03/12/2019

ஆதிபைபிள் - ஆபிரகாமின் மதங்கள் 2

யூதம் மற்றும் கிறிஸ்துவ மதங்களின் வேதம் பைபிள். பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரு பெரும் பிரிவுகளாக பைபிள் தொகுக்கப்பட்டு உள்ளது. பழைய ஏற்பாடு யூதம் மற்றும் கிறிஸ்துவ மதங்களின் பொது வேதமாவும், புதிய ஏற்பபாடு கிறிஸ்துவர்களின் வேதமாகவும் உள்ளது.

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார் என்ற வசனத்தில் துவங்குகிறது பைபிள். உலக படைப்பு, மனிதபடைப்பு, மனிதர்களை வழிநடத்த கடவுள் தூதர்கள் அவதாரம் எடுத்தல், பாவத்தை நீக்கி பரலோகம் என்ற கடவுளின் ஆட்சிக்கு மனிதர்களை தயார்படுத்துதல் என்ற அடிப்படையில் பைபிள் கோட்பாடுகள் அமைந்துள்ளன.

முதலில் பைபிள் காலகோடுகளை சுருக்கமாக பார்த்துவிடுவோம்

வானம், பூமி, வெளிச்சம், இருள், கடல், நட்சத்திரங்கள், சூரியன், தாவரங்கள், விலங்குகள், என ஒட்டுமொத்த உலகத்தையும் 6 நாட்களில் படைக்கிறார் கடவுள். 7ம்நாளில் ஓய்வாக இருக்கிறார்.

வானுலகை தேவர்கள் ஆட்சி செய்வது போல, பூமியை ஆட்சி செய்ய மனிதனை படைக்கிறார். மண்ணை எடுத்து தன்னுடைய சாயலைபோல ஒரு பொம்மை செய்கிறார். அந்த பொம்மைக்கு தன்னுடைய சுவாச காற்றை ஊதி உயிர் தருகிறார். உயிர் பெற்ற மனிதனுக்கு ஆதாம் என பெயரிடுகிறார். ஆதாமுக்கு துணையாக ஆதாமின் விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணை படைக்கிறார். அந்த பெண்ணை ஆதாமிடம் ஒப்படைக்கிறார். தன் பெண்ணுக்கு ஏவாள் என பெயரிடுகிறார் ஆதாம்.

ஆதாம் மற்றும் ஏவாளுக்கு ஏதேன் என்ற பழத்தோட்டத்தை கடவுள் பரிசளிக்கிறார். அந்த தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் பழத்தை மட்டும் உண்ணக் கூடாது என கட்டளையிடுகிறார்.

கடவுளின் கட்டளைக்கு ஏற்ப ஆதாமும் ஏவாளும் பழத்தோட்டத்தில் மனம் மகிழ்ந்து வாழ்கின்றனர், அனைத்து பழத்தையும் உண்டு மகிழ்கின்றனர். கடவுள் தவிர்க்க சொன்ன ஒரு பழத்தை மட்டும் உண்ணவில்லை. தினமும் கடவுளை துதித்து மகிழ்விக்கின்றனர். மகிழ்ச்சியடைந்த கடவுள் ஆதாம் ஏவாள் மூலமாக பூமி முழுவதும் மனிதர்களை பரப்ப நினைக்கிறார். ஆதாம் ஏவாளுக்கு வாரிசு வரம் கொடுக்கிறார்.

ஆதாம் ஏவாளுக்கு வாரிசு வரம் கொடுக்கும் கடவுளின் முடிவு தேவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பூமியில் மேலும் மனிதர்களை பெருக்க கூடாது என தேவர்கள் கடவுளிடம் முறையிடுகின்றனர். தன்னுடைய படைப்பில் தலையிட கூடாது என்று தேவர்தலைவனை கடவுள் கடிந்து கொள்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தலைவன் மனிதனை கடவுளுக்கு எதிராக திருப்ப சதித்திட்டம் தீட்டுகிறார்.

பூமிக்கு வந்த தேவதலைவன் ஆதாமின் மனைவி ஏவாளிடம் சூசகமாக பேசுகிறார். கடவுள் உங்களை வேலைக்காரராக தான் வைத்திருக்கிறார். தான் சொல்வதை கேட்டால் தன்னை போல தேவதூதனாக சொர்க்கத்தில் நுழையலாம். கடவுள் உண்ணக்கூடாது என்ற பழத்தை ஆதாமும் ஏவாளும் உண்ணும்படி தேவதலைவன் சொல்கிறான். ஆசை வார்த்தைக்கு மயங்கிய ஏவாள் கடவுளின் கட்டளையை மீறி பழத்தை உண்கிறாள். ஆதாமையும் உண்ண செய்கிறாள்.


தேவ உலகம் சென்ற தலைவன் கடவுளின் பிரியமான படைப்பு கடவுளின் கட்டளையை மீறிவிட்டதாக கடவுளை ஏளனம் செய்கிறார். கோபம் அடைந்த கடவுள் ஆதாமையும், ஏவாளையும் சபிக்கிறார். இனி நீங்கள் மரணத்தை சந்திப்பீர்கள். உங்கள் வாரிசுகளும் மரணத்தை சந்திக்கும் என சாபமிடுகிறார். மனிதர்களை வஞ்சித்த தேவர்தலைவனையும் பூமிக்கு துரத்தி விடுகிறார்.

பூமீக்கு வந்த தேவர் தலைவன் மனிதனை ஏமாற்றியதைப் போல தாவரம், விலங்குகளையும் தன்வசப்படுத்தி கடவுளுக்கு எதிராக செயல்படுகிறார். இதானல் கடவுள் மற்றும் தேவதலைவன் என்ற இருபெரும் ஆளுகை பூமியில் வளரத்துவங்குகிறது. 

கடவுளை வணங்குபவர்கள் குறைவாகவும், தேவதலைவனை வணங்குபவர்கள் அதிகமாகவும் பெருகுகின்றனர். பூமியில் தேவதலைவனின் ஆளுகை தேவஉலகின் தேவர்களையும் வியக்க வைக்கிறது.

மனித பெண்களின் அழகை பார்த்து மயங்கிய பல தேவர்கள் தேவஉலகை விட்டுவிட்டு பூமிக்கு வருகின்றனர். பெண்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்கின்றனர். தேவர்-மனிதர் கலப்பால் அசுரர்கள் என்ற புதிய இனமும் பூமியில் பெருக துவங்குகிறது.

அசுர இனத்தை பெருக்கி தேவஉலகில் இருந்து கடவுளை துரத்துவது தான் தேவ தலைவனின் திட்டம். இதை தெரிந்து கொண்ட கடவுள், பூமியை அழிக்க திட்டமிடுகிறார்.

கடவுளை வணங்கிய விலங்குகளும், மனிதர்களும் தங்களை அழிக்க கூடாது என கடவுளிடம் வேண்டுகின்றனர். இதனால் இறக்கம் அடைந்த கடவுள் மனிதன் உட்பட எல்லா உயிர்களின் ஆண்&பெண் ஜோடியை தேர்ந்தெடுத்து காப்பாற்றுகிறார். அப்படி கடவுள் தேர்ந்தெடுத்த மனிதன் தான் நோவா.

நோவாவின் குடும்பம் மற்றும் அனைத்து உயிர்களின் தேர்ந்தெடுத்த ஜோடிகள் ஒரு பெரிய கப்பலில் அடைக்கபடுகின்றன. பின்னர் கடல் வெள்ளத்தால் பூமியை அழிக்கிறார் கடவுள். கடலுள் மூழ்கிய பூமி 40 நாட்கள் கடந்து திரும்ப நிலப்பரப்பை உண்டாக்குகிறது. கப்பலில் காக்கப்பட்ட நோவா உட்பட உயிர்கள் புதிய உலகில் வாழ துவங்குகின்றன. இனி உலகை அழிக்க மாட்டேன் என உயிரினங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார் கடவுள்.

புதிய உலகில் மீண்டும் தேவதலைவன் ஆதிக்கம் செலுத்துகிறார். கடவுளை வணங்கும் மக்கள் குறைந்து தேவதலைவனை வணங்கும் மக்கள் அதிகரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் எல்லா மக்களும் தேவதலைவனையே வணங்குகின்றனர். கடவுளை வணங்க ஒருவர் கூட இல்லாத நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் பூமியை அழிக்க முடிவுசெய்கிறார் கடவுள். ஆனால் இனி பூமியை அழிக்க மாட்டேன் என்ற வாக்குறுதி தடுக்கிறது. இதனால் தன்னை மட்டும் வணங்கும் ஒரு மனித சமூகத்தை ஏற்படுத்த கடவுள் முடிவு செய்கிறார். அதற்காக ஆபிரகாம் என்ற மனிதனை தேர்ந்தெடுத்து அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்கிறார்.

தொடரும்..

No comments:

Post a comment