25/12/2019

இந்து என்றால் என்ன - இந்து மதம் 1

இந்து மதம் எங்கே தோன்றியது? இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார்? இந்து மதத்தின் வேதங்கள் என்ன? இந்து மதத்தின் கோட்பாடுகளும், வழிபாடு முறைகளும் என்னென்ன?

- இன்று வரை கலங்கிய குட்டையாக இருக்கும் இந்து மதத்தின் ஒருதுளி தெளிந்த நீரையாவது பிரித்து எடுக்கும் முயற்சி தான் இக் கட்டுரைத் தொடர்.

முதலில் இந்து என்ற பெயரியல் ஆய்வில் இருந்து துவங்குவோம்.

‘‘இந்து என்றால் திருடன் என்று பொருள்’’ - முத்தமிழ் அறிஞர் கலைஞர் கூறிய பிரபலமான விளக்கம் இது. உண்மையில் பாரசீக மொழியில் இந்து என்பதன் அர்த்தம் இது தான்.  - இந்த விவாதத்தில் இருந்து விலகி திராவிட மொழிகலான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் இந்து என்பதன் அர்த்தத்தை தேடுவோம்.

தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் இந்து என்றால் நிலா என்று பொருள். பௌர்ணமியை முழுமதி என்றும், அமாவாசையை இந்துமதி என்றும் பழந்தமிழர் அழைத்தனர். சமஸ்கிருத ஜோதிட சூத்திரங்களில் அமாவாசை கடந்த மூன்றாம் பிறைக்கு இந்துமதி என்ற பெயர் வருகிறது. இருளை விலக்கும் நிலவை இந்துமதி என ஜோதிட நூற்கள் குறிப்பிடுகின்றன.

சிந்து, ஹிந்து, என்ற சொற்களில் இருந்து இந்து என்ற சொல் வேறுபட்டது. சிந்து என்பது சிந்து நதியையும், ஹிந்து என்பது ஹிந்துஸ்த்தான் நிலப்பரப்பையும் குறிப்பிட பயன்பட சொல். இந்து என்பது நிலவை குறிப்பிட பயன்பட்ட சொல்.

18ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் மதரீதியாக நாடுகள் பிரிந்து நின்றன. இந்த காலகட்டத்தில் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் வைக்கப்பட்ட பெயர் தான் ஹிந்து மதம்.

இந்தியாவில் இஸ்லாம், கிறிஸ்துவம் அல்லாத மற்றவர்களை ஹிந்துக்கள் என அடையாளப்படுத்தினர் ஆங்கிலேயர்கள். ஹிந்து என்ற ஆங்கில சொல்லிற்கு இந்து என தமிழில் மொழிமாற்றம் செய்தனர். இதனால் இந்து மதம் என்ற சொல் பிறந்தது.

உண்மையில் இந்து மதம் என்றால் கிறிஸ்துவம், இஸ்லாமியம் அல்லாத மதம் என்பது தான் அர்த்தம். அதை தாண்டி இந்து மதம் என்ற பெயரில் வேறு அர்த்தம் இல்லை.

சரி இனி இந்து மதத்திற்குள் செல்வோம்.

கிறிஸ்துவம், இஸ்லாமியம் அல்லாத மதம் என்றால் என்ன?

கிறிஸ்துவமும், இஸ்லாமியமும் ஒற்றை கடவுள் கொள்கையை போதிக்கின்றன. ஆனால் இந்தியாவில் பலதர கடவுள் கொள்கை பின்பற்றபடுகிறது. இந்தியாவில் வழிபடும் கடவுள்களை கணக்கிட்டால் இந்திய மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நபரும் குறைந்தது 12க்கும் மேற்பட்ட கடவுள்களை வழிபடுகின்றனர். நேரத்துக்கு நேரம், நிமிடத்திற்கு நிமிடம் கடவுளை மாற்றி வழிபடும் முறை இந்தியாவில் இருக்கிறது.

ஒரு கடவுளிடம் திருப்தி கிடைக்கவில்லை என்றால் அடுத்த நொடியே அந்த கடவுளை மாற்றி வேறு கடவுளிடம் சரணடையும் வழக்கம் இந்திய மக்களிடம் இருக்கிறது. கடவுளை எதிர்த்து சாபம் இடும் துணிச்சல் இந்திய மக்களிடம் இருக்கிறது. இந்த துணிச்சல் ஒரு கிறிஸ்துவரிடமோ, இஸ்லாமியரிடமோ இல்லை.

கடவுள் தான் எல்லாம். கடவுளை மீறிய ஒரு மனித உறவு எங்களிடம் இல்லை என்பது கிறிஸ்துவம், இஸ்லாமியம் போதிக்கும் கொள்கை. ஆனால் இந்திய மக்கள் அப்படி அல்ல. கடவுள் மூன்றாம் நபராக தான் நிற்கிறார். வாசற்படிக்கு வெளியே நிற்கும் கடவுள்கள் தான் இங்கு ஏராளம்.

கடவுளை மூன்றாம் பட்சமாக கருதும் மக்களை இந்துமதம் என்ற வட்டத்திற்கும் கொண்டுவந்தனர் ஆங்கிலேயர்கள். மனிதனை விட கடவுள் பெரிதானவர் அல்லர் இது தான் இந்துமத கொள்கை. கிறிஸ்துவம், இஸ்லாமியத்தில் கடவுளே உயர்ந்தவர். இந்து மதத்தில் மனிதனே உயர்ந்தவர். இவ்வளவு தான் வேறுபாடு.

இந்துமதம் என்ற பெயர் தோன்றி 200 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் இந்துமதத்தில் பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளின் தோற்ற காலம் கணக்கிட முடியாதது. ஏனென்றால் ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்து முக்கோடி கடவுள்களை கொண்ட வழிபாட்டு முறை இது.


இன்று இந்துமத கடவுள்களாக உச்சத்தில் இருக்கும் சிவன், விஷ்ணு, ராமர், கணபதி, முருகன், துர்க்கை, சரஸ்வதி, என்ற கடவுள்கள் எல்லாம் காலத்தால் மிகவும் பிற்பட்டவர்கள்.

இன்றைய இந்துமத வழிபாட்டு நெறிகளும் காலத்தால் பிற்பட்டவைகளே. இந்துமத வழிபாட்டு நெறிகள் வேறு, முறைகள் வேறு! நெறிகளுக்கும் முறைகளுக்கும் எதிர்எதிர் வேறுபாடுகள் உண்டு!

இந்து மதத்தை ஓரளவாவது புரிந்துகொள்ள இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்க வேண்டும். கன்னியாகுமரி முதல் கைலாசம் வரை ஒவ்வொரு குக்கிராமங்களிலும் குறைந்து 3 நாட்களாகவது தங்கி ஆராய வேண்டும். ஒவ்வொரு சதுர கிலோமீட்டரிலும் வெவ்வேறு வழிபாட்டுமுறையை பின்பற்றும் புதிருக்கும் புதிரான புதிர் தான் இந்து மதம்.

ஆங்கிலேயர்கள் இந்திய முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை இந்துமதத்தின் வேரும், வேதமும், நிறுவனரும்.

எதை இந்து மதம் என்பது? யாரை இந்துமதத்தின் கடவுள் என்பது? இந்துமதத்தின் குருக்கள் என யாரை அங்கீகரிப்பது? - விடை கிடைக்காத ஆங்கிலேயர்கள், கிறிஸ்துவம், இஸ்லாமியம் அல்லாதவர்கள் இந்துக்கள் என்ற ஒற்றை முத்திரையில் ஒதுக்கி தள்ளினர். அந்த ஒதுக்கம் தான் இன்று இந்துமதம் என்ற ஆலமரகூட்டமாக காட்சி அளிக்கிறது.

ஆங்கிலேயர் தோற்றுவித்த இந்து மதத்தின் முன்னோடி சனாதன மதம். இந்துமதத்தின் அதே நோக்கம் தான் சனாதன மதத்தின் நோக்கமும்.,

இந்திய ஒற்றுமைக்கு வித்திட்ட சனாதன மதம் குறித்து அடுத்த பதிவில்..

தொடரும்...

07/12/2019

ஆரிய மதம் - ஆபிரகாமின் மதங்கள் 5

கானான் தேசத்தை தேடி புறப்பட்ட ஆபிரகாம் மக்களில் ஒரு பிரிவினர் கடவுளை நந்தி சிலையாக வணங்கினர். நந்தி சிலை முன்பு பூசைகள் மற்றும் யாகங்கள் செய்வதால் மழை பெய்கிறது. இந்த ஒற்றை அதிசயத்தில் துவங்குகிறது ஆரிய மதம்.

கானான் நாட்டிற்கு செல்லாமல் ஆரிய நிலத்திலேயே நாடோடிகளானவர்கள் ஆரியர்கள் எனப்பட்டனர். இவர்களே வால்கா நதி முதல் கங்கை நதிவரை பயணித்த நாடோடி குழுவினர்.

ஆதாம், நோவா, ஆபிரகாம், மோசேவுக்கு பின்னர் இவர்கள் வரலாறு முழுவதும் அசுரர்களுடனான சண்டையாக உள்ளது. பைபிளில் நோவாவுக்கு பின்னர் அசுரர்கள் குறித்த குறிப்புகள் இல்லை. இஸ்ரவேலர்களுடைய போராட்டம் அனைத்தும் எகிப்திய மன்னர்களை சுற்றியே வருகிறது. ஆனால் ஆரியர்களின் போராட்டம் அனைத்தும் அசுரர்களை சுற்றி வருகிறது.

ரீக்வேதம், சாமவேதம், யசுர்வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்கள், உபநிஷத்துக்கள், பிராமணியங்கள் ஆகியவை ஆரிய வேதங்களாக உள்ளன. இவை அனைத்தும் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்திய நிலப்பகுதிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கின்றன.

ரிக் வேதம், ஐத்ரேய உபநிடதம், மனுஸ்மிருதி, இவற்றில் குறிப்பிட்டுள்ள ஆரியமத வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம்.

‘‘ஆதியிலே கடவுள் மட்டும் இருந்தார். நான் உலகை படைப்பேன் என கடவுள் நினைத்தார்’’ என்று துவங்குகிறது ரிக் வேதத்தின் ஐத்ரேய உபநிடதம். 

கடவுள் உலகை படைக்க நினைத்தார். முதலில் 1.அம்பலோகம், 2.ஸ்வர்க்கலோகம், 3.மரீசிலோகம், 4.மரலோகம், 5.அபலோகம் என்ற ஐந்து உலகங்களை படைக்கிறார். இந்த உலகங்களை ஆளுகை செய்ய கடல் நீரை திரட்டி புருசனை படைத்தார். (புருசனை பிரம்மா என மனுஸ்மிருதி கூறுகிறது).

புருசன்(பிரம்மா) வாயில் வந்த பேச்சில் இருந்து நெருப்பு தோன்றியது. மூக்கில் வந்த மூச்சிலிருந்து காற்று தோன்றியது., கண்களில் வந்த பார்வையில் இருந்து சூரியன் தோன்றியது. காதுகளில் வந்த கேள்வியில் இருந்து திசைகள் தோன்றின. தோலில் முடிகளில் இருந்து செடி கொடி தாவரங்கள் தோன்றின. இதயத்தில் இருந்து மனமும் நிலவும் தோன்றியது. தொப்புளில் இருந்து பசியும், மரணமும் தோன்றியது. ஆண்குறியில் வந்த விந்தில் இருந்து தண்ணீர் தோன்றியது.

இப்படி தோன்றிய அனைத்தையும் பிரம்மா கடலில் வீசினார். கடலில் தத்தளித்த படைப்புகளை ஆளுகை செய்ய பசுவையும், குதிரையையும் அளித்தார். ஆனால் படைப்புகள் அவற்றை ஏற்க மறுத்தன. பின்னர்  தன் சாயலில் சுயம்பு மனிதனை அளித்தார். சுயம்பு மனிதனை அனைத்து படைப்புகளும் ஏற்றுக்கொண்டன.

சுயம்பு மனிதனுக்குள் நெருப்பு பேச்சாகவும், காற்று மூச்சாகவும், சூரியன் பார்வையாகவும், திசைகள் ஒலியாகவும், தாவரங்கள் முடியாகவும், சந்திரன் இதயமாகவும், மரணம் பசியாகவும், தண்ணீர் விந்தாகவும் நுழைந்து கொண்டன.

ஆனாலும் மனிதன் முழுமை பெறாமல் இருந்தான். படைப்புகளை ஆளுகை செய்யும் திறன் மனிதனுக்கு வரவில்லை. இதனால் கடவுளே மனிதனின் உச்சந்தலையை பிளந்து மனிதனுக்குள் ஆத்மாவாக நுழைந்தார்.

ஆத்மாவாக மனிதனுக்குள் நுழைந்த கடவுள் அனைத்து படைப்புகளையும் பார்த்தார். பார்ப்பது எல்லாம் கடவுளாகவே தெரிந்தது. தானே எல்லாமுமாக இருக்கிறேன் என கடவுள் உணர்ந்தார். 

ஆத்மாவாக கடவுள் நுழைந்தாலும் பசி, காமம், மரணம் என்பவை மனிதனுள் இருந்தது. இவற்றில் இருந்து ஆத்மா விடுபட்டு மீண்டும் கடவுளாக வேண்டும்.

ஆத்மாவை கடவுளாக மாற்ற பிராமணியத்தை மனிதனுக்கு போதித்தார் பிரம்மா. பசி, காமம், மரணம் இவற்றில் இருந்து விடுபடும் மனிதர்கள் தேவர்களாக நித்திய வாழ்வு வாழ்வார்கள். தேவர்களே கடவுளாக போற்றப்படுவார்கள். 

மச்ச அவதாரம்

கடவுள், படைப்புகளுடன் ஆத்மாவாக இரண்டற கலந்து விட்டார். படைப்புகளில் சிறந்து மனிதன். மனிதனின் விந்துவை பெண்ணுக்குள் செலுத்த வேண்டும். பெண்ணுக்குள் வந்த விந்துவில் ஆன்மா நுழையும். இது முதல் பிறப்பு.  ஆன்மா நுழைந்த விந்து குழந்தையாக இரண்டாம் பிறப்பு எடுக்கும். இரண்டாம் பிறப்பில் பசி, காமம், இவற்றுடன் வாழும் மனிதன் படைப்புகளை நல்லாட்சி செய்ய வேண்டும்.

படைப்புகளை காத்த மனிதன் இறுதியில் மரணத்தை ஏற்க வேண்டும். மரணம் என்பது உச்சந்தலை வழியாக ஆன்மாவை தேவலோகத்திற்கு அனுப்ப கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு அமையாத மரணங்கள் மீண்டும் மீண்டும் பிறப்பை சந்திக்கும்.

ஆன்மாவை உச்சந்தலை வழியாக விடுவிக்க பக்தி, யாகம் இவற்றை கடைபிடிக்க வேண்டும். பிறப்பே இல்லாமல் அனைத்து ஆன்மாக்களும் தேவர்களாக மாற வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் படைப்பில் ஆத்மாகவா இரண்டற கலந்த கடவுள் மீண்டும் ஒற்றை கடவுளாக வருவார். - இது தான் ஆரியமதக் கொள்கைகளின் சுருக்கம்.

யூதம், கிறிஸ்துவம், இஸ்லாமிய மதங்களின் கொள்கையும் இது தான். கடவுள் ஆத்மாவாக மனிதனுள் இருக்கிறார். இந்த ஆத்மாவை மரணத்தில் இருந்து மீட்டு கடவுளிடம் சேர்க்க வேண்டும்.

கடவுள் மீட்பரை அனுப்புவார் என காத்திருக்கிறது யூத மதம். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை அத்மாவை மீட்கும் என்கிறது கிறிஸ்துவ மதம். கடவுளின் இறுதி வருகை ஆத்மாவை மீட்கும் என்கிறது இஸ்லாமிய மதம். கல்கி அவதாரம் ஆத்மாவை மீட்கும் என்கிறது ஆரிய மதம்.

இறுதியாக கல்கி அவதாரம் குறித்து சுருக்கமாக பார்த்து நிறைவு செய்யலாம்.

கடவுள் ஆத்மாவாக படைப்புகளுக்குள் கலந்து விட்டார். படைப்புகள் பசி, காமம் மரணம் இவற்றுடன் வாழ்கின்றன. பசி, காமம், மரணத்தை வெல்ல மனிதனுக்கு உதவியாக மனிதியை படைக்கிறார் பிரம்மா.

மனிதி மூலம் 7 முனிவர்கள் பிறக்கிறார்கள். இவர்கள் பசி, காமம் இவற்றை தவிர்த்து மரணத்தை வெல்ல முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சி நெடுங்காலம் நடக்கிறது.

இதற்கிடையில் மேலும் 10 பிள்ளைகளை மனிதனும் மனிதியும் பெற்றெடுக்கிறார்கள். இவர்கள் மூலம் மனிதகுலம் பெருகுகிறது. மனித குலப் பெண்களின் மீது தேவர்களுக்கு காமம் ஏற்படுகிறது. இதனால் தேவர்கள் மற்றும் மனிதர்கள் கலந்த அசுரர்கள் பூமியில் பிறக்கிறார்கள்.

அசுரர்கள் தேவர்களை விட வலிமை அடைகிறார்கள். அசுரர்களின் சந்ததி வேகமாக வளர்கிறது. முனிவர்களின் ஆத்மாவை விடுவிக்கும் தியானத்தை அசுரர்கள் கலைக்கின்றனர்.

தேவர்களால் தான் பூமியில் அசுரர்கள் பிறந்தார்கள். எனவே அசுரர்களை அழித்து மனிதர்களை காக்க தேவர்தலைவன் பூமியில் ஆத்மாவாக அவதாரம் எடுக்க வேண்டும் என்று சாபம் இடுகின்றனர் முனிவர்கள்.

முனிவர்களின் சாபத்திற்கு ஏற்ப தேவ அவதாரங்கள் பூமியில் பிறக்கிறது.

முதல் அவதாரம் மச்ச அவதாரம். இது பைபிளில் சொல்லப்பட்ட நோவா கதை.

2வது மோகினி அவதாரம். இது பைபிளில் சொல்லப்பட்ட சாராள்&ஆபிரகாம் கதை.

மூன்றாவது அவதாரத்தில் வரும் மனுஸ்மிருதி பைபிளில் சொல்லப்பட்ட மோசே மற்றும் யாக்கோப்பின் கதையுடன் ஒத்துப் போகிறது.

இந்த வரிசையில் யூதர்களை போல இறுதி அவதாரமான கல்கி அவதாரத்திற்கு ஆரியர்களும் காத்திருக்கின்றனர்.

ஆரிய பிராமணர்கள் இந்து அந்தணர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பிறக்கிறது இந்து மதம். - அது குறித்து அடுத்த கட்டுரைத் தொடரில் பார்க்கலாம்.

முற்றும்.

நன்றி!

06/12/2019

கிறிஸ்துவம், இஸ்லாமியம் - ஆபிரகாமின் மதங்கள் 4

எகிப்தில் அடிமைப்பட்டு கிடந்த இஸ்ரவேலர்கள் இறுதி மீட்பர் வருவார் என காத்திருந்தனர்.

இந்த நிலையில் மரியாள் யோசேப்பு தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் இயேசு. தேவதூதன் அருளால் மரியாள் கருத்தரித்தார் என்கிறது பைபிளின் புதிய ஏற்பாடு.

இயேசு கிறிஸ்துவின் வரலாறு 30 வயதில் இருந்தே துவங்குறது.

தண்ணீரில் மூழ்க செய்து பாவங்களுக்கு மன்னிப்பு தரும் பணியை செய்துவருகிறார் யோவான். ஒருநாள் இயேசு தண்ணீரில் முழ்க வருகிறார். இயேசு தண்ணீரில் மூழ்கி எழுந்ததும், வானத்தில் இருந்து ‘இவர் என் குமாரன்’ என்ற சத்தம் கேட்கிறது. மகிழ்ந்த யோவான் இவரே இஸ்ரவேல் மக்களை மீட்க வந்த இறுதி மீட்பர் என அறிவிக்கிறார்.

மலைக்குன்று ஒன்றில் தியானம் செய்யும் இயேசுவை பிசாசு(கடவுளால் துரத்திவிடப்பட்ட தேவதலைவன்) சோதிக்கிறான். பிசாசின் ஆசை வார்த்தைக்கு மயங்காமல் இயேசு கடவுளை மட்டுமே வணங்குகிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்த கடவுள் பரிசுத்த ஆவியாக இயேசுவுக்குள் இறங்குகிறார்.

அன்று முதல் இயேசு கிறிஸ்து என அறியப்படுகிறார். தன் போதனைகளை மக்களிடம் பரப்ப 12 சீடர்களை சேர்த்துக் கொள்கிறார். தேவ ஆலயங்களில் வியாபாரம் செய்ய கூடாது, சிலை வழிபாடு கூடாது என புரட்சி செய்கிறார்.

இதனால் கோபம் அடைந்த யூத மதத்தினர் இயேசுவை தேவ ஆலயத்தில் இருந்து அடித்து விரட்டுகின்றனர். மூன்றே நாளில் தேவ ஆலயத்தை இடித்து மீண்டும் கட்டுவேன் என சவால் விடுகிறார். தேவ ஆலயத்தை இடிப்பேன் என்ற இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்கின்றனர் யூதர்கள்.

இயேசு கடவுளுக்கு எதிராக செயல்பட்டார். தேவ ஆலயத்தை இடிக்க முயற்சித்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்படுகிறது. சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுகிறார்.

இறந்த இயேசுவின் உடலை கல்லறையில் வைத்து பூட்டுகின்றனர். மூன்றாம் நாள் கல்லறை திறந்து கிடக்கிறது. இயேசு கல்லறையில் இருந்து உயிருடன் வெளியே வந்ததை சிலர் பார்த்ததாக கூறுகின்றர். பலர் நம்ப மறுக்கின்றனர். தொடர்ந்து இயேசு தம் சீடர்களுக்கும் காட்சி அளிக்கிறார். பின்னர் சீடர்கள் முன்னால் மேகங்களுக்கு நடுவே மறைந்து வானுலகம் சென்று விடுகிறார்.

இயேசுவின் சீடர்கள் கிறிஸ்துவ மதத்தை பரப்புகின்றனர்.

இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கர்த்தர் ஒருவரே கடவுள். அவரின் ஒரே குமாரன் இயேசுகிறிஸ்து பூமியில் பிறந்து மரித்து மீண்டும் உயிர்த்து எழுந்தார். இதனால் உலக மக்களின் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டது. எனவே இஸ்ரவேலர் மட்டுமல்ல உலக மக்கள் அனைவருமே கடவுளின் பிள்ளைகள் தான்.

இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார். அவர் வருகையில் இறந்தவர்கள் எல்லாம் உயிருடன் எழுவார்கள். கடவுளின் முன்னிலையில் மனிதர்களின் பாவக்கணக்கு பார்க்கப்படும். நல்லவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள். பாவிகள் நரகத்திற்கு செல்வார்கள். சொர்க்கத்தில் இயேசுகிறிஸ்துவின் நல்லாட்சி நடைபெறும். - இதுவே இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை குறித்த கிறிஸ்துவ மத நம்பிக்கை.

"பரலோகத்தில் இருக்கிற இயேசு கிறிஸ்து சீக்கிரம் வருகிறார். எனவே பாவிகளே மனம்திருந்தி இயேசுவை ஏற்றக்கொள்ளுங்கள்". - இந்த செய்தியை உலகின் அனைத்து மக்களுக்கும் அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்துவனின் கடமையாக உள்ளது. அதை செயல்படுத்துவதில் தான் பிரச்சனைகள். கிறிஸ்துவத்தில் இத்தனை பிரிவினைகள்.

இனி இஸ்லாமியம் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

இயேசுவுக்கு பின்னர் வந்தவர் முகமது நபிகள். யூதர்கள் இயேசுவை மீட்பராக ஏற்கவில்லை. குற்றவாளியாகத் தான் இன்றும் கருதுகின்றனர். இஸ்ரவேலர் மற்றும் ஆபிரகாமின் பிற சந்ததியினர் மீட்பர் வருவார் என காத்திருந்தனர்.

இந்நிலையில் 5ம் நூற்றாண்டில் அரேபியாவில் பிறக்கிறார் முகமது. 40 வயது வரை முகமது சாதாரண மனிதராக தான் இருந்தார். ஒரு நாள் மலைகுகையில் வைத்து கடவுள் தூதர் முகமதுவிடம் பேசினார். அன்று முதல் முகமது நபிகள் என அறியப்பட்டார். 

இயேசு கிறிஸ்துவை போல முகமது நபிகளும் தேவ ஆலயத்தில்(மசூதியில்) வியாபாரம் கூடாது என புரட்சி செய்தார். மக்காவில் உள்ள வழிபாடு இடத்தில் சிலை வழிபாட்டை எதிர்த்து குரல் கொடுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் முகமது நபிகளை கொல்ல திட்டம் தீட்டினர். முகமது நபிகள் வனாந்திரத்தின் வழியாக தப்பித்து மதினா என்ற இடத்திற்கு சென்றார். மதினாவில் தொழுகையிடம் கட்டி எழுப்பினார்.
முகமது நபிகளுக்கு கடவுள் தொடர்ந்து கட்டளைகளை தந்து கொண்டு இருந்தார். இறுதி காலத்தில் மக்காவுக்கு திரும்பி வந்த முகமது நபிகள் மக்காவை மீட்டு புனிதப்படுத்தினார். மக்காவில் இருந்து இஸ்லாமிய கொள்கைகளை போதித்தவர், மக்காவிலேயே இறந்தார்.

கடவுளை(அல்லா) மட்டுமே வணங்க வேண்டும். மக்காவுக்கு புனித பயணம் செய்ய வேண்டும். இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பவைகளே இஸ்லாமியத்தின் முக்கிய கொள்கைகள்.

முகமது நபிகளே இறுதி மீட்பர். அவருக்கு பின் இனி மீட்பர்கள் வரமாட்டார்கள். இறுதி காலத்தில் கடவுள் நேரடியாக வருவார். மனிதர்களின் பாவ கணக்கிற்கு ஏற்ப சொர்க்கம் அல்லது நரகம் கிடைக்கும். - இதுவே இஸ்லாமிய மதக் கொள்கைகளின் சுருக்கம்.

யூதர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்துவர்கள் முகமது நபிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஒரே கடவுள், பிசாசு, ஆதாம், நோவா, ஆபிரகாம், ஈசாக், இஸ்மாயில், மோசே, இஸ்ரவேல், இறுதி மீட்பர் வருவார் என்கிற ஆதிபைபிளை மூன்று மதத்தினரும் ஏற்கின்றனர். 

யூதர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மூவருக்கும் கடவுள் ஒருவர் தான். கடவுளின் வேதத்தை அளித்தவர் யார் என்பதில் தான் வேறுபடுகின்றனர்.

மோசேவின் வேதத்தை மட்டும் ஏற்பவர்கள் யூதர்கள். மோசே மற்றும் இயேசுகிறிஸ்துவின் வேதத்தை ஏற்பவர்கள் கிறிஸ்துவர்கள். மோசே, இயேசுகிறிஸ்து மற்றும் முகமது நபிகளின் வேதங்களை ஏற்பவர்கள் இஸ்லாமியர்கள்.

மோசே மற்றும் இயேசுகிறிஸ்துவின் வேதங்களை ஏற்றாலும் பைபிளை வேதமாக இஸ்லாமியர்கள் ஏற்பதில்லை. மாறாக மோசே மற்றும் இயேசுகிறிஸ்துவின் வேதங்கள் அடங்கிய திருக்குரானை வேதமாக ஏற்கின்றனர்.

திருக்குரான் என்பது முகமது நபிகளால் சொல்லப்பட்ட பல உரைகளின் தொகுப்பு. முகமது நபிகள் மறைவுக்கு பின்னர் அவரது நண்பர் அபுபக்கரால் தொகுக்கப்பட்டது. 

அடுத்த பதிவில் ஆபிரகாமின் ஆரியமதம் குறித்து பார்ப்போம்..

தொடரும்...

05/12/2019

இஸ்ரவேலர் - ஆபிரகாமின் மதங்கள் 3

ஆடு மேய்க்கும் ஆபிரகாமிடம் கடவுள் பேசுகிறார். ‘‘நானே உண்மையான கடவுள். என்னை மட்டும் வணங்கு. என்னை வணங்கினால் உன்னையும் உன் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பேன். நாடோடியான உனக்கு சொந்தமாக கானான் என்ற நாட்டை பரிசளிப்பேன். அந்த நாட்டில் உன் சந்ததியினர் பெருகி வாழ்வார்கள்’’ என்கிறார் கடவுள்.

கடவுளின் பேச்சை நம்பிய ஆபிரகாம், கானான் தேசத்திற்கு புறப்படுகிறார். சிலைகளை வணங்கும் ஆபிரகாமின் தந்தை தேராகு, ஆபிரகாமின் பேச்சை கேட்கவில்லை.

தன் பேச்சை நம்பும் மனைவி, சகோதரர், மற்றும் உறவினருடன் கானான் தேசம் நோக்கி புறப்படுகிறார் ஆபிரகாம். நெடுதூரம், நெடுங்காலம் பயணித்தும் கானான் தேசத்தை கண்டறிய முடியவில்லை. கடுமையான பஞ்சம் வரவே எகிப்து நாட்டில் தஞ்சம் அடைகின்றனர்.

எகிப்து மன்னர் பாரோன் பெண்களை கவர்வதில் வல்லவன். ஆபிரகாமின் மனைவி சாராள் மிகவும் அழகானவள். சாராள் தன் மனைவி என்றால் தன்னைக் கொன்று விடுவார்கள் என்பதால், ‘தங்கை’ என பொய் சொல்லி விடுகிறார் ஆபிரகாம். எனவே பாரோன் சாராளை தன் அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

அந்தப்புரத்தில் இருக்கும் மனைவியை மீட்டுத் தர கடவுளிடம் வேண்டுகிறார் ஆபிரகாம். பாரோன் மன்னனுக்கு கடுமையான நோய் வருகிறது. இதை தொடர்ந்து சாராளை விடுவிக்கிறான் மன்னன். சாராளுக்கு உதவியாக ஒரு எகிப்திய பணிப்பெண்னையும் அனுப்பி வைக்கிறார்.

எகிப்தில் இருந்து புறப்படும் ஆபிரகாம் கூட்டம் கானான் நாட்டை தேடி அலைகிறது. மீண்டும் வனாந்திரத்தில் தங்குகின்றனர்.

சாராளுக்கு குழந்தை இல்லாததால் எகிப்திய பணிப்பெண் மூலமாக ஒரு குழந்தை பெறுகிறார் ஆபிரகாம். அந்த குழந்தைக்கு இஸ்மாயில் என தேவதூதர் பெயரிடுகிறார். கடவுளின் வாக்குறுதி படி சாராளும் ஒரு குழந்தை பெறுகிறாள். அந்த குழந்தைக்கு ஈசாக் என பெயரிடுகிறார் ஆபிரகாம்.

ஈசாக்குக்கு போட்டியாக மாறிவிட கூடாது என்பதால் கடவுளால் வேறு தேசத்திற்கு அனுப்பப்படுகிறார் இஸ்மாயில்.

ஆபிரகாமிடம் ஈசாக்கை நரபலி கேட்கிறார் கடவுள். கடவுளின் கட்டளையை ஏற்று ஈசாக்கை நரபலி கொடுக்க துணிகிறார் ஆபிரகாம். ஆபிரகாமின் விசுவாசத்தை கண்டு வியந்த கடவுள், ஈசாக்குக்கு பதில் ஆடு ஒன்றை பலியிட செய்கிறார். பின்னர் கானான் தேசம் நோக்கி புறப்பட கூறுகிறார் கடவுள்.  கானான் தேசம் செல்லும் வழியில் ஆபிரகாம் இறந்து விடுகிறார்.

ஈசாக் தலைமையில் கானான் பயணம் தொடர்கிறது. ஈசாக்குவிற்கு 2 மகன்கள் பிறக்கின்றனர். இதில் இளைய மகன் யாக்கோப்புக்கு ஈசாக்கிடம் இருந்து தந்திரமாக ஆசிர்வாதம் வாங்கிவிடுகிறார் ஈசாக்கின் மனைவி ரெபேக்கா.

ஈசாக்கை தொடர்ந்து யாக்கோபு கானான் பயனத்தை தொடர்கிறார். நீண்ட காலம் கடந்தும் கானான் தேசம் கிடைக்காததால் ஆபிரகாமின் கடவுள் மீது சந்தேகம் வருகிறது. பலர் மீண்டும் சிலை வழிபாட்டை தொடங்குகின்றனர். 


இந்த நிலையில் மோசே என்பவருக்கு அக்னி வடிவில் கடவுள் காட்சியளிக்கிறார். கடவுளின் கட்டளைக்கு ஏற்ப ஆபிரகாமின் சந்ததியினரை கானான் தேசம் நோக்கி அழைத்து செல்கிறார் மோசே.

இப்போதும் நெடுங்காலம், நெடுந்தூரம் கடந்தும் கானான் தேசம் கிடைக்கவில்லை. மோசேவுக்கும் வயதாகிறது. கடவுளின் உறுதியான முடிவை அறிய சீனாய் என்கிற மலைக்கு தியானம் செய்ய செல்கிறார் மோசே.

பலநாட்களாக மோசே திரும்பி வரவில்லை. இதனால் ஆபிரகாமின் கடவுள் தவிர்த்து மக்கள் மீண்டும் சிலை வழிபாட்டை துவங்குகின்றனர். ஐம்பொன்னால் நந்தி சிலையை செய்து வழிபடுகின்றனர். நந்தி வழிபாடு மக்களிடம் புகழ்பெறுகிறது. 

ஒருகட்டத்தில் மோசே திரும்ப வருகிறார். கடவுள் தனக்கு அளித்த 10 கட்டளைகளை மக்களிடம் விளக்கி சொல்கிறார். ஒரு பகுதியினர் மோசேயின் விளக்கத்தை ஏற்கவில்லை. நந்தி வழிபாட்டையே தொடர்கின்றனர். இறுதியில் மோசேயும் இறந்து விடுகிறார். மோசேவுக்கு பின் அவரது உதவியாளர் யோசுவா தலைமை தாங்கி கானான் நாட்டை தேடி புறப்படுகின்றனர். நந்தி வழிபாட்டை தொடர்பவர்கள் வேறு திசையில் பயணிக்கின்றனர்.

மோசேவின் 10 கட்டளைகளை பின்பற்றி யோசுவாவின் பின் சென்றவர்கள் யாக்கோபு தலைமையில் கானான் நாட்டை அடைந்தனர்.

யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என மாற்றம் செய்கிறார் கடவுள். இஸ்ரவேலின்(யாக்கோபின்) 12 பிள்ளைகள் தங்களுக்குள் கானான் நாட்டை பிரித்து கொள்கின்றனர். 12 பேரும் 12வம்சமாக பல்கி பெருகுகின்றனர். இந்த 12 வம்சங்களே இஸ்ரவேலர் என அழைக்கப் படுகின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் தான் யூத வம்சம்.

12 இஸ்ரவேலரும் மோசேயின் 10 கட்டளைகளை தங்களின் வேதமாக ஏற்று கடவுளை வழிபாடுகின்றனர்.

1. நானே உங்கள் கடவுளாகிய கர்த்தர். 2.என்னைத் தவிர சிலைகளை வணங்க கூடாது. 3. கடவுளின் பெயரை வீணாக பயன்படுத்த கூடாது. 4.ஓய்வு நாளில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். 5.பெற்றோரை மதிக்க வேண்டும். 6.கொலை செய்ய கூடாது, 7.விபசாரம் செய்யக் கூடாது. 8.திருட கூடாது. 9.பொய்சாட்சி சொல்ல கூடாது. 10.பிறர் மனைவியை கவர கூடாது. என்பவைகள் தான் மோசேவின் 10 கட்டளைகள்.

இஸ்ரவேலர்கள் செழிபுற்று இருந்த கானான் நாட்டில் மீண்டும் பஞ்சம் வருகிறது. இதனால் 12 வம்சத்தினருக்கு இடையில் கடவுள் வழிபாடு குறித்த மோதல் ஏற்படுகிறது. கொடிய வறட்சி தொடரவே இறுதியில் கானான் நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் எகிப்தில் தஞ்சமடைகின்றனர். பின்னர் எகிப்து மன்னர் கட்டுப்பாட்டில் இருந்து தங்களை மீட்க கோரி கடவுளை வேண்டுகின்றனர்.

எகிப்தில் இருக்கும் இஸ்ரவேல் மக்களை மீட்க கடவுள் ஒவ்வொரு மீட்பராக அனுப்புகிறார். அதில் இறுதி மீட்பர் யார் என்பதில் தான் யூதம், கிறிஸ்துவம், இஸ்லாமியம் ஆகிய பெரும் மதங்கள் பிரிகின்றன. 

இறுதி மீட்பர் இன்னும் வரவில்லை என்பவர்கள் யூதமதமாகவும், இயேசு கிறிஸ்து தான் இறுதிமீட்பர் என்பவர்கள் கிறிஸ்துவ மதமாகவும், முகமது நபிகள் தான் இறுதி மீட்பர் என்பவர்கள் இஸ்லாமிய மதமாகவும் பிரிகின்றனர்.

இறுதி அவதாரம் இயேசு கிறிஸ்துவா?, முகமது நபிகளா?, கல்கியா? அடுத்த பதிவில்..

தொடரும்... 

03/12/2019

ஆதிபைபிள் - ஆபிரகாமின் மதங்கள் 2

யூதம் மற்றும் கிறிஸ்துவ மதங்களின் வேதம் பைபிள். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பெரும் பிரிவுகளாக பைபிள் தொகுக்கப்பட்டு உள்ளது. பழைய ஏற்பாடு யூதம் மற்றும் கிறிஸ்துவ மதங்களின் பொது வேதமாவும், புதிய ஏற்பபாடு கிறிஸ்துவர்களின் வேதமாகவும் உள்ளது.

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்ற வசனத்தில் துவங்குகிறது பைபிள். உலக படைப்பு, மனிதபடைப்பு, மனிதர்களை வழிநடத்த கடவுள் தூதர்கள் அவதாரம் எடுத்தல், பாவத்தை நீக்கி பரலோகம் என்ற கடவுளின் ஆட்சிக்கு மனிதர்களை தயார்படுத்துதல் என்ற அடிப்படையில் பைபிள் கோட்பாடுகள் அமைந்துள்ளன.

முதலில் பைபிள் காலகோடுகளை சுருக்கமாக பார்த்துவிடுவோம்

வானம், பூமி, வெளிச்சம், இருள், கடல், நட்சத்திரங்கள், சூரியன், தாவரங்கள், விலங்குகள், என ஒட்டுமொத்த உலகத்தையும் 6 நாட்களில் படைக்கிறார் கடவுள். 7ம்நாளில் ஓய்வாக இருக்கிறார்.

வானுலகை தேவர்கள் ஆட்சி செய்வது போல, பூமியை ஆட்சி செய்ய மனிதனை படைக்கிறார். மண்ணை எடுத்து தன்னுடைய சாயலைபோல ஒரு பொம்மை செய்கிறார். அந்த பொம்மைக்கு தன்னுடைய சுவாச காற்றை ஊதி உயிர் தருகிறார். உயிர் பெற்ற மனிதனுக்கு ஆதாம் என பெயரிடுகிறார். ஆதாமுக்கு துணையாக ஆதாமின் விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணை படைக்கிறார். அந்த பெண்ணை ஆதாமிடம் ஒப்படைக்கிறார். தன் பெண்ணுக்கு ஏவாள் என பெயரிடுகிறார் ஆதாம்.

ஆதாம் மற்றும் ஏவாளுக்கு ஏதேன் என்ற பழத்தோட்டத்தை கடவுள் பரிசளிக்கிறார். அந்த தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் பழத்தை மட்டும் உண்ணக் கூடாது என கட்டளையிடுகிறார்.

கடவுளின் கட்டளைக்கு ஏற்ப ஆதாமும் ஏவாளும் பழத்தோட்டத்தில் மனம் மகிழ்ந்து வாழ்கின்றனர், அனைத்து பழத்தையும் உண்டு மகிழ்கின்றனர். கடவுள் தவிர்க்க சொன்ன ஒரு பழத்தை மட்டும் உண்ணவில்லை. தினமும் கடவுளை துதித்து மகிழ்விக்கின்றனர். மகிழ்ச்சியடைந்த கடவுள் ஆதாம் ஏவாள் மூலமாக பூமி முழுவதும் மனிதர்களை பரப்ப நினைக்கிறார். ஆதாம் ஏவாளுக்கு வாரிசு வரம் கொடுக்கிறார்.

ஆதாம் ஏவாளுக்கு வாரிசு வரம் கொடுக்கும் கடவுளின் முடிவு தேவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பூமியில் மேலும் மனிதர்களை பெருக்க கூடாது என தேவர்கள் கடவுளிடம் முறையிடுகின்றனர். தன்னுடைய படைப்பில் தலையிட கூடாது என்று தேவர்தலைவனை கடவுள் கடிந்து கொள்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தலைவன் மனிதனை கடவுளுக்கு எதிராக திருப்ப சதித்திட்டம் தீட்டுகிறார்.

பூமிக்கு வந்த தேவதலைவன் ஆதாமின் மனைவி ஏவாளிடம் சூசகமாக பேசுகிறார். கடவுள் உங்களை வேலைக்காரராக தான் வைத்திருக்கிறார். தான் சொல்வதை கேட்டால் தன்னை போல தேவதூதனாக சொர்க்கத்தில் நுழையலாம். கடவுள் உண்ணக்கூடாது என்ற பழத்தை ஆதாமும் ஏவாளும் உண்ணும்படி தேவதலைவன் சொல்கிறான். ஆசை வார்த்தைக்கு மயங்கிய ஏவாள் கடவுளின் கட்டளையை மீறி பழத்தை உண்கிறாள். ஆதாமையும் உண்ண செய்கிறாள்.


தேவ உலகம் சென்ற தலைவன் கடவுளின் பிரியமான படைப்பு கடவுளின் கட்டளையை மீறிவிட்டதாக கடவுளை ஏளனம் செய்கிறார். கோபம் அடைந்த கடவுள் ஆதாமையும், ஏவாளையும் சபிக்கிறார். இனி நீங்கள் மரணத்தை சந்திப்பீர்கள். உங்கள் வாரிசுகளும் மரணத்தை சந்திக்கும் என சாபமிடுகிறார். மனிதர்களை வஞ்சித்த தேவர்தலைவனையும் பூமிக்கு துரத்தி விடுகிறார்.

பூமீக்கு வந்த தேவர் தலைவன் மனிதனை ஏமாற்றியதைப் போல தாவரம், விலங்குகளையும் தன்வசப்படுத்தி கடவுளுக்கு எதிராக செயல்படுகிறார். இதானல் கடவுள் மற்றும் தேவதலைவன் என்ற இருபெரும் ஆளுகை பூமியில் வளரத்துவங்குகிறது. 

கடவுளை வணங்குபவர்கள் குறைவாகவும், தேவதலைவனை வணங்குபவர்கள் அதிகமாகவும் பெருகுகின்றனர். பூமியில் தேவதலைவனின் ஆளுகை தேவஉலகின் தேவர்களையும் வியக்க வைக்கிறது.

மனித பெண்களின் அழகை பார்த்து மயங்கிய பல தேவர்கள் தேவஉலகை விட்டுவிட்டு பூமிக்கு வருகின்றனர். பெண்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்கின்றனர். தேவர்-மனிதர் கலப்பால் அசுரர்கள் என்ற புதிய இனமும் பூமியில் பெருக துவங்குகிறது.

அசுர இனத்தை பெருக்கி தேவஉலகில் இருந்து கடவுளை துரத்துவது தான் தேவ தலைவனின் திட்டம். இதை தெரிந்து கொண்ட கடவுள், பூமியை அழிக்க திட்டமிடுகிறார்.

கடவுளை வணங்கிய விலங்குகளும், மனிதர்களும் தங்களை அழிக்க கூடாது என கடவுளிடம் வேண்டுகின்றனர். இதனால் இறக்கம் அடைந்த கடவுள் மனிதன் உட்பட எல்லா உயிர்களின் ஆண்&பெண் ஜோடியை தேர்ந்தெடுத்து காப்பாற்றுகிறார். அப்படி கடவுள் தேர்ந்தெடுத்த மனிதன் தான் நோவா.

நோவாவின் குடும்பம் மற்றும் அனைத்து உயிர்களின் தேர்ந்தெடுத்த ஜோடிகள் ஒரு பெரிய கப்பலில் அடைக்கபடுகின்றன. பின்னர் கடல் வெள்ளத்தால் பூமியை அழிக்கிறார் கடவுள். கடலுள் மூழ்கிய பூமி 40 நாட்கள் கடந்து திரும்ப நிலப்பரப்பை உண்டாக்குகிறது. கப்பலில் காக்கப்பட்ட நோவா உட்பட உயிர்கள் புதிய உலகில் வாழ துவங்குகின்றன. இனி உலகை அழிக்க மாட்டேன் என உயிரினங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார் கடவுள்.

புதிய உலகில் மீண்டும் தேவதலைவன் ஆதிக்கம் செலுத்துகிறார். கடவுளை வணங்கும் மக்கள் குறைந்து தேவதலைவனை வணங்கும் மக்கள் அதிகரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் எல்லா மக்களும் தேவதலைவனையே வணங்குகின்றனர். கடவுளை வணங்க ஒருவர் கூட இல்லாத நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் பூமியை அழிக்க முடிவுசெய்கிறார் கடவுள். ஆனால் இனி பூமியை அழிக்க மாட்டேன் என்ற வாக்குறுதி தடுக்கிறது. இதனால் தன்னை மட்டும் வணங்கும் ஒரு மனித சமூகத்தை ஏற்படுத்த கடவுள் முடிவு செய்கிறார். அதற்காக ஆபிரகாம் என்ற மனிதனை தேர்ந்தெடுத்து அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்கிறார்.

தொடரும்..

02/12/2019

ஆபிரகாமின் மதங்கள் 1

ஆபிரகாமின் மதங்கள் என்றால் பொதுவாக யூத மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் இவற்றை தான் குறிப்பிடுவார்கள். ஆனால் இந்தோ ஈரான் பகுதிகளில் ஏராளமான மதங்கள் ஆபிரகாமின் வழி தோன்றல்களாக உள்ளன.

குறிப்பாக வடஇந்தியாவில் அதிகமாக பின்பற்றப்படும் ஆரியமதம் ஆபிரகாம் மதங்களுள் முக்கியமானது. இன்று இந்து மதத்தின் ஒரு பிரிவாக கருதப்படும் பஹாய், சாய்பாபா உட்பட வழிபாடுகளும் ஆபிரகாமிய வழித்தோன்றல்கள் என்பது தான் ஆச்சரியமான உண்மை!

இன்று உலகில் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதங்களுள் முக்கியமானவை ஐந்து. 1.இஸ்லாமியம், 2.கிறிஸ்துவம், 3.புத்தம், 4.ஆரியம், 5.இந்துமதம்.

இங்கே உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஆரியம் வேறு, இந்து மதம் வேறா?

ஆம். ஆரியம் என்பது ஆபிரகாமிய மதம். இந்துமதம் என்பது ஆரியத்திற்கு எதிராக இந்தியாவில் தோன்றிய மதம். புத்த மதத்தை போல இந்து மதம் என்பதும் ஆபிரகாமிய மதங்களுக்கு எதிராக தோன்றியது என்பது தான் வரலாற்று உண்மை.

சரி இனி வரலாற்றை கொஞ்சம் ஆய்வு செய்வோம்...

இந்த கட்டுரைத் தொடர் முழுக்க முழுக்க மதவேதங்கள் மற்றும் வரலாற்று காலக்கோடுகளின் அடிப்படையில் எழுதப்படுவது. இந்த கட்டுரையில் மதங்களையோ, மத வேதங்களையோ, மத நிருவனர்களையோ குற்றம் சொல்வதோ,  குறை கூறுவதோ கிடையாது. இது ஒரு வரலாற்று ஆய்வு. ஆய்வு கட்டுரையாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர, மத வேறுபாடுகளை கூறும் கட்டுரையாக பார்க்க கூடாது.

ஆய்வுக்காக யூத வேதமான பைபிளின் பழைய ஏற்பாடு, கிறிஸ்துவ வேதமான பைபிளின் புதிய ஏற்பாடு, இஸ்லாமிய வேதமான திருக்குரான், ஆரிய வேதமான ரிக்வேம், உபநிடதங்கள், போன்ற நூல்களின் வசனங்களை கையாண்டுள்ளேன்.

பைபிள், குரான், ரிக், உபநிடதங்கள் இந்த நான்கு வேதங்களும் இந்தோ-ஈரானிய நிலப்பகுதி மக்களின்  வரலாற்றுக் கோட்டை நமக்கு ஓரளவு படம்பிடித்து காட்டுகின்றன.

இந்த நான்கு வேதங்களும் ஒற்றை கடவுளை வலியுறுத்துகின்றன. கடவுளை அடைய மூன்று வழிகளை பறைசாற்றுகின்றன.

பைபிள், குரான், ரிக், உபநிடதங்கள் இந்த நான்கும் 10 முக்கியமான வேதகால வரலாற்று கோட்டில் ஒன்றுபடுகின்றன.

1. உலக படைப்பு
2. ஆதாம், பிரம்மா என்ற முதல் மனித படைப்பு
3. கடவுளுக்கும் தேவர்களுக்குமான பனிப்போர்
4. தேவர்கள் மனிதர்களாக பிறத்தல்
5. நோவா, மச்ச அவதார கடல் பேரழிவு
6. ஆபிரகாம், இயேசு, நபிகள், கிருஷ்ண, சாயிபாபா அவதாரம்
7. மோசே கட்டளை, பிராமணிய ஸ்மிருதிகள்
8. பலியிடல், வேள்வி
9. ஒற்றை கடவுள் வழிபாடு
10. கடவுளின் இறுதி தீர்ப்பு

பைபிள், குரான், ரிக், உபநிடங்கள் இவைகளின் தொடக்கம் ஆபிரகாம் தான். ஆபிரகாம் என்ற ஒற்றை மனிதருக்கும் கடவுளுக்கும் ஏற்படும் ஒப்பந்தத்தில் துவங்குகிறது இந்த நான்கு வேதங்களும்.

யார் இந்த ஆபிரகாம்? ஆபிரகாம்&கடவுள் ஒப்பந்தத்தில் எப்படி பலநூறு மதங்கள் பிறந்தன. இன்று உலகின் 3ல் ஒரு பகுதி மக்களுக்கு ஆபிரகாம் தந்தையாக இருப்பது ஏன்? எல்லாவற்றிற்கும் மேலாக ஆரிய மதத்திற்கும் ஆபிரகாமிற்கும் என்ன தொடர்பு?

விரிவாக ஆய்வு செய்வதற்கு முன்னர் ஆபிரகாம் குறித்து பைபிளில் சொல்லப்படும் சிறு வராலாற்று சுருக்கத்தை பார்த்து விடலாம்.


உலகின் பழமையான நாகரீகங்களில் ஒன்றான மெசப்பட்டோமியாவில் பாய்கிறது யூப்ரிடிஸ் நதி. (தற்போது ஈரான் நாட்டில் உள்ளது). இந்த நதிக்கரை கழிமுகத்தில் அமைந்த நகரத்தின் பெயர் ஊர்.

ஊரில் கடவுள் சிலைகளை தயாரிக்கும் செல்வந்தராக வாழ்ந்து வருகிறார் ஆபிரகாமின் தந்தை தேராகு. ஊர் பகுதியில் பல கடவுள் வழிபாடு உள்ளது. குறிப்பாக நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், பெண்மை, விலங்கு, பாம்பு, சிங்கம், என அனைத்து இயற்கை தன்மைகளையும் கடவுளாக வழிபடும் வழிபாட்டு முறை இருக்கிறது.

இயற்கை கடவுள்களுக்கு சிலை செய்து தரும் பணியை செய்து வருகிறார் தேராகு. தோரகுவின் சிலை கடவுள்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரியதாக இருந்து வருகிறது. பொதுமக்கள் முதல் மன்னர் வரை கடவுள் சிலைகளை வணங்குகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் ஊர் பகுதியில் கடுமையான பஞ்சம் ஏற்படுகிறது. மக்கள் செத்து மடிய துவங்குகின்றனர். கடும் வறட்சி சிலை கடவுள்கள் மீதான நம்பிக்கையை குறைக்கிறது.

தேராகுவின் சிலைகளுக்கு சக்தி இல்லை என ஒருபகுதியினர் எதிர்க்கின்றனர். மக்கள் மற்றும் மன்னர் எதிர்ப்பை தொடர்ந்து தேராகு தனது மகன்களை அழைத்துக்கொண்டு வேறு பகுதிக்கு நாடோடியாக புறப்படுகிறார்..

வனாந்திரத்தின் வழியாக அலைந்து திரியும் தேராகுவின் குடும்பத்தினர் காரான் என்ற பள்ளத்தாக்கில் தங்கி வசிக்கின்றனர். தேராகு இங்கும் கடவுள் சிலைகளைத் தயாரிக்கும் பணியை செய்கிறார்.

மகன் ஆபிரகாமிற்கு தந்தையின் தொழில் பிடிக்கவில்லை. சிலை கடவுளால் தான் நாம் ஊரை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று என தந்தையிடம் கோபிக்கிறார். தந்தை தொழிலைத் தவிர்த்து ஆடுகளை மேய்க்கும் பணியைச் செய்கிறார் ஆபிரகாம்.

ஒருநாள் பகல் பொழுதில் வனாந்திரத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ஆபிரகாம் பாறை குன்றின் அடிவாரத்தில் படுத்து உறங்குகிறார். அப்போது திடீர் என ஒரு சத்தம் கேட்கிறது. ‘‘ஆபிரகாம் உன் கடவுள் பேசுகிறேன்’’ என்ற சத்தம் தான் அது.

‘‘ஆபிரகாம் நானே உன் கடவுள். என்னை அல்லாமல் வேறு கடவுள் இல்லை. சிலை வழிபாடுகளைத் தவிர்த்து நீ என்னை மட்டும் வணங்கு. நான் உன் சந்ததியினரை செழிக்கச் செய்வேன். உன் சந்ததியினருக்கு செழிப்பான கானான் நாட்டை பரிசளிப்பேன்’’ என்கிறது அந்த கடவுள் குரல்...

இந்த குரலில் இருந்து துவங்குகின்றன ஆபிரகாமின் மதங்கள்...

தொடரும்.