25/09/2019

ஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2

இயேசு, அல்லா, சிவன், விஷ்ணு, சரஸ்வதி இவர்கள் எல்லாம் கடவுள்கள். இவர்களை அடையாளம் காட்டுவது இயலாத காரியம்.

கருத்தியல் அடிப்படையிலேயே  கடவுளை நிரூபிக்க முடியும். பொருளியல் அடிப்படையில் கடவுளை காட்ட முடியாது.

ஆனால் பேய் அப்படி அல்ல. எளிதாக பொருளியல் அடிப்படையில் பேயை நிரூபித்து விடலாம். நமது அன்றாட வாழ்வில் கடவுளின் பங்களிப்பு இருக்கிறதோ இல்லையோ பேயின் பங்களிப்பு அதிகமாகவே இருக்கிறது!

பைபிளின் பரிசுத்த ஆவி மற்றும் கெட்ட ஆவி(பிசாசு), என இரண்டு ஆவிகள் முக்கியமாக உள்ளன. இதனோடு பலகோடி தேவதூதர்கள், மனித ஆன்மாக்கள் இப்படி ஆவிகளுக்கு பஞ்சமே இல்லை. கடவுள் ஒருவர் தான். ஆனால் ஆவிகளோ பல கோடி!

அடுத்து குரானிலும் அதே கதை தான். கடவுள் ஒருவர், ஆன்மாக்கள் பலகோடி! ரிக் வேதம் உட்பட ஆரிய வேதங்களிலும் ஆவிகளுக்கு பஞ்சமில்லை!
ஆன்மாவுக்கும் ஆவிக்கும் உள்ள தொடர்பை முதலில் புரிந்து கொள்வோம்.

ஆன்மாவும் ஆவியும் வேறு வேறு அல்ல! இரண்டும் ஒன்றுதான். நல்லது என்றால் அது பரிசுத்த ஆவி!, கெட்டது என்றால் அது பாவி! பாவி என்றால் பாவம் செய்த ஆவி என்று அர்த்தம்!

இங்கே பாவம் என்பது என்ன என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே பரிசுத்த ஆவிக்கும் பாவிக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

கடவுளை வணங்காவிட்டால் பாவி! கடவுளை வணங்கினால் பரிசுத்த ஆவி! இவ்வளவு தான் வித்தியாசம்! பைபிள், குரான், கீதை உபநிடம் எல்லாம் இதை தான் சொல்கின்றன. இதை எந்த மததலைவரும் மறுப்பதில்லை. மறுக்கவும் முடியாது!

கடவுளை வணங்காத அனைத்து உயிரும் பாவி! கடவுளை வணங்கும் அனைத்து உயிரும் பரிசுத்த ஆவி(ஆன்மா). இதுதான் வேதங்களின் கோட்பாடு. 

மனிதன் முதல் புல், பூண்டு, புழு, பூச்சி வரை எல்லா உயிர்களையும் ஆவியாக தான் காட்சிபடுத்துகிறது வேதங்கள்.

மனிதன் கடவுளை வணங்குவதால் அவன் ஆன்மா என்ற பரிசுத்த ஆவியாகவும், கடவுளை வணங்காத மற்ற உயிர்கள் பாவியாகவும் உள்ளன! பாவம் என விலங்கு, தாவரங்களை குறிப்பிடுவதன் அர்த்தம் அது தான். 

மொத்தத்தில் ஆவிகளால் நிறைந்தது தான் வேத உலகம்! கடவுள் கூட ஆன்மா என்ற ஆவியாக தான் வேதங்களில் அடையாளம் காட்டப்படுகிறார்.

வேதங்கள், மதங்கள் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்., எதார்த்த உலகில் ஆவிகள் உள்ளனவா?

உயிர்கள் - மனிதன் - கடவுள் இந்த மூன்றையும் தான் ஆவி என வேதங்கள் குறிப்பிடுகின்றன. காரணம் இந்த மூன்றும் தான் பிறப்பு-வாழ்வு-இறப்பு என்ற செயல்களில் ஈடுபடுகின்றன. உயிரற்ற பொருட்கள் எந்த செயலையும் செய்வதில்லை.

உயிர்கள் பிறக்கின்றன, வாழ்கின்றன, இறக்கின்றன. ஒருமுறை பிறந்து இறந்த உயிர் மறுமுறை பிறக்கிறதா? அதாவது மறுபிறவி உண்டா? -இந்த ஒற்றை கேள்வியில் ஆவி உலகின் அத்தனை மர்ம முடிச்சுகளும் இறுகி கிடக்கின்றன.

பிறந்த பின் உயிர்கள் வாழ்கின்றன. ஆனால் இறந்த பின் என்ன ஆகின்றன? இறப்புக்கு பின் எதுவுமே இல்லை என்றால் ஆவிகளுக்கு வேலையே இல்லை. ஆனால் ஆவிகள் வேலை செய்கின்றன எனும் போது இறப்புக்கு பின் ஏதோ ஒன்று உள்ளது என்று தானே அர்த்தம்.

என்னது ஆவிகள் வேலை செய்கின்றனவா? ஆவி இருப்பதே கேள்விக்குறியாக உள்ளது. இதில் ஆவிகள் வேலை செய்கிறது என்ற கதை வேறா? இதெல்லாம் மூடநம்பிக்கை. பகுத்தறிவுக்கு ஏற்புடையது அல்ல. இப்படி எளிமையாக சொல்லிவிடலாம். ஆனால் இதெல்லாம் போராட்ட பதில்களே அல்லாமல் தீர்க்கமான பதில்கள் அல்ல!

கடவுள் இருக்கிறார் என்று வணங்குபவர்களை காட்டிலும், நமக்கேன் வம்பு என வணங்குபவர்கள் தான் அதிகம். ஒருவேளை கடவுள் இருந்து விட்டால்? இங்கே பக்தியில் வணங்குபவர்களை விட பயத்தில் வணங்குபவர்கள் தான் அதிகம். அங்கே தான் கடவுள் மறைந்து பேய் வெளிப்படுகிறது!

கடவுளே பேயாக அவதாரம் எடுக்க காரணமும் இது தான்! கடவுள் பேயாக உலாவும் அறிவியல் உண்மையை நிரூபிப்பது எளிது. அறிவியலால் கடவுளை காட்ட முடியாது. ஆனால் பேயை காட்ட முடியும்!

பேயாக உலவும் அந்த கருப்பு கடவுளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்

-செய்வினை தொடரும்...

முந்தைய பதிவுகளை படிக்க :

பேய், பிசாசு இருக்கிறது! - கருப்பு கடவுள் 1

No comments:

Post a comment