09/10/2019

விதி - கருப்பு கடவுள் 4

அனைத்து உயிர்களும் ஒரு விதிப்படி இயங்குகின்றன. உயிர்கள் மட்டுமல்ல உயிரற்றவையும் ஒரு விதிப்படித்தான் இயங்குகின்றன.

இந்த விதியை வகுத்தது யார்? விதியை மாற்ற முடியுமா? இப்படிப்பட்ட அடிப்படை கேள்வியில் இருந்தே கடவுள், பேய், வேதம், மதங்கள் என அனைத்து விளக்கங்களும் எழுகின்றன.

விதி என்றால் என்ன என்பதை முதலில் விளக்கிக்கொள்வோம்.

உயிர் மற்றும் உயிரற்ற பொருட்கள் இயற்பியல் விதிகளின் படி இயங்குகின்றன. ஈர்ப்பு விலக்கு என்ற இரண்டு அடிப்படைகள் இயற்பியல் விதிகளாகவும், தனிமம் சேர்மம் என்ற இரண்டு அடிப்படைகள் வேதியல் விதிகளாகவும் உள்ளன.

இது ஒன்றும் புரியாத புதிர் அல்ல. நம்மை சுற்றி உள்ள ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இரட்டை தன்மையில் தான் உள்ளது.

நேர் எதிர் அதே நேரத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரட்டைகள். இது தான் விதி!

ஆண்-பெண், உயிர்-உயிரற்றவை, மேல்-கீழ், இடது-வலது, முன்-பின், கருப்பு-வெள்ளை, ஈர்ப்பு-விலக்கு, தனிமம்-சேர்மம், பொருள்-வெளி என அனைத்தும் இரட்டை நிலைகளிலேயே உள்ளன. இந்த இரட்டை நிலைகள் நேர் எதிரானவை. அதேநேரத்தில் ஒன்றுக்கொண்று தொடர்புடையவை.

பேய்-கடவுள் என்பவை கூட நேர் எதிர் அதே நேரத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகள் தான்.

ஈர்ப்பு-விலக்கு என்ற இரட்டை நிலைகளில் நிகழும் மாற்றங்களே அனைத்து இயற்பியல் விதிகளாக பகுக்கப்படுகிறது. அதேபோல தனிமம்-சேர்மம் என்ற இரட்டை நிலைகளின் மாற்றங்களால் வேதியல் விதிகள் பகுக்கப்படுகிறது.

இயற்பியல், வேதியல் விதிகள் குறித்து வேறு ஒரு கட்டுரையில் பார்க்கலாம். தற்போது கருப்பு கடவுளுடன் தொடர்புடைய உயிரியல் விதிகளை பற்றி மட்டும் பார்ப்போம்.

இயற்பியல் விதியின் படியே பிரபஞ்சத்தின் அனைத்தும் இயங்குகிறது., இயங்க வேண்டும். ஆனால் அதில் எங்கோ சிறு பிழை நிகழ்கிறது. அந்த சிறு பிழையே பெரும் பிழையாக வடிவெடுக்கிறது. அந்த பெரும் பிழையே உயிரியல் விதிகளை எழுதிக்கொண்டு இருக்கிறது!

மாறவே மாறாதது, மாற்றவே முடியாதது என்பதே இயற்பியல் விதிகள். ஆனால் இதில் மாற்றத்தை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது உயிரியல் விதிகள்!

இயற்பியில் விதிகள் எப்படி வந்தது? இந்த கேள்வி மிகக் கடினமான பதிலை கொண்டது. இப்போதைக்கு அந்த கடினத்திற்குள் செல்ல வேண்டாம். அதே நேரத்தில் இயற்பியல் விதிகள் இயல்பாகவே(இயற்கையாகவே) வந்தது என்ற எளிமையான பதிலை மனதுள் வையுங்கள்.

வேதியல், உயிரியல் விதிகளுக்கு அடிப்படை இயற்பியல் விதிகள். இயற்பியில் விதிப்படியே வேதியல், உயிரியல் விதிகள் இயங்குகின்றன. இயற்பியல் விதிகள் என்பது அன்றும் இன்றும் என்றும் மாறாதவை, மாற்றவே முடியாதவை, ஆனால் இதில் மாற்றம் நிகழ்கிறது. அது எப்படி என்பது தான் இன்று வரை புரியாத புதிராக உள்ளது. அந்த புதிருக்கான பல்வேறு தோராய விடைகள் தான் கடவுள், பேய், இயற்கை என்பது எல்லாம்.


இயற்பியில் விதிகளில் எங்கே மாற்றம் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? இன்று வரை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. நமது கண்டுபடிப்புகள் எல்லாம் இயற்பியல் விதிப்படியே உள்ளன. இயற்பியல் விதியை மாற்ற இன்று வரை மனிதனால் முடியவில்லை. ஆனால் இயற்பியல் விதியில் மற்றம் நிகழ்ந்திருக்கிறது. அந்த மாற்றம் உயிரியல் என்ற புதிய விதியை வகுத்திருக்கிறது.

உயிரியல் விதிகள் இயற்பியல் விதிகளை மீறுவதில்லை. ஆனால் எங்கோ, எப்படியோ ஒரு மீறல் இன்றும் நிகழ்ந்து கொண்டு இருகிறது. அந்த விதிமீறலை நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் நமக்கு கிடைத்தவைகளே கடவுளும்-பேயும். 

இயற்பியல் விதிகளை மீறி எப்படி வேதியில் விதிகள் வந்தன. வேதியல் விதிகளை மீறி எப்படி உயிரியல் விதிகள் வந்தன. உயிரியல் விதிகளில் இன்றும் இயல்பியல் விதிகளை மாற்றும் விதி எது? அந்த விதியை கண்டுபிடித்துவிட்டால் கடவுளையும், பேயையும் கண்டுபிடித்து விடலாம்.

இயற்பியல் விதிகளை மீறுவது ஊழ்வினையா? ஊழ்வினையின் எதிர்வினைகள் தான் கடவுளும் பேயுமா?  - அடுத்த இறுதி பகுதியில் ஒரு தீர்க்கமான பதிலுடன் நிறைவு செய்வோம்.

- செய்வினை தொடரும்...

முந்தைய பதிவுகளை படிக்க :

பேய், பிசாசு இருக்கிறது! - கருப்பு கடவுள் 1

ஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2

இறப்பும் முக்தியும் - கருப்பு கடவுள் 3

No comments:

Post a comment