04/11/2019

இடைவெளி - விண்வெளியியல் 1

வானம்! ஏராளமான ஆச்சரியங்களுடன் காட்சி தரும் மிகப்பெரிய உலகம். அப்படி வானத்தில் என்ன தான் இருக்கிறது?

வானத்தில் சொர்க்கம் உள்ளதா? பூமியைத் தாண்டி இன்னொரு உலகம் இருக்கிறதா? உண்மையில் பூமியை போன்று நிலவிலும் நிலம் இருக்கிறதா? சூரியன் எரிந்து கொண்டிருக்கிறதா? - ஏராளமான கேள்விகள். எல்லாவற்றிற்கும் கோட்பாடு ஒன்றே பதில்.

வானத்தில் எதை விளக்கினாலும் கோட்பாடு ரீதியாகவே விளக்க முடியும். நமது இயல்பியல் விதிகளின் படி வானில் இருந்து எந்தத் தரவையும் பெற முடியாது.

 (விதிகள் என்றால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். கோட்பாடு என்றால் நிரூபிக்கப்பட்ட யூகங்கள். உண்மைகள் என்றும் மாறாது. யூகங்கள் மாறலாம்.)

ஒலி, ஒளி இதை கடந்து எந்த உணர்வையும் வானத்தில் இருந்து பெற முடியாது. வானத்தை ருசிக்க முடியாது. வானத்தை நுகர முடியாது. வானத்தை தொட முடியாது. 

ஒளியை பார்க்கலாம். ஒலியை கேட்கலாம். நம்மை பொருத்தவரை ஒளியும் ஒலியும் சேர்ந்தது தான் வானம்.

வானம் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது, சூரியன், நிலா, நட்சத்திரங்கள், மேகம், மழை, இடி, மின்னல் இவ்வளவு தான். இந்த 7 ஐ தவிர வேறு ஒன்று வானத்தில் இல்லை. இந்த 7 ஐ தவிர வேறு எதையும் நம் கண்ணால் பார்க்கவோ, காதால் கேட்கவோ முடியாது.

தொலைநோக்கி உதவியுடன் பார்த்தால் ஏராளமான விண்கற்கள், கிரகங்கள் இருப்பதை ஓரளவு யூகிக்க முடியும். ஆனால் அது யூகமே தவிர உண்மை என உறுதியாக சொல்ல முடியாது.


நாம் நேரடியாக பார்க்கும் சூரியன், நிலா, நட்சத்திரங்கள், மேகம், மழை, இடி, மின்னல் இவைகள் தான் வானமா என்றால், இல்லை!, இன்னும் ஒன்றை சேர்த்துக்கொள்ளுங்கள் என்பதே பதில்!

அது என்ன இன்னொன்று? எளிமையான பதில் தான்., ‘‘இடைவெளி’’ தான் அந்த இன்னொன்று!

வானம் நிரம்ப இருப்பது இந்த இடைவெளி தான். வானத்தில் 99.99 சதவீதம் இடைவெளியே. அதனால் தான் வானியலை விண்வெளியியல் என குறிப்பிடுகிறோம். 

இடைவெளியை பார்க்கவோ, கேட்கவோ, நுகரவோ, சுவைக்கவோ, தொட்டு உணரவோ முடியாது. நமது இயல்பறிவால் உணரவே முடியாத ஒன்று தான் இடைவெளி!

இடைவெளி என்பது நமது உணர்வுக்கு அப்பாற்பட்டது. நமது அறிவின் அளவிற்கு உட்பட்டது. நமது அறிவு தான் இடைவெளியை தீர்மானிக்கிறதே அல்லாமல் இடைவெளி என்ற ஒன்று இருப்பதை கோட்பாடு ரீதியாகக் கூட விளக்க முடியாது!

இரண்டு இடங்களுக்கு இடைப்பட்ட வெளி = இடைவெளி. - இது தான் இடைவெளிக்கான சூத்திரம்.

ஏன் இந்த இடைவெளி?

இயற்பியல் விதிகளால் மட்டுமல்ல, கோட்பாடுகளால் கூட பதில் சொல்ல முடியாது!

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் ஏன் இந்த இடைவெளி? இந்த கேள்விக்கு கோட்பாடுகள் பதில் தருகின்றன. ஆனால் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் இன்னும் பிறக்கவே இல்லை.

புவி ஈர்ப்பு விசையால் பூமியை நோக்கி எல்லா பொருட்களும் விழுகின்றன. புவி ஈர்ப்பு விசையின் எல்லைக்கு அப்பால் உள்ள பொருட்கள் பூமியில் விழுவது இல்லை என நிரூபித்தார் சர் ஐசக் நியூட்டன்.

நியூட்டன் தான் இன்று வரை இயல்பியல் உலகின் அரசன். நியூட்டனின் விதிகளே இன்று வரை அறிவியலாக உள்ளது. பூமியில் நியூட்டனின் விதிகள் தான் கடவுள். ஆனால் விண்வெளியில் நியூட்டன் விதிகள் செல்லாக் காசு!

விண்வெளியில் நியூட்டன் விதிகள் செயல்படாமல் போவதன் காரணம் என்ன? இந்த கேள்விக்கு ஐன்ஸ்டீனை போல குழம்பி, குழப்பி, கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து வராத ஒரு விடையை கோட்பாடு அளவில் வரவைத்துக் கொள்ள வேண்டியது இல்லை.

எளிமையான பதில் ‘‘ நியூட்டன் விதிகள் இடத்திற்கானது., வெளியில் நியூட்டன் விதிகள் பொருந்தாது.’’ இடமும் வெளியும் சேர்ந்தது தான் இடைவெளி. இடைவெளியில் இடத்திற்கான ஒற்றை விதிகள் மட்டும்  செயல்படாது! இடம் + வெளிக்கான விதிகள் படியே இடைவெளி செயல்படும். - இதையே காலநேரம் என சுற்றி வளைத்து ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு சொல்கிறது.

அது என்ன நியூட்டனின் விதிகள்? இடம் என்றால் என்ன? வெளி உலகம் என ஒன்று உள்ளதா? அதை எப்படி புரிந்து கொள்வது? சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள், நிலா இவை ஏன் இடைவெளியில் இருக்கின்றன? சூரிய குடும்பம், பால்வெளி மண்டலம், பிரபஞ்சம் இதெல்லாம் உண்மையா? சார்பியல் கோட்பாடு சரியானதா? -  புதிரான இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடைதேடிச் செல்வது ஒரு சுவாரசியப் பயணமாக அமையும்.

5 குறுங் கட்டுரைகள் வழி விண்வெளியை சுற்றி காட்ட முயற்சிக்கிறேன்.

நியூட்டன் விதிகள், ஐன்ஸ்டின் கோட்பாடுகள் இவற்றை தவிர்த்து விட்டு, நாம் ஒளி, ஒலியை கொண்டு விண்வெளியை புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஏனென்றால் இந்த இரண்டும் தான் நமக்கு வானத்தை நேரடியாக காட்டுகின்றன.

நமது இயல்பு அறிவால் ஒளி, ஒலியாக மட்டுமே வானத்தை புரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட புரிதலே உண்மையான அறிவியலாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஒளி இது தான் உண்மையான வானம். நாம் வானத்தில் பார்ப்பது எல்லாம் ஒளி தான். இடியாக ஒலியையும், மழையாக ருசியையும், பனியாக உணர்வையும், காற்றாக நுகர்வையும் பெறுகிறோம். என்றாலும் மழையை தவிர்த்து விட்டு சூரியன், நிலா, நட்சத்திரங்கள் என மற்ற எல்லாவற்றையும் ஒளியாகத் தான் உணர்கிறோம்.

ஒளி என்றால் என்ன? ஒளி எங்கு இருக்கிறது? ஒளியில் என்ன தான் இருக்கிறது? கண்களை மூடிவிட்டால் ஒளியின் கதையும் முடிந்ததா?

ஒளியை படிக்காமல் விண்வெளியை எட்டி கூட பார்க்க முடியாது. ஆனால் ஒளியை மட்டும் தெரிந்து கொண்டால் போதும், ஒட்டுமொத்த விண்வெளியையும் கரைத்து குடித்துவிடலாம்.

- இடைவெளி தொடரும்...

No comments:

Post a comment