07/12/2019

ஆரிய மதம் - ஆபிரகாமின் மதங்கள் 5

கானான் தேசத்தை தேடி புறப்பட்ட ஆபிரகாம் மக்களில் ஒரு பிரிவினர் கடவுளை நந்தி சிலையாக வணங்கினர். நந்தி சிலை முன்பு பூசைகள் மற்றும் யாகங்கள் செய்வதால் மழை பெய்கிறது. இந்த ஒற்றை அதிசயத்தில் துவங்குகிறது ஆரிய மதம்.

கானான் நாட்டிற்கு செல்லாமல் ஆரிய நிலத்திலேயே நாடோடிகளானவர்கள் ஆரியர்கள் எனப்பட்டனர். இவர்களே வால்கா நதி முதல் கங்கை நதிவரை பயணித்த நாடோடி குழுவினர்.

ஆதாம், நோவா, ஆபிரகாம், மோசேவுக்கு பின்னர் இவர்கள் வரலாறு முழுவதும் அசுரர்களுடனான சண்டையாக உள்ளது. பைபிளில் நோவாவுக்கு பின்னர் அசுரர்கள் குறித்த குறிப்புகள் இல்லை. இஸ்ரவேலர்களுடைய போராட்டம் அனைத்தும் எகிப்திய மன்னர்களை சுற்றியே வருகிறது. ஆனால் ஆரியர்களின் போராட்டம் அனைத்தும் அசுரர்களை சுற்றி வருகிறது.

ரீக்வேதம், சாமவேதம், யசுர்வேதம், அதர்வண வேதம் என்ற நான்கு வேதங்கள், உபநிஷத்துக்கள், பிராமணியங்கள் ஆகியவை ஆரிய வேதங்களாக உள்ளன. இவை அனைத்தும் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்திய நிலப்பகுதிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கின்றன.

ரிக் வேதம், ஐத்ரேய உபநிடதம், மனுஸ்மிருதி, இவற்றில் குறிப்பிட்டுள்ள ஆரியமத வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம்.

‘‘ஆதியிலே கடவுள் மட்டும் இருந்தார். நான் உலகை படைப்பேன் என கடவுள் நினைத்தார்’’ என்று துவங்குகிறது ரிக் வேதத்தின் ஐத்ரேய உபநிடதம். 

கடவுள் உலகை படைக்க நினைத்தார். முதலில் 1.அம்பலோகம், 2.ஸ்வர்க்கலோகம், 3.மரீசிலோகம், 4.மரலோகம், 5.அபலோகம் என்ற ஐந்து உலகங்களை படைக்கிறார். இந்த உலகங்களை ஆளுகை செய்ய கடல் நீரை திரட்டி புருசனை படைத்தார். (புருசனை பிரம்மா என மனுஸ்மிருதி கூறுகிறது).

புருசன்(பிரம்மா) வாயில் வந்த பேச்சில் இருந்து நெருப்பு தோன்றியது. மூக்கில் வந்த மூச்சிலிருந்து காற்று தோன்றியது., கண்களில் வந்த பார்வையில் இருந்து சூரியன் தோன்றியது. காதுகளில் வந்த கேள்வியில் இருந்து திசைகள் தோன்றின. தோலில் முடிகளில் இருந்து செடி கொடி தாவரங்கள் தோன்றின. இதயத்தில் இருந்து மனமும் நிலவும் தோன்றியது. தொப்புளில் இருந்து பசியும், மரணமும் தோன்றியது. ஆண்குறியில் வந்த விந்தில் இருந்து தண்ணீர் தோன்றியது.

இப்படி தோன்றிய அனைத்தையும் பிரம்மா கடலில் வீசினார். கடலில் தத்தளித்த படைப்புகளை ஆளுகை செய்ய பசுவையும், குதிரையையும் அளித்தார். ஆனால் படைப்புகள் அவற்றை ஏற்க மறுத்தன. பின்னர்  தன் சாயலில் சுயம்பு மனிதனை அளித்தார். சுயம்பு மனிதனை அனைத்து படைப்புகளும் ஏற்றுக்கொண்டன.

சுயம்பு மனிதனுக்குள் நெருப்பு பேச்சாகவும், காற்று மூச்சாகவும், சூரியன் பார்வையாகவும், திசைகள் ஒலியாகவும், தாவரங்கள் முடியாகவும், சந்திரன் இதயமாகவும், மரணம் பசியாகவும், தண்ணீர் விந்தாகவும் நுழைந்து கொண்டன.

ஆனாலும் மனிதன் முழுமை பெறாமல் இருந்தான். படைப்புகளை ஆளுகை செய்யும் திறன் மனிதனுக்கு வரவில்லை. இதனால் கடவுளே மனிதனின் உச்சந்தலையை பிளந்து மனிதனுக்குள் ஆத்மாவாக நுழைந்தார்.

ஆத்மாவாக மனிதனுக்குள் நுழைந்த கடவுள் அனைத்து படைப்புகளையும் பார்த்தார். பார்ப்பது எல்லாம் கடவுளாகவே தெரிந்தது. தானே எல்லாமுமாக இருக்கிறேன் என கடவுள் உணர்ந்தார். 

ஆத்மாவாக கடவுள் நுழைந்தாலும் பசி, காமம், மரணம் என்பவை மனிதனுள் இருந்தது. இவற்றில் இருந்து ஆத்மா விடுபட்டு மீண்டும் கடவுளாக வேண்டும்.

ஆத்மாவை கடவுளாக மாற்ற பிராமணியத்தை மனிதனுக்கு போதித்தார் பிரம்மா. பசி, காமம், மரணம் இவற்றில் இருந்து விடுபடும் மனிதர்கள் தேவர்களாக நித்திய வாழ்வு வாழ்வார்கள். தேவர்களே கடவுளாக போற்றப்படுவார்கள். 

மச்ச அவதாரம்

கடவுள், படைப்புகளுடன் ஆத்மாவாக இரண்டற கலந்து விட்டார். படைப்புகளில் சிறந்து மனிதன். மனிதனின் விந்துவை பெண்ணுக்குள் செலுத்த வேண்டும். பெண்ணுக்குள் வந்த விந்துவில் ஆன்மா நுழையும். இது முதல் பிறப்பு.  ஆன்மா நுழைந்த விந்து குழந்தையாக இரண்டாம் பிறப்பு எடுக்கும். இரண்டாம் பிறப்பில் பசி, காமம், இவற்றுடன் வாழும் மனிதன் படைப்புகளை நல்லாட்சி செய்ய வேண்டும்.

படைப்புகளை காத்த மனிதன் இறுதியில் மரணத்தை ஏற்க வேண்டும். மரணம் என்பது உச்சந்தலை வழியாக ஆன்மாவை தேவலோகத்திற்கு அனுப்ப கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு அமையாத மரணங்கள் மீண்டும் மீண்டும் பிறப்பை சந்திக்கும்.

ஆன்மாவை உச்சந்தலை வழியாக விடுவிக்க பக்தி, யாகம் இவற்றை கடைபிடிக்க வேண்டும். பிறப்பே இல்லாமல் அனைத்து ஆன்மாக்களும் தேவர்களாக மாற வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் படைப்பில் ஆத்மாகவா இரண்டற கலந்த கடவுள் மீண்டும் ஒற்றை கடவுளாக வருவார். - இது தான் ஆரியமதக் கொள்கைகளின் சுருக்கம்.

யூதம், கிறிஸ்துவம், இஸ்லாமிய மதங்களின் கொள்கையும் இது தான். கடவுள் ஆத்மாவாக மனிதனுள் இருக்கிறார். இந்த ஆத்மாவை மரணத்தில் இருந்து மீட்டு கடவுளிடம் சேர்க்க வேண்டும்.

கடவுள் மீட்பரை அனுப்புவார் என காத்திருக்கிறது யூத மதம். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை அத்மாவை மீட்கும் என்கிறது கிறிஸ்துவ மதம். கடவுளின் இறுதி வருகை ஆத்மாவை மீட்கும் என்கிறது இஸ்லாமிய மதம். கல்கி அவதாரம் ஆத்மாவை மீட்கும் என்கிறது ஆரிய மதம்.

இறுதியாக கல்கி அவதாரம் குறித்து சுருக்கமாக பார்த்து நிறைவு செய்யலாம்.

கடவுள் ஆத்மாவாக படைப்புகளுக்குள் கலந்து விட்டார். படைப்புகள் பசி, காமம் மரணம் இவற்றுடன் வாழ்கின்றன. பசி, காமம், மரணத்தை வெல்ல மனிதனுக்கு உதவியாக மனிதியை படைக்கிறார் பிரம்மா.

மனிதி மூலம் 7 முனிவர்கள் பிறக்கிறார்கள். இவர்கள் பசி, காமம் இவற்றை தவிர்த்து மரணத்தை வெல்ல முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சி நெடுங்காலம் நடக்கிறது.

இதற்கிடையில் மேலும் 10 பிள்ளைகளை மனிதனும் மனிதியும் பெற்றெடுக்கிறார்கள். இவர்கள் மூலம் மனிதகுலம் பெருகுகிறது. மனித குலப் பெண்களின் மீது தேவர்களுக்கு காமம் ஏற்படுகிறது. இதனால் தேவர்கள் மற்றும் மனிதர்கள் கலந்த அசுரர்கள் பூமியில் பிறக்கிறார்கள்.

அசுரர்கள் தேவர்களை விட வலிமை அடைகிறார்கள். அசுரர்களின் சந்ததி வேகமாக வளர்கிறது. முனிவர்களின் ஆத்மாவை விடுவிக்கும் தியானத்தை அசுரர்கள் கலைக்கின்றனர்.

தேவர்களால் தான் பூமியில் அசுரர்கள் பிறந்தார்கள். எனவே அசுரர்களை அழித்து மனிதர்களை காக்க தேவர்தலைவன் பூமியில் ஆத்மாவாக அவதாரம் எடுக்க வேண்டும் என்று சாபம் இடுகின்றனர் முனிவர்கள்.

முனிவர்களின் சாபத்திற்கு ஏற்ப தேவ அவதாரங்கள் பூமியில் பிறக்கிறது.

முதல் அவதாரம் மச்ச அவதாரம். இது பைபிளில் சொல்லப்பட்ட நோவா கதை.

2வது மோகினி அவதாரம். இது பைபிளில் சொல்லப்பட்ட சாராள்&ஆபிரகாம் கதை.

மூன்றாவது அவதாரத்தில் வரும் மனுஸ்மிருதி பைபிளில் சொல்லப்பட்ட மோசே மற்றும் யாக்கோப்பின் கதையுடன் ஒத்துப் போகிறது.

இந்த வரிசையில் யூதர்களை போல இறுதி அவதாரமான கல்கி அவதாரத்திற்கு ஆரியர்களும் காத்திருக்கின்றனர்.

ஆரிய பிராமணர்கள் இந்து அந்தணர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பிறக்கிறது இந்து மதம். - அது குறித்து அடுத்த கட்டுரைத் தொடரில் பார்க்கலாம்.

முற்றும்.

நன்றி!

No comments:

Post a comment