20/11/2019

அடிப்படை வேதியியல் 1

வேதிபொருள், இரசாயனம், கெமிக்கல் என்றால் பலருக்கும் அலர்ஜி. சமீப காலமாக இயற்கை விவசாயம், இயற்கை பொருட்கள், இயற்கை உணவுகள் என்பது பிரபலமாகி வருகிறது.

உண்மையில் நமது உடலுக்கு தேவையான தூய்மையான உணவு வேதிப்பொருட்கள் தான். நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் வேதிப்பொருட்களாக மாற்றப்பட்டே இரத்தத்திற்குள் செல்கிறது. 

இயற்கை இயற்கை என நாம் பெருமைப்பட்டு வாங்கி உண்ணும் இயற்கை பொருட்களில் உள்ள வேதி பொருட்களை மட்டுமே உடல் உணவாக எடுத்துக் கொள்கிறது. மற்ற இயற்கை பொருட்களை எல்லாம் மலமாக வெளியே தள்ளி விடுகிறது.

நமது உடலுக்கு தேவையான உணவு என்பது கார்பன், ஹைட்ரஜன், என்ற இரண்டு வேதிப்பொருட்கள் தான். உடலில் ஆற்றல் ஒருங்கே செயல்பட ஆக்சிஜன் தேவை. உடலின் நோய்த்தொற்று, சூழல் மேலாண்மையை எதிர்கொள்ள மருந்தாக நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பர், மாக்னீஷ், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, வெள்ளி, சோடியம், அயோடின், குளோரின் ஆகிய வேதி பொருட்கள் தேவை. அவ்வளவே. இதைத் தவிர வேறு எந்த உணவும் நமது உடலுக்கு தேவை இல்லை. அப்படியே நீங்கள் கொடுத்தாலும் கழிவாகத் தான் வெளியே வரும்.

இந்த 14 வேதிப்பொருட்கள் தான் தேவை என்றால் நாம் ஏன் உணவுக்காக இவ்வளவு கடினப்பட வேண்டும். விவசாயமே தேவை இல்லையே, வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை போதுமே என உங்களுக்குள் ஐயம் வருவது நியாயமே.

நமது இயல்பு உலகிற்கும் வேதியல் உலகிற்கும் நெறுங்கிய வேறுபாடு உள்ளது. அதை புரிந்து கொண்டால் விவசாயமா? தொழிற்சாலையா என்ற உங்கள் குழப்பம் தீரும்.

வேதியல் என்பது தனிம நிலையில் பொருட்களை அறிந்து கொள்ளும் துறை. அது என்ன தனிம நிலை?

பொருட்கள் எல்லாம் மூலக்கூறால் ஆனது. மூலக்கூறுகள் தனிமங்களால் ஆனது. தனிமங்கள் அணுக்களால் ஆனது என்பதை ஏற்கனவே படித்திருக்கிறோம்.

உதாரணமாக ஒரு வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வோம். வாழைப்பழம் என்பது நாம் இயல்பாக அறிந்து கொள்ளும் ஒரு பொருள். வாழைப்பழத்தின் மூலப்பொருட்கள் என்ன என பார்க்க வாழைப்பழத்தை பிரித்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி பார்க்கிறோம். இப்படி வெட்டி வெட்டி நம் இயல்பான கண்ணால் பார்க்க கூடிய மீச்சிறு அளவுக்கு வெட்டி விட்டோம். 0.05 மில்லிமீட்டர். இதற்கு மேலும் வெட்ட முடியாது. ஏனென்றால் இந்த அளவிலேயே வாழைப்பழம் ஒரு தூசு அளவை விட சிறிதாக இருக்கிறது.
சரி நம் இயல்பான கண்ணால் தான் பார்க்க முடியாது. நுண்ணோக்கி உதவியுடன் பார்ப்போம். நுண்ணோக்கி வழி பார்க்கும் போது தூசை விட சிறிய துண்டு நூறு மடங்கு பெரிதாகத் தெரிகிறது. இப்போது மேலும் அதை நூறு பிரிவாக வெட்டி சிறிதாக்குகிறோம். இதற்கு மேலும் சிறிதாக்க முடியாது என்ற நிலை வருகிறது. நாம் விட்டபாடில்லை. நவீன நுண்ணோக்கியான எலக்ட்ரான் நுண்ணோக்கியை வைத்து மேலும் சிறிதாக வெட்டுகிறோம். அப்போது இன்னும் 100 மடங்கு சிறிய துண்டுகளாக வெட்ட முடிகிறது. ஒரு கட்டத்தில் வெட்ட முடியாத இறுதி நிலை ஏற்படுகிறது.

இப்போது வெட்டிய துண்டுகளை எல்லாம் நாம் பரிசோதிக்கிறோம். எல்லா துண்டுகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இப்படி ஒரே மாதிரியாக இருக்கும் துண்டுகளுக்கு எல்லாம் ஒரு பெயர் இடுகிறோம். அதற்கு பேர்  தான் தனிமம்.

வாழைப்பழத்தை வெட்டியதைப் போல உலகில் உள்ள எல்லா பொருட்களையும் வெட்டி மீச்சிறு துண்டாக்குகிறோம். கல், இரும்பு, பிளாஸ்டிக், இலை, மரம், மனிதன், பறவை, கம்யூட்டர், தண்ணீர், கற்றில் உள்ள தூசுகள் என உலகில் உள்ள எல்லா பொருட்களையும் மீச்சிறு அளவாக வெட்டி துண்டாக்குகிறோம். இப்படி துண்டாக்கும் போது நமக்கு 94 வகையான பொருட்கள் கிடைக்கிறது. உலகில் உள்ள கோடான கோடி பொருட்களை வெட்டி துண்டாக்கினாலும் நமக்கு இறுதியாக கிடைப்பது இந்த 94 வகை பொருட்கள் தான். எந்த பொருளை பிரித்துப் பிரித்து மீச்சிறு நிலைக்கு சென்றாலும் இறுதியாக இந்த 94 வகையுள் அடங்கி விடுகிறது.

இப்படி பொருட்களின் இறுதி தனித்தனி நிலையான 94 வகையைத் தான் நாம் 94 தனிமங்கள் என அழைக்கிறோம். இயற்கையாக 94 தனிமங்களை அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.

பள்ளி பாடபுத்தகத்தில் காணும் தனிம அட்டவணை என்பது இந்த 94 தனிமங்கள் தான். இயற்கையாக இருப்பது 94. இயற்கையில் இருந்து செயற்கையாக 24 தனிமங்களை ஆய்வகத்தில் அறிவியலாளர்கள் தயாரிக்கின்றனர். 94+24=118 தனிமங்களை தனிம அட்டவணையில் படித்திருப்பீர்கள்.

94 வகை தனிமத்திற்கும் 94 பெயர்கள் வைத்துள்ளோம். அந்த பெயர்கள் தான் கார்பன், ஹைட்ரன், ஆக்சிஜன், இரும்பு, வெள்ளி, தங்கம், நிக்கல் என்பது எல்லாம்.

தனிமங்கள் என்றால் என்ன என புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இறுதியாக சுருக்கமாக ஒருமுறை.

நாம் காணும் அனைத்து பொருட்களும் பல மூலப்பொருட்கள் சேர்ந்த கலவை. இந்த கலவையால் உலகில் பலகோடி பொருட்கள் உள்ளன. ஆனால் உண்மையில் தனித்தனி நிலையில் பொருட்கள் 94 தான் உள்ளன. இந்த 94 பொருட்கள் தான் பல்வேறு சேர்மங்களாக, கலவைகளாக பலகோடி பொருட்களாக மாறி உள்ளன. தனித்தனி நிலையில் உள்ள 94 மூலப்பொருட்களை தான் நாம் மூலக்கூறுகள் என்றும் தனிமங்கள் என்றும் அழைக்கிறோம்.

சரி இந்த 94 பொருட்களுக்குள் என்ன இருக்கிறது?
தனிமங்கள் எப்படி மூலக்கூறுகளாக மாறுகின்றன?
மூலக்கூறுகள் எப்படி பொருட்களாக மாறுகின்றன?

அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தொடரும்.

No comments:

Post a comment