25/12/2019

இந்து என்றால் என்ன - இந்து மதம் 1

இந்து மதம் எங்கே தோன்றியது? இந்து மதத்தை தோற்றுவித்தவர் யார்? இந்து மதத்தின் வேதங்கள் என்ன? இந்து மதத்தின் கோட்பாடுகளும், வழிபாடு முறைகளும் என்னென்ன?

- இன்று வரை கலங்கிய குட்டையாக இருக்கும் இந்து மதத்தின் ஒருதுளி தெளிந்த நீரையாவது பிரித்து எடுக்கும் முயற்சி தான் இக் கட்டுரைத் தொடர்.

முதலில் இந்து என்ற பெயரியல் ஆய்வில் இருந்து துவங்குவோம்.

‘‘இந்து என்றால் திருடன் என்று பொருள்’’ - முத்தமிழ் அறிஞர் கலைஞர் கூறிய பிரபலமான விளக்கம் இது. உண்மையில் பாரசீக மொழியில் இந்து என்பதன் அர்த்தம் இது தான்.  - இந்த விவாதத்தில் இருந்து விலகி திராவிட மொழிகலான தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் இந்து என்பதன் அர்த்தத்தை தேடுவோம்.

தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் இந்து என்றால் நிலா என்று பொருள். பௌர்ணமியை முழுமதி என்றும், அமாவாசையை இந்துமதி என்றும் பழந்தமிழர் அழைத்தனர். சமஸ்கிருத ஜோதிட சூத்திரங்களில் அமாவாசை கடந்த மூன்றாம் பிறைக்கு இந்துமதி என்ற பெயர் வருகிறது. இருளை விலக்கும் நிலவை இந்துமதி என ஜோதிட நூற்கள் குறிப்பிடுகின்றன.

சிந்து, ஹிந்து, என்ற சொற்களில் இருந்து இந்து என்ற சொல் வேறுபட்டது. சிந்து என்பது சிந்து நதியையும், ஹிந்து என்பது ஹிந்துஸ்த்தான் நிலப்பரப்பையும் குறிப்பிட பயன்பட சொல். இந்து என்பது நிலவை குறிப்பிட பயன்பட்ட சொல்.

18ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் மதரீதியாக நாடுகள் பிரிந்து நின்றன. இந்த காலகட்டத்தில் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் வைக்கப்பட்ட பெயர் தான் ஹிந்து மதம்.

இந்தியாவில் இஸ்லாம், கிறிஸ்துவம் அல்லாத மற்றவர்களை ஹிந்துக்கள் என அடையாளப்படுத்தினர் ஆங்கிலேயர்கள். ஹிந்து என்ற ஆங்கில சொல்லிற்கு இந்து என தமிழில் மொழிமாற்றம் செய்தனர். இதனால் இந்து மதம் என்ற சொல் பிறந்தது.

உண்மையில் இந்து மதம் என்றால் கிறிஸ்துவம், இஸ்லாமியம் அல்லாத மதம் என்பது தான் அர்த்தம். அதை தாண்டி இந்து மதம் என்ற பெயரில் வேறு அர்த்தம் இல்லை.

சரி இனி இந்து மதத்திற்குள் செல்வோம்.

கிறிஸ்துவம், இஸ்லாமியம் அல்லாத மதம் என்றால் என்ன?

கிறிஸ்துவமும், இஸ்லாமியமும் ஒற்றை கடவுள் கொள்கையை போதிக்கின்றன. ஆனால் இந்தியாவில் பலதர கடவுள் கொள்கை பின்பற்றபடுகிறது. இந்தியாவில் வழிபடும் கடவுள்களை கணக்கிட்டால் இந்திய மக்கள் தொகையை விட அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நபரும் குறைந்தது 12க்கும் மேற்பட்ட கடவுள்களை வழிபடுகின்றனர். நேரத்துக்கு நேரம், நிமிடத்திற்கு நிமிடம் கடவுளை மாற்றி வழிபடும் முறை இந்தியாவில் இருக்கிறது.

ஒரு கடவுளிடம் திருப்தி கிடைக்கவில்லை என்றால் அடுத்த நொடியே அந்த கடவுளை மாற்றி வேறு கடவுளிடம் சரணடையும் வழக்கம் இந்திய மக்களிடம் இருக்கிறது. கடவுளை எதிர்த்து சாபம் இடும் துணிச்சல் இந்திய மக்களிடம் இருக்கிறது. இந்த துணிச்சல் ஒரு கிறிஸ்துவரிடமோ, இஸ்லாமியரிடமோ இல்லை.

கடவுள் தான் எல்லாம். கடவுளை மீறிய ஒரு மனித உறவு எங்களிடம் இல்லை என்பது கிறிஸ்துவம், இஸ்லாமியம் போதிக்கும் கொள்கை. ஆனால் இந்திய மக்கள் அப்படி அல்ல. கடவுள் மூன்றாம் நபராக தான் நிற்கிறார். வாசற்படிக்கு வெளியே நிற்கும் கடவுள்கள் தான் இங்கு ஏராளம்.

கடவுளை மூன்றாம் பட்சமாக கருதும் மக்களை இந்துமதம் என்ற வட்டத்திற்கும் கொண்டுவந்தனர் ஆங்கிலேயர்கள். மனிதனை விட கடவுள் பெரிதானவர் அல்லர் இது தான் இந்துமத கொள்கை. கிறிஸ்துவம், இஸ்லாமியத்தில் கடவுளே உயர்ந்தவர். இந்து மதத்தில் மனிதனே உயர்ந்தவர். இவ்வளவு தான் வேறுபாடு.

இந்துமதம் என்ற பெயர் தோன்றி 200 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் இந்துமதத்தில் பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளின் தோற்ற காலம் கணக்கிட முடியாதது. ஏனென்றால் ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்து முக்கோடி கடவுள்களை கொண்ட வழிபாட்டு முறை இது.


இன்று இந்துமத கடவுள்களாக உச்சத்தில் இருக்கும் சிவன், விஷ்ணு, ராமர், கணபதி, முருகன், துர்க்கை, சரஸ்வதி, என்ற கடவுள்கள் எல்லாம் காலத்தால் மிகவும் பிற்பட்டவர்கள்.

இன்றைய இந்துமத வழிபாட்டு நெறிகளும் காலத்தால் பிற்பட்டவைகளே. இந்துமத வழிபாட்டு நெறிகள் வேறு, முறைகள் வேறு! நெறிகளுக்கும் முறைகளுக்கும் எதிர்எதிர் வேறுபாடுகள் உண்டு!

இந்து மதத்தை ஓரளவாவது புரிந்துகொள்ள இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்க வேண்டும். கன்னியாகுமரி முதல் கைலாசம் வரை ஒவ்வொரு குக்கிராமங்களிலும் குறைந்து 3 நாட்களாகவது தங்கி ஆராய வேண்டும். ஒவ்வொரு சதுர கிலோமீட்டரிலும் வெவ்வேறு வழிபாட்டுமுறையை பின்பற்றும் புதிருக்கும் புதிரான புதிர் தான் இந்து மதம்.

ஆங்கிலேயர்கள் இந்திய முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை இந்துமதத்தின் வேரும், வேதமும், நிறுவனரும்.

எதை இந்து மதம் என்பது? யாரை இந்துமதத்தின் கடவுள் என்பது? இந்துமதத்தின் குருக்கள் என யாரை அங்கீகரிப்பது? - விடை கிடைக்காத ஆங்கிலேயர்கள், கிறிஸ்துவம், இஸ்லாமியம் அல்லாதவர்கள் இந்துக்கள் என்ற ஒற்றை முத்திரையில் ஒதுக்கி தள்ளினர். அந்த ஒதுக்கம் தான் இன்று இந்துமதம் என்ற ஆலமரகூட்டமாக காட்சி அளிக்கிறது.

ஆங்கிலேயர் தோற்றுவித்த இந்து மதத்தின் முன்னோடி சனாதன மதம். இந்துமதத்தின் அதே நோக்கம் தான் சனாதன மதத்தின் நோக்கமும்.,

இந்திய ஒற்றுமைக்கு வித்திட்ட சனாதன மதம் குறித்து அடுத்த பதிவில்..

தொடரும்...

No comments:

Post a comment