05/12/2019

இஸ்ரவேலர் - ஆபிரகாமின் மதங்கள் 3

ஆடு மேய்க்கும் ஆபிரகாமிடம் கடவுள் பேசுகிறார். ‘‘நானே உண்மையான கடவுள். என்னை மட்டும் வணங்கு. என்னை வணங்கினால் உன்னையும் உன் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பேன். நாடோடியான உனக்கு சொந்தமாக கானான் என்ற நாட்டை பரிசளிப்பேன். அந்த நாட்டில் உன் சந்ததியினர் பெருகி வாழ்வார்கள்’’ என்கிறார் கடவுள்.

கடவுளின் பேச்சை நம்பிய ஆபிரகாம், கானான் தேசத்திற்கு புறப்படுகிறார். சிலைகளை வணங்கும் ஆபிரகாமின் தந்தை தேராகு, ஆபிரகாமின் பேச்சை கேட்கவில்லை.

தன் பேச்சை நம்பும் மனைவி, சகோதரர், மற்றும் உறவினருடன் கானான் தேசம் நோக்கி புறப்படுகிறார் ஆபிரகாம். நெடுதூரம், நெடுங்காலம் பயணித்தும் கானான் தேசத்தை கண்டறிய முடியவில்லை. கடுமையான பஞ்சம் வரவே எகிப்து நாட்டில் தஞ்சம் அடைகின்றனர்.

எகிப்து மன்னர் பாரோன் பெண்களை கவர்வதில் வல்லவன். ஆபிரகாமின் மனைவி சாராள் மிகவும் அழகானவள். சாராள் தன் மனைவி என்றால் தன்னைக் கொன்று விடுவார்கள் என்பதால், ‘தங்கை’ என பொய் சொல்லி விடுகிறார் ஆபிரகாம். எனவே பாரோன் சாராளை தன் அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

அந்தப்புரத்தில் இருக்கும் மனைவியை மீட்டுத் தர கடவுளிடம் வேண்டுகிறார் ஆபிரகாம். பாரோன் மன்னனுக்கு கடுமையான நோய் வருகிறது. இதை தொடர்ந்து சாராளை விடுவிக்கிறான் மன்னன். சாராளுக்கு உதவியாக ஒரு எகிப்திய பணிப்பெண்னையும் அனுப்பி வைக்கிறார்.

எகிப்தில் இருந்து புறப்படும் ஆபிரகாம் கூட்டம் கானான் நாட்டை தேடி அலைகிறது. மீண்டும் வனாந்திரத்தில் தங்குகின்றனர்.

சாராளுக்கு குழந்தை இல்லாததால் எகிப்திய பணிப்பெண் மூலமாக ஒரு குழந்தை பெறுகிறார் ஆபிரகாம். அந்த குழந்தைக்கு இஸ்மாயில் என தேவதூதர் பெயரிடுகிறார். கடவுளின் வாக்குறுதி படி சாராளும் ஒரு குழந்தை பெறுகிறாள். அந்த குழந்தைக்கு ஈசாக் என பெயரிடுகிறார் ஆபிரகாம்.

ஈசாக்குக்கு போட்டியாக மாறிவிட கூடாது என்பதால் கடவுளால் வேறு தேசத்திற்கு அனுப்பப்படுகிறார் இஸ்மாயில்.

ஆபிரகாமிடம் ஈசாக்கை நரபலி கேட்கிறார் கடவுள். கடவுளின் கட்டளையை ஏற்று ஈசாக்கை நரபலி கொடுக்க துணிகிறார் ஆபிரகாம். ஆபிரகாமின் விசுவாசத்தை கண்டு வியந்த கடவுள், ஈசாக்குக்கு பதில் ஆடு ஒன்றை பலியிட செய்கிறார். பின்னர் கானான் தேசம் நோக்கி புறப்பட கூறுகிறார் கடவுள்.  கானான் தேசம் செல்லும் வழியில் ஆபிரகாம் இறந்து விடுகிறார்.

ஈசாக் தலைமையில் கானான் பயணம் தொடர்கிறது. ஈசாக்குவிற்கு 2 மகன்கள் பிறக்கின்றனர். இதில் இளைய மகன் யாக்கோப்புக்கு ஈசாக்கிடம் இருந்து தந்திரமாக ஆசிர்வாதம் வாங்கிவிடுகிறார் ஈசாக்கின் மனைவி ரெபேக்கா.

ஈசாக்கை தொடர்ந்து யாக்கோபு கானான் பயனத்தை தொடர்கிறார். நீண்ட காலம் கடந்தும் கானான் தேசம் கிடைக்காததால் ஆபிரகாமின் கடவுள் மீது சந்தேகம் வருகிறது. பலர் மீண்டும் சிலை வழிபாட்டை தொடங்குகின்றனர். 


இந்த நிலையில் மோசே என்பவருக்கு அக்னி வடிவில் கடவுள் காட்சியளிக்கிறார். கடவுளின் கட்டளைக்கு ஏற்ப ஆபிரகாமின் சந்ததியினரை கானான் தேசம் நோக்கி அழைத்து செல்கிறார் மோசே.

இப்போதும் நெடுங்காலம், நெடுந்தூரம் கடந்தும் கானான் தேசம் கிடைக்கவில்லை. மோசேவுக்கும் வயதாகிறது. கடவுளின் உறுதியான முடிவை அறிய சீனாய் என்கிற மலைக்கு தியானம் செய்ய செல்கிறார் மோசே.

பலநாட்களாக மோசே திரும்பி வரவில்லை. இதனால் ஆபிரகாமின் கடவுள் தவிர்த்து மக்கள் மீண்டும் சிலை வழிபாட்டை துவங்குகின்றனர். ஐம்பொன்னால் நந்தி சிலையை செய்து வழிபடுகின்றனர். நந்தி வழிபாடு மக்களிடம் புகழ்பெறுகிறது. 

ஒருகட்டத்தில் மோசே திரும்ப வருகிறார். கடவுள் தனக்கு அளித்த 10 கட்டளைகளை மக்களிடம் விளக்கி சொல்கிறார். ஒரு பகுதியினர் மோசேயின் விளக்கத்தை ஏற்கவில்லை. நந்தி வழிபாட்டையே தொடர்கின்றனர். இறுதியில் மோசேயும் இறந்து விடுகிறார். மோசேவுக்கு பின் அவரது உதவியாளர் யோசுவா தலைமை தாங்கி கானான் நாட்டை தேடி புறப்படுகின்றனர். நந்தி வழிபாட்டை தொடர்பவர்கள் வேறு திசையில் பயணிக்கின்றனர்.

மோசேவின் 10 கட்டளைகளை பின்பற்றி யோசுவாவின் பின் சென்றவர்கள் யாக்கோபு தலைமையில் கானான் நாட்டை அடைந்தனர்.

யாக்கோபின் பெயரை இஸ்ரவேல் என மாற்றம் செய்கிறார் கடவுள். இஸ்ரவேலின்(யாக்கோபின்) 12 பிள்ளைகள் தங்களுக்குள் கானான் நாட்டை பிரித்து கொள்கின்றனர். 12 பேரும் 12வம்சமாக பல்கி பெருகுகின்றனர். இந்த 12 வம்சங்களே இஸ்ரவேலர் என அழைக்கப் படுகின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் தான் யூத வம்சம்.

12 இஸ்ரவேலரும் மோசேயின் 10 கட்டளைகளை தங்களின் வேதமாக ஏற்று கடவுளை வழிபாடுகின்றனர்.

1. நானே உங்கள் கடவுளாகிய கர்த்தர். 2.என்னைத் தவிர சிலைகளை வணங்க கூடாது. 3. கடவுளின் பெயரை வீணாக பயன்படுத்த கூடாது. 4.ஓய்வு நாளில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். 5.பெற்றோரை மதிக்க வேண்டும். 6.கொலை செய்ய கூடாது, 7.விபசாரம் செய்யக் கூடாது. 8.திருட கூடாது. 9.பொய்சாட்சி சொல்ல கூடாது. 10.பிறர் மனைவியை கவர கூடாது. என்பவைகள் தான் மோசேவின் 10 கட்டளைகள்.

இஸ்ரவேலர்கள் செழிபுற்று இருந்த கானான் நாட்டில் மீண்டும் பஞ்சம் வருகிறது. இதனால் 12 வம்சத்தினருக்கு இடையில் கடவுள் வழிபாடு குறித்த மோதல் ஏற்படுகிறது. கொடிய வறட்சி தொடரவே இறுதியில் கானான் நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் எகிப்தில் தஞ்சமடைகின்றனர். பின்னர் எகிப்து மன்னர் கட்டுப்பாட்டில் இருந்து தங்களை மீட்க கோரி கடவுளை வேண்டுகின்றனர்.

எகிப்தில் இருக்கும் இஸ்ரவேல் மக்களை மீட்க கடவுள் ஒவ்வொரு மீட்பராக அனுப்புகிறார். அதில் இறுதி மீட்பர் யார் என்பதில் தான் யூதம், கிறிஸ்துவம், இஸ்லாமியம் ஆகிய பெரும் மதங்கள் பிரிகின்றன. 

இறுதி மீட்பர் இன்னும் வரவில்லை என்பவர்கள் யூதமதமாகவும், இயேசு கிறிஸ்து தான் இறுதிமீட்பர் என்பவர்கள் கிறிஸ்துவ மதமாகவும், முகமது நபிகள் தான் இறுதி மீட்பர் என்பவர்கள் இஸ்லாமிய மதமாகவும் பிரிகின்றனர்.

இறுதி அவதாரம் இயேசு கிறிஸ்துவா?, முகமது நபிகளா?, கல்கியா? அடுத்த பதிவில்..

தொடரும்... 

No comments:

Post a comment