06/12/2019

கிறிஸ்துவம், இஸ்லாமியம் - ஆபிரகாமின் மதங்கள் 4

எகிப்தில் அடிமைப்பட்டு கிடந்த இஸ்ரவேலர்கள் இறுதி மீட்பர் வருவார் என காத்திருந்தனர்.

இந்த நிலையில் மரியாள் யோசேப்பு தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் இயேசு. தேவதூதன் அருளால் மரியாள் கருத்தரித்தார் என்கிறது பைபிளின் புதிய ஏற்பாடு.

இயேசு கிறிஸ்துவின் வரலாறு 30 வயதில் இருந்தே துவங்குறது.

தண்ணீரில் மூழ்க செய்து பாவங்களுக்கு மன்னிப்பு தரும் பணியை செய்துவருகிறார் யோவான். ஒருநாள் இயேசு தண்ணீரில் முழ்க வருகிறார். இயேசு தண்ணீரில் மூழ்கி எழுந்ததும், வானத்தில் இருந்து ‘இவர் என் குமாரன்’ என்ற சத்தம் கேட்கிறது. மகிழ்ந்த யோவான் இவரே இஸ்ரவேல் மக்களை மீட்க வந்த இறுதி மீட்பர் என அறிவிக்கிறார்.

மலைக்குன்று ஒன்றில் தியானம் செய்யும் இயேசுவை பிசாசு(கடவுளால் துரத்திவிடப்பட்ட தேவதலைவன்) சோதிக்கிறான். பிசாசின் ஆசை வார்த்தைக்கு மயங்காமல் இயேசு கடவுளை மட்டுமே வணங்குகிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்த கடவுள் பரிசுத்த ஆவியாக இயேசுவுக்குள் இறங்குகிறார்.

அன்று முதல் இயேசு கிறிஸ்து என அறியப்படுகிறார். தன் போதனைகளை மக்களிடம் பரப்ப 12 சீடர்களை சேர்த்துக் கொள்கிறார். தேவ ஆலயங்களில் வியாபாரம் செய்ய கூடாது, சிலை வழிபாடு கூடாது என புரட்சி செய்கிறார்.

இதனால் கோபம் அடைந்த யூத மதத்தினர் இயேசுவை தேவ ஆலயத்தில் இருந்து அடித்து விரட்டுகின்றனர். மூன்றே நாளில் தேவ ஆலயத்தை இடித்து மீண்டும் கட்டுவேன் என சவால் விடுகிறார். தேவ ஆலயத்தை இடிப்பேன் என்ற இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்கின்றனர் யூதர்கள்.

இயேசு கடவுளுக்கு எதிராக செயல்பட்டார். தேவ ஆலயத்தை இடிக்க முயற்சித்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்படுகிறது. சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுகிறார்.

இறந்த இயேசுவின் உடலை கல்லறையில் வைத்து பூட்டுகின்றனர். மூன்றாம் நாள் கல்லறை திறந்து கிடக்கிறது. இயேசு கல்லறையில் இருந்து உயிருடன் வெளியே வந்ததை சிலர் பார்த்ததாக கூறுகின்றர். பலர் நம்ப மறுக்கின்றனர். தொடர்ந்து இயேசு தம் சீடர்களுக்கும் காட்சி அளிக்கிறார். பின்னர் சீடர்கள் முன்னால் மேகங்களுக்கு நடுவே மறைந்து வானுலகம் சென்று விடுகிறார்.

இயேசுவின் சீடர்கள் கிறிஸ்துவ மதத்தை பரப்புகின்றனர்.

இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கர்த்தர் ஒருவரே கடவுள். அவரின் ஒரே குமாரன் இயேசுகிறிஸ்து பூமியில் பிறந்து மரித்து மீண்டும் உயிர்த்து எழுந்தார். இதனால் உலக மக்களின் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டது. எனவே இஸ்ரவேலர் மட்டுமல்ல உலக மக்கள் அனைவருமே கடவுளின் பிள்ளைகள் தான்.

இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார். அவர் வருகையில் இறந்தவர்கள் எல்லாம் உயிருடன் எழுவார்கள். கடவுளின் முன்னிலையில் மனிதர்களின் பாவக்கணக்கு பார்க்கப்படும். நல்லவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள். பாவிகள் நரகத்திற்கு செல்வார்கள். சொர்க்கத்தில் இயேசுகிறிஸ்துவின் நல்லாட்சி நடைபெறும். - இதுவே இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை குறித்த கிறிஸ்துவ மத நம்பிக்கை.

"பரலோகத்தில் இருக்கிற இயேசு கிறிஸ்து சீக்கிரம் வருகிறார். எனவே பாவிகளே மனம்திருந்தி இயேசுவை ஏற்றக்கொள்ளுங்கள்". - இந்த செய்தியை உலகின் அனைத்து மக்களுக்கும் அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்துவனின் கடமையாக உள்ளது. அதை செயல்படுத்துவதில் தான் பிரச்சனைகள். கிறிஸ்துவத்தில் இத்தனை பிரிவினைகள்.

இனி இஸ்லாமியம் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.

இயேசுவுக்கு பின்னர் வந்தவர் முகமது நபிகள். யூதர்கள் இயேசுவை மீட்பராக ஏற்கவில்லை. குற்றவாளியாகத் தான் இன்றும் கருதுகின்றனர். இஸ்ரவேலர் மற்றும் ஆபிரகாமின் பிற சந்ததியினர் மீட்பர் வருவார் என காத்திருந்தனர்.

இந்நிலையில் 5ம் நூற்றாண்டில் அரேபியாவில் பிறக்கிறார் முகமது. 40 வயது வரை முகமது சாதாரண மனிதராக தான் இருந்தார். ஒரு நாள் மலைகுகையில் வைத்து கடவுள் தூதர் முகமதுவிடம் பேசினார். அன்று முதல் முகமது நபிகள் என அறியப்பட்டார். 

இயேசு கிறிஸ்துவை போல முகமது நபிகளும் தேவ ஆலயத்தில்(மசூதியில்) வியாபாரம் கூடாது என புரட்சி செய்தார். மக்காவில் உள்ள வழிபாடு இடத்தில் சிலை வழிபாட்டை எதிர்த்து குரல் கொடுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் முகமது நபிகளை கொல்ல திட்டம் தீட்டினர். முகமது நபிகள் வனாந்திரத்தின் வழியாக தப்பித்து மதினா என்ற இடத்திற்கு சென்றார். மதினாவில் தொழுகையிடம் கட்டி எழுப்பினார்.
முகமது நபிகளுக்கு கடவுள் தொடர்ந்து கட்டளைகளை தந்து கொண்டு இருந்தார். இறுதி காலத்தில் மக்காவுக்கு திரும்பி வந்த முகமது நபிகள் மக்காவை மீட்டு புனிதப்படுத்தினார். மக்காவில் இருந்து இஸ்லாமிய கொள்கைகளை போதித்தவர், மக்காவிலேயே இறந்தார்.

கடவுளை(அல்லா) மட்டுமே வணங்க வேண்டும். மக்காவுக்கு புனித பயணம் செய்ய வேண்டும். இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பவைகளே இஸ்லாமியத்தின் முக்கிய கொள்கைகள்.

முகமது நபிகளே இறுதி மீட்பர். அவருக்கு பின் இனி மீட்பர்கள் வரமாட்டார்கள். இறுதி காலத்தில் கடவுள் நேரடியாக வருவார். மனிதர்களின் பாவ கணக்கிற்கு ஏற்ப சொர்க்கம் அல்லது நரகம் கிடைக்கும். - இதுவே இஸ்லாமிய மதக் கொள்கைகளின் சுருக்கம்.

யூதர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்துவர்கள் முகமது நபிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஒரே கடவுள், பிசாசு, ஆதாம், நோவா, ஆபிரகாம், ஈசாக், இஸ்மாயில், மோசே, இஸ்ரவேல், இறுதி மீட்பர் வருவார் என்கிற ஆதிபைபிளை மூன்று மதத்தினரும் ஏற்கின்றனர். 

யூதர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் மூவருக்கும் கடவுள் ஒருவர் தான். கடவுளின் வேதத்தை அளித்தவர் யார் என்பதில் தான் வேறுபடுகின்றனர்.

மோசேவின் வேதத்தை மட்டும் ஏற்பவர்கள் யூதர்கள். மோசே மற்றும் இயேசுகிறிஸ்துவின் வேதத்தை ஏற்பவர்கள் கிறிஸ்துவர்கள். மோசே, இயேசுகிறிஸ்து மற்றும் முகமது நபிகளின் வேதங்களை ஏற்பவர்கள் இஸ்லாமியர்கள்.

மோசே மற்றும் இயேசுகிறிஸ்துவின் வேதங்களை ஏற்றாலும் பைபிளை வேதமாக இஸ்லாமியர்கள் ஏற்பதில்லை. மாறாக மோசே மற்றும் இயேசுகிறிஸ்துவின் வேதங்கள் அடங்கிய திருக்குரானை வேதமாக ஏற்கின்றனர்.

திருக்குரான் என்பது முகமது நபிகளால் சொல்லப்பட்ட பல உரைகளின் தொகுப்பு. முகமது நபிகள் மறைவுக்கு பின்னர் அவரது நண்பர் அபுபக்கரால் தொகுக்கப்பட்டது. 

அடுத்த பதிவில் ஆபிரகாமின் ஆரியமதம் குறித்து பார்ப்போம்..

தொடரும்...

No comments:

Post a comment