்திர இந்தியாவுக்கு வருவோம்.

சுதந்திர இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றும் போது தேசியம் முக்கியமாக பார்க்கப்பட்டது. தேசிய கீதம், தேசிய பறவை, தேசிய மலர் என்ற வரிசையில் தேசிய மொழி எது என்பதும் விவாதிக்கப்பட்டது.

இங்கே தான் இந்துஸ்தானி பிராமணர்களின் தொண்டையை விக்கி பிடித்தது. ஏனென்றால் பாகிஸ்தான் பிரிந்து இந்துஸ்தானியை அந்த நாட்டின் தேசிய மொழியாக அறிவித்துக் கொண்டது. பாகிஸ்தான் மொழியான இந்துஸ்தானியை எப்படி இந்தியாவின் தேசிய மொழியாக ஏற்க முடியும்?.

இப்போதும் இந்துஸ்தானி அல்லாத தமிழ், சமஸ்கிருதம், வங்காளத்திற்கு இடையில் சண்டை. இந்த சண்டை நடந்ததும் அதே கல்கத்தாவில் தான். அப்போதும் மீண்டும் இந்துஸ்தானியே பிரச்சனையை தீர்க்க உதவியது. ஆனால் இங்கே பிராமணர்கள் நரித்தந்திரத்தை கையாண்டனர். அந்த நரித் தந்திரத்தில் தமிழும் வங்காளமும் ஓரங்கட்டப்பட்டது.

சமஸ்கிருதம் இந்துஸ்தானியோடு ஒட்டிக்கொண்டது. கூடிகெடுக்கும் பழக்கம் சமஸ்கிருதத்திற்கு உண்டு என்பது மொழியியில் அறிஞர்கள் அறிந்ததே.

சமஸ்கிருதம் இந்துஸ்தானியோடு கூடியது. தேவநாகரி என்ற சமஸ்கிருத எழுத்து வடிவத்தை இந்துஸ்தானி மொழிக்கு கொடுத்தனர். தேவநாகரியில் எழுதினால் அது இந்தி. அரபி(அரேமிய) எழுத்துக்களில் எழுதினால் அது உருது. சொல்லும் மொழியும் ஒன்று தான். ஆனால் எழுத்து மட்டும் வேறுவேறு.

தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட இந்துஸ்தானிக்கு இந்தி என்று பெயர் வைத்தனர். பாகிஸ்தானில் இந்துஸ்தானி உருது என்ற பெயரை பெற்றது. இந்தியாவில் இந்துஸ்தானி இந்தி என்ற பெயரை பெற்றது.

இப்படி 1948ல் தோன்றிய மொழி தான் இந்தி. அதுவும் பாகிஸ்தானிடம் இருந்து கடன்வாங்கிய மொழி. பாகிஸ்தானின் உருது மொழியை தேவநாகரி எழுத்தின் உதவியுடன் இந்துமதத்திற்கு இந்தியாக மதம் மாற்றிக் கொண்டனர்.

பெயர் தான் வேறுபட்டதே தவிர மொழி வேறுபடவில்லை. பொதுமக்கள் மத்தியில் இன்றும் இந்துஸ்தானி ஒன்றாக தான் உள்ளது. பாலிவுட் திரைப்படங்கள் அனைத்தும் இந்தியில் அல்ல இந்துஸ்தானியில் தான் எடுக்கப்படுகிறது. மக்களின் அன்றாட பேச்சு, வியாபாரம், விழாக்கள், அனைத்தும் இந்துஸ்தானியில் தான் உள்ளன.

கல்வி மட்டுமே இந்தியில் உள்ளது. கற்பிப்பது கூட இந்துஸ்தானியில் தான். அதனால் தான் 70 ஆண்டுகள் கடந்தும் இன்றும் இந்தி பொதுமக்களின் மொழியாக மாறவில்லை.

இந்துஸ்தானியை மதம்மாற்றி இந்தி என பெயர் வைத்தாலும், இந்தி முழுமையான இந்திய மொழியாக மாறவில்லை. அது உருது மொழியாகவே தொடர்கிறது. அதை மாற்ற தான் இந்தி படியுங்கள்! இந்தி படியுங்கள்!! இந்தி படியுங்கள்!!! என மத்திய அரசு ஒட்டுமொத்த இந்தியர்களையும் உசுரு எடுத்து வருகிறது!.

இங்கே ஒரே குழப்பமாக இருக்கும். இந்துஸ்தானி தான் இந்தி. அப்புறம் ஏன் வடஇந்தியர்களுக்கு இந்தி தெரியவில்லை. அல்லது வடஇந்தியர்கள் பேசுவது இந்தி இல்லையா?

மத்திய அரசு அலுவல் மொழியாக வைத்துள்ள இந்தி பெயருக்கு தான் இந்தி. ஆனால் அதில் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தும் சமஸ்கிருத சொற்கள். பொதுமக்கள் பயன்படுத்தும் இந்தியில் உருது சொற்கள் உள்ளன. மத்திய அரசு பயன்படுத்தும் இந்தியில் சமஸ்கிருத சொற்கள் உள்ளன.

உதாரணத்திற்கு பொதுமக்கள் பயன்படுத்தும் இந்தியில் தண்ணீருக்கு பானி என்று பெயர். அரசு பயன்படுத்தும் இந்திக்கு ஜலம் என்று பெயர். இப்போது இந்தி வேறு இந்துஸ்தானி வேறு என்ற குழப்பம் தீர்ந்ததா?

இன்னும் தெளிவாக சொல்கிறேன் பானிபூரி விற்பவர் பேசுவது இந்தி அல்ல அது இந்துஸ்தானி. அமிதாபட்சன், சாருகான், சல்மான்கான் படங்கள் இந்தி அல்ல அது இந்துஸ்தானி படங்கள். இந்துஸ்தானியை தான் இந்தி என நம்மை தவறாக நம்ப வைத்துள்ளனர்.

இந்தி எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை விட வட இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது.

ஆதாரங்களுடன் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

 - இந்தி எதிர்ப்பு தொடரும்...

முந்தைய கட்டுரையை படிக்க :

இந்தியாவின் தேசிய மொழி சமஸ்கிருதம் 1


No comments:

Post a comment