20/10/2019

செய்வினை(கருமம்) - கருப்பு கடவுள் 5

கடவுள், ஆன்மா, பேய் இந்த மூன்று விடயங்களும் செய்வினையை மையப்படுத்தியே இருக்கின்றன. செய்வினையே அனைத்திற்கும் காரணம் என மதங்களும் வேதங்களும் சொல்கின்றன.

கர்மா என ஆரிய வேதங்களும், பாவபுண்ணியம் என கிறிஸ்து/இஸ்லாமிய வேதங்களும் சொல்லும் அதே சொல்லையே செய்வினை என தமிழர்கள் குறிப்பிடுகின்றனர்.

கர்மா என்றால் செயல் என்று அர்த்தம். கருமம் என்ற தமிழ் சொல்லின் திரிபே கர்மா. நாம் செய்யும் செயலே கர்மா. கெட்ட செயல்களை கருமம் என கிராமத்தில் முதியவர்கள் சொல்வதை இன்றும் கேட்கலாம். 

கருமம், கருமாதி, கருப்பு கழித்தல் என்ற அர்த்தத்தில் வருவது தான் கர்மா. செயல், கருமம், கர்மா, செய்வினை என்ற நான்கு சொல்லும் ஒரே அர்த்தத்தை தான் குறிக்கின்றன.

மதம் மற்றும் அரசியல் சட்டத்தை போல இயற்கை பல சட்டங்களை வகுத்து வைத்துள்ளது. இயற்கையின் சட்டங்களில் நல்லது கெட்டது இல்லை. அங்கே இருப்பது எல்லாம் விதி மற்றும் விதிமீறல் மட்டுமே.

இயற்கையின் விதிப்படி செயல்படும் போது அங்கே எதுவும் நிகழ்வது இல்லை. அது ஒரு முறை சுற்றி விட்ட சக்கரம் போல சுழன்றுகொண்டே இருக்கும். சுழலும் ஒரு சக்கரம், யாரும் பிடித்து நிறுத்தாத வரை சுழன்று கொண்டே இருக்கும். அதே போல தான் இயற்கை விதிகள். அவை எந்த மாற்றத்தையும் செய்வது இல்லை. அது எப்போதும் ஒரே போலவே இருக்கிறது.

இயற்கை விதியில் மாற்றம் நிகழ்வது இல்லை. ஆனால் மாற்றம் நிகழ்த்தபடுகிறது. மாற்றம் நிகழ்ந்ததால் தான் நான், நீங்கள் வீடு, கணிணி, செல்போன், இணையம் என இத்தனையும் இருக்கிறது. 


சரி இந்த மாற்றத்தை நிகழ்த்தியது யார்? அல்லது எது?

கர்மா என்கிறது மதங்கள், கருமம் என்கின்றனர் பழந்தமிழர். கருமம் என்றால் செயல் என்று அர்த்தம் என முன்பே பார்த்தோம்.

செயல் எங்கிருந்து துவங்குறது? இன்றுவரை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் செயலினால் ஏற்படும் வினையை நம்மால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. இந்த செயலை செய்தால் இந்த வினை வரும் என்பதை நம்மால் எளிமையாக கண்டுபிடித்து விட முடியும்.

செயலை மட்டும் தனித்து ஆராய்ச்சி செய்தால் நம்மால் எதையும் கண்டறிய முடியாது. செயலுடன் அதன் வினையையும் சேர்த்து ஆய்வு செய்தால் விடைகள் கிடைக்கின்றன. செயல்+வினை=செய்வினை. இந்த செய்வினை தான் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிறது.

இந்த செயலை செய்தால் இந்த விளைவு(வினை) வரும். இந்த விளைவுக்கு இந்த செயல்தான் காரணம். இந்த எளிமையான கோட்பாடே சங்கால வாழ்வியல் தத்துவம். இதுவே இன்றைய நவீன அறிவியலிலும் கோட்பாடாக உள்ளது.


பிரபஞ்சத்தை கடவுள் படைத்தாரா? கடவுள் இருக்கிறாரா என்பது எல்லாம் விடைதெரிய விடயங்கள். ஆனால் இந்த செயலை செய்தால் இப்படி ஒரு பிரபஞ்சத்தை உண்டாக்கி விட முடியும் என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது.

சரி இறுதியாக பேய் விடயத்துக்கு வருவோம்.

நல்லதை மட்டும் செய்பவர் கடவுள். நல்லதையும் கெட்டதையும் செய்வது பேய். நல்லது என இதுவரை எதுவும் நிர்ணயிக்கப்பட வில்லை. இன்று நல்லதாக இருப்பது நாளை கெட்டதாகலாம். எனவே நல்லது மட்டும் என்பது சாத்தியம் அற்றது. அதனாலேயே பழந்தமிழர் கடவுளை ஓரம் கட்டிவிட்டனர்.

நல்லதை மட்டும் செய்யும் கடவுளை செய்வினையால் உருவாக்க முடியாது. அதே நேரத்தில் நல்லது/கெட்டது என எதையும் செய்யும் கடவுளை செய்வினையால் உருவாக்க முடியும். அதை தான் செய்தனர் தமிழர்கள்.

பழந்தமிழர்களின் செய்வினை தான் கருப்பு கடவுள். இந்த கருப்பு கடவுள் பெரும்பாலும் பயமுறுத்தல் பணியையே செய்தது. அந்த பயமே மனிதர்களை உண்மையாய் வாழ வழிவகுத்தது. கருப்பு கடவுளால் பயமுறுத்துவதை தவிர வேறு ஒன்றும் செய்துவிட முடியாது. ஆனால் பயம் எல்லாவற்றையும் சாதித்து விடும்.

ரேபிஸ் வைரஸ் தொற்றிய விலங்குகளின் எச்சிலை கொண்டு மனித உடல்பாகங்களை செயல் இழக்க செய்ய முடியும். நச்சு தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் மையை கொண்டு புத்தி பேதலிக்க செய்ய முடியும். இத்தகு செயலை செய்வினை என பொதுவாக கருதுகிறோம். பேயும் அப்படித்தான்.

பயம் அல்லது குறிப்பிட்ட சூழலால் மூளை காய்ச்சலால் ஏற்படுகிறது. இந்த நிலையில் மனம் கனவுபோல தள்ளாடுகிறது. தொடர்பற்ற எண்ணங்களின் வெளிப்படுத்தும் மனிதர் பேய் பிடித்தவராக அறியப்படுகிறார்.

மூளை காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியே பேய் என அறிவியல் ரீதியில் சொல்லலாம். வைரசை விரட்ட ஒரே வழி சூழல் மாற்றம் மட்டுமே! அந்த சூழல் மாற்றமே தற்போது பேய்கள் குறைய காரணம். பேய்கள் குறைந்திருக்கிறதே தவிர இல்லாமல் இல்லை.

முற்றும்.

முந்தைய பதிவுகளை படிக்க :

பேய், பிசாசு இருக்கிறது! - கருப்பு கடவுள் 1

ஆவிகள் உலகம் - கருப்பு கடவுள் 2

இறப்பும் முக்தியும் - கருப்பு கடவுள் 3

விதி - கருப்பு கடவுள் 4

No comments:

Post a comment