30/09/2019

இறப்பும் முக்தியும் - கருப்பு கடவுள் 3

கடவுளும், பேயும் இறப்பை மையப்படுத்தியே இருக்கின்றன. இறந்தால் பேயாகவும், முக்தி அடைந்தால் கடவுளாகவும் கருதப்படுகிறார்.

உயிர்கள் இறக்கின்றன என்பது உறுதி! ஆனால் முக்தி அடைகின்றனவா என்பது கேள்விக் குறியே.

இறப்புக்கும் முக்திக்கும் என்ன வேறுபாடு?

இறப்பு என்பது இயற்கையானது. முக்தி என்பது செயற்கையானது. உயிர்கள் தம் செயலுக்கு தகுந்தால் போல முக்தி அடைகின்றன என வேதங்கள் சொல்கின்றன.

முக்திக்கு பல விளக்கங்களை தருகின்றன வேதங்கள். உயிர் தொடர்ந்து பிறக்கிறது. உயிர் மறுபிறவி எடுக்காமல் பிறவா நிலையை அடைவதே முக்தி. இப்படித் தான் எல்லா சித்தாந்தங்களும் கூறுகின்றன.

புத்தம், சமணம் மற்றும் கிழக்கத்திய தத்துவங்கள் அனைத்தும் இதையே வலியுறுத்துகின்றன. இதற்கு அடிபடையாக ஊழ்வினை என்ற தலையாங்கத்தை புத்த, சமண சித்தாந்தங்கள் கொண்டுள்ளன.

கிறிஸ்துவ, இஸ்லாமிய, ஆரிய வேதாந்தங்கள் ஊழ்வினையில் இருந்து சற்று வேறு பட்டவை. கடவுளை வணங்குவதன் மூலம் ஊழ்வினையை சரிசெய்ய முடியும் என்ற கருத்தை போதிக்கின்றன. கடவுளை சரணடைவதன் மூலம் ஊழ்வினையில் இருந்து தப்பித்து முக்தி அடையலாம் என்பது மதங்களின் கோட்பாடு.

பிறப்பு, வாழ்வு, இறப்பு இம்மூன்றும் ஊழ்வினை பயன் என்பது புத்தம், சமணம், சித்தரியல் உட்பட தத்துவங்களின் கோட்பாடு. பிறப்பும் வாழ்வும்  இறப்பும் கடவுளின் கட்டளை என்பது மதங்களின் கோட்பாடு.

இங்கே 1.கடவுள் 2.ஊழ்வினை இந்த இரண்டையும் தவிர்த்து எல்லாம் இயற்கை!, இதில் கடவுள், ஊழ்வினை என எதற்கும் வேலை இல்லை எனும் அறிவியலாளர்களும் உள்ளனர்.

கடவுள் மற்றும் அறிவியல் பற்றி பல கோணங்களில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஊழ்வினை பற்றி ஆய்ந்தவர் வெகுசிலரே. ஊழ்வினையை பாவத்துடன் பொருத்தி பார்ப்பதால் அது மதத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த பார்வை தவறு!

பாவத்திற்கும் ஊழ்வினைக்கும் பெரிய வேறுபாடு உண்டு.

பாவம் என்பது மனிதன் சமூகத்திற்கு வகுத்துள்ள சட்டங்களை மீறுதல். உதாரணமாக பொய், திருட்டு, கொலை, கற்பழிப்பு இதெல்லாம் பாவங்கள்! 
ஊழ்வினை என்பது மனிதன் வகுத்த சட்டங்கள் அல்ல. அது இயற்கை எழுதிள்ள சட்டங்கள். பிறந்தால் இறந்தாக வேண்டும் என்பது ஊழ்வினை. உப்பை தின்றால் தண்ணீரை குடித்தாக வேண்டும் என்பது ஊழ்வினை. மாற்றவே முடியாதது, பரிகாரமே இல்லாதது, மன்னிப்பே கிடைக்காதது, நிகழ்ந்தே தீருவது இப்படிப்பட்டவைகள் தான் ஊழ்வினை!

பாவம் என்பது மதத்திற்கு மதம், மனிதனுக்கு மனிதன் வேறுபடும். உயிருக்கு உயிர் கூட பாவம் வேறுபடும். அது மாற்றக் கூடியது. ஆனால் ஊழ்வினை என்பது எல்லொருக்கும் பொதுவானது. மாற்ற முடியாதது.

ஊழ்வினை என்பது கடவுளையும் கட்டுப்படுத்துகிறது என்பதை புராணங்கள், வேதங்கள், வேதாந்தங்கள் எல்லாம் விளக்குகின்றன.

கடவுளில் இருந்து இந்த உலகம் தோன்றியது என்றால், கடவுளே கட்டுப்படும் ஊழ்வினை எப்போது வந்தது? கடவுளையே ஆட்டிப்படைக்கும் ஊழ்வினையை செய்தது யார்?

இங்கே தான் கருப்பு கடவுள் வெளிச்சத்துக்கு வருகிறது. கடவுளையே ஊழ்வினையை கொண்டு அடக்கியது கருப்பு கடவுள் கடவுளுக்கும் பிறப்பு இறப்பை உறுதி செய்து ஊழ்வினையாற்றியது கருப்பு கடவுள்!

அறிவியல் மட்டுமல்ல அண்ட சராசரமும் கூடவே கடவுளும் அடிபணியும் ஊழ்வினையின் மொத்த உருவகம் தான் கருப்பு கடவுள்!

கடவுளை விட ஊழ்வினை சக்தி வாய்ந்தது என்பதை சங்ககால மக்கள் அறிந்திருந்தனர். அதனால் தான் கடவுளை ஓரம்கட்டி ஊழ்வினைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 

ஊழ்வினையின் இறப்பை வெல்ல அவர்கள் தேடிய அடைக்கலம் தான் கருப்பு கடவுள். அந்த கருப்பு கடவுளின் செய்வினையாம் ஊழ்வினையை எதிர்த்து போர் தொடுத்தனர். அது அதிபயங்கர போராக இருந்தது. அண்ட சராசரத்தில் இருந்த அத்தனை உயிர்களையும் அச்சத்தின் முனையில் நிறுத்திய யுத்தம் அது.

ஊழ்வினைக்கு எதிராக நடந்த அதிபயங்கர செய்வினை யுத்தத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.      

- செய்வினை தொடரும்...

முந்தைய பதிவுகளை படிக்க :

பேய், பிசாசு இருக்கிறது! - கருப்பு கடவுள் 1


ஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2

No comments:

Post a comment