29/02/2020

நோய் எப்படி வருகிறது? - நவீன சித்த மருத்துவம் 3

காற்றின் மூலம் வரும் நோய்கள் வாத நோய்கள். உணவின் மூலம் வரும் நோய்கள் பித்த நோய்கள். நீரின் மூலம் வரும் நோய்கள் கப நோய்கள்.

மூக்கு வழியாக நுழையும் காற்று, நுரையீரலை அடைகிறது. நுரையீரல், காற்றில் உள்ள ஆக்சிஜனை மட்டும் பிரித்து இரத்தத்தின் வழியாக செல்களுக்கு அனுப்புகிறது.

வாய்வழியாக செல்லும் உணவு வயிற்றை அடைகிறது. இங்கு உணவு புரதமாக மாற்றப்பட்டு குடலை அடைகிறது. குடல் உரிஞ்சிகள் புரதத்தை இரத்தத்தின் வழி செல்களுக்கு அனுப்புகின்றன.

மூக்கு, வாய் மற்றும் தோல் காயங்கள் வழி நுழையும் நீர், நிணநீர் மற்றும் இரத்தத்தில் கலந்து செல்களை அடைகின்றது.

நமது உடல் மூன்று வகையான ஆற்றல்களால் இயங்குகிறது. 1. மின்னாற்றல், 2. இயந்திர ஆற்றல, 3. வெப்ப ஆற்றல். 

(மின்னாற்றல், இயந்திர ஆற்றல், வெப்ப ஆற்றல் குறித்து தனித்தனி கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளேன்.)

செல்களில் நிகழும் கார்போஹைட்ரேட் உடைப்பால் மின்னாற்றல் கிடைக்கிறது. இதயத்தின் இயக்கத்தால் இயந்திர ஆற்றல் கிடைக்கிறது. நிணநீர் உறுப்புகளால் வெப்ப ஆற்றல் கிடைக்கிறது.

மின், இயந்திரம், வெப்ப ஆற்றல் சீரின்மைகளால் உடலியல் செயல்பாடுகளில் தோய்வு ஏற்படுகிறது. இந்த தோய்வு நோய்களுக்கான வாசல்களை திறந்து விடுகிறது.

மூச்சின் வழியாக உடலுக்கு ஆக்சிஜன் மட்டுமே தேவை. காற்றில் உள்ள மற்ற தனிமங்களை நுரையீரல் வடிகட்டி திரும்ப அனுப்பி விடுகிறது. உடலியல் ஆற்றல் குறைவாக இருக்கும்போது இந்த வடிகட்டலில் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் இரத்தத்தில் ஆக்சிஜனுடன் பிற தனிமங்களும் சிறிதளவில் கலந்து விடுகின்றன. இந்த தனிமங்கள் தேவையற்ற பொருளாக இரத்த ஒட்டத்தில் சுற்றுகின்றன. சிறுநீரகத்தை அடைந்ததும் இவை பிரிக்கப்பட்டு சிறுநீரில் வெளியேற்றப்படுகின்றன. இவ்வாறு வெளியேற்றப்படாமல் நிணநீர் சுழற்சியிலோ, அல்லது இரத்தத்திலோ அவை தொடர்ந்தால் வாத நோய்கள் வருகின்றன.

ஈர காற்றில் உள்ள நுண்ணியிரிகள் மூச்சின் வழியாக நுரையீரலை அடைகின்றன. நுரையீரலில் உள்ள நிணநீர் சுரப்பிகள் நுண்ணியிரிகளை சூழ்ந்து சளியாக வெளியேற்றுகின்றன. இவ்வாறு நிகழாமல் நிணநீரில் நுண்ணுயிரிகள் எதிர்நீச்சல் போட்டால், அவை விச காய்ச்சல் எனும் பித்த நோய்களாக தொடர்கிறது.

வாய்வழியாக உணவினூடே செல்லும் நுண்ணியிரிகள் வயிற்றில் நடக்கும் செரிமானத்தில் இறக்கின்றன. இங்கு மீளும் நுண்ணியிரிகள் குடலில் வடிகட்டப்படுகின்றன. குடல் வடிகட்டலையும் மீறி இரத்தத்தில் கலக்கும் நுண்ணியிரிகள் பித்த நோய்களுக்கு வழி வகுக்கிறது.

உணவின் வழி குடலில் தங்கும் ஒட்டுண்ணிகளால் கபம் சார்ந்த நோய்கள் வருகிறது. இது போக தோல் காயங்கள், மலத்துளை, சிறுநீர் துளை, வாய், உள்ளங்கை, பாத வெடிப்புகள், இவற்றின் மூலம் நுழையும் நுண்ணியிரிகளால் கபம் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன.

உடலினுள் நுண்ணுயிரிகள், ஒட்டுண்ணிகள், தாதுக்கள் நுழைவது தவிர்க்க முடியாதது. நாள் ஒன்றிற்கு ஆயிரம் முறை கை கழுவினாலும், பார்த்து பார்த்து உணவு உண்டாலும், காற்றை வடிகட்டி சுவாசித்தாலும், நுண்ணியிரிகளும் ஒட்டுண்ணிகளும் உடலில் நுழைவதை தடுக்கவே முடியாது. அது இயற்கை., அது இயல்பு!

உடலுள் நுண்ணியிரிகள், தாதுக்கள் நுழைவது இயல்பு. அதே போல அவற்றை இலகுவாக உடல் வெளியேற்றுவதும் இயல்பு.

மூச்சு, உணவு, காயங்கள் வழி இரத்தத்தில் கலக்கும் நுண்ணியிரிகள், தாதுக்கள் சிறுநீர் வழி வெளியேறுகின்றன. உணவில் உள்ள தேவையற்றவை தாதுக்கள், நுண்ணியிரிகள் மலத்தின் மூலம் இயல்பாக வெளியேற்றப்படுகிறது.

இப்படி நுண்ணியிரிகள், தாதுக்கள் உடலில் நுழைவதும் வெளியேறுவதும் சாதாரண இயல்பான நிகழ்வு. ஆனால் உடலின் மின், இயந்திர, வெப்ப ஆற்றல்கள் சரியாக இல்லாத போது இந்த இயல்பு நிகழ்வில் தோய்வு வருகிறது. இந்த தோய்வு நோய்க்கு அடித்தளம் அமைக்கிறது.

நோய் வர ஒரே ஒரு காரணம் தான். அது உடலில் மின், இயந்திர, வெப்ப ஆற்றல் சீராக இல்லை என்பது தான். ஆற்றல் சீராக இல்லாத போது சிறுநீரகம் மற்றும் நிணநீர் வெளியேற்றம் தோல்வி அடைகிறது. இந்த தோல்வி நோயுக்கு அடித்தளம் அமைக்கிறது.

இரத்தத்ததில் உள்ள தேவையற்ற நுண்ணியிரி, தாதுக்களை சிறுநீரகம் பிரித்து விடுகிறது. சிறுநீரகம் தோல்வி அடையும்போது அவை நீணநீருக்கு மாற்றப்படுகின்றன. நிணநீர் வெளியேற்றும் தோல்வி அடையும் போது அவை திசுக்களுக்குள் புதைக்கப்படுகின்றன. அவையும் தோல்வி அடையும் போது உறுப்பு செயலிழப்பு, புற்று போன்ற கொடிய நோய்கள் வெல்கின்றன.

நோய் ஏன் வருகிறது? நோய் எப்படி வருகிறது? என்பதை பார்த்தோம். இனி நோய்க்கான தீர்வுகளை பார்க்கலாம்.

நோய் வருவதற்கு எந்த பாகுபாடும் இல்லை. ஆனால் நோய் தீர்வுகளுக்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. 1. மருத்துவம், 2. மருந்து. 

மருத்துவத்தின் மூலம் தீர்க்கப்படவேண்டிய நோய்களுக்கு மருந்து தீர்வாகாது. மருந்து மூலம் தீர்க்க கூடிய நோய்களுக்கு மருத்துவம் தீர்வாகாது. 

மருந்து, மருத்துவத்திற்கான வேறுபாடு தெரியாமையால் தான் ஆங்கில மருத்தும் அதிக பக்கவிளைவுகளை தருவதாக உள்ளது. அதே போல சித்த மருத்துவம் பொதுமருத்துவமாக மாறாமல் உள்ளது.

அப்படி என்ன தான் மருந்துக்கும் மருத்துவத்திற்கும் வேறுபாடு உள்ளது?

அடுத்த பதிவில் பார்க்கலாம்..

தொடரும்...

26/02/2020

நோய் ஏன் வருகிறது? - நவீன சித்த மருத்துவம் 2

வாழ்க்கையில் நோய் என்பது அழையா விருந்தாளி. நோயற்ற வாழ்வு வாழ்ந்த மனிதர்கள் இல்லை.

வாழ்க்கையில் நோய் என்பது தவிர்க்கவே முடியாதது. ஆனால் கொடிய நோய்களைத் தவிர்த்தே ஆக வேண்டும். கொடிய நோய்களுடன் வாழ்வது கொடிதினும் கொடிது என்பது அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்.

காய்ச்சல், சளி போன்ற இயல்பான நோய்கள், வாதம், வலி போன்ற நாள்பட்ட நோய்கள், புற்று, உறுப்பு செயலிழப்பு போன்ற கொடிய நோய்கள் என எதுவானாலும் அவை மூன்று காரணங்களால் தான் வருகிறது.

1. நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள், 2. ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள், 3. செல்லியல் மாற்றாங்களால் ஏற்படும் நோய்கள்.

இந்த 3 வகை நோய்களும் உடலில் தேவையில்லாமல் நுழையும் புற காரணிகளாலேயே ஏற்படுகின்றன.

நுண்ணுயிரிகள், ஒட்டுண்ணிகள், தாதுக்கள் என்பவையே நோய்களை ஏற்படுத்தும் புறக் காரணிகள். இந்த மூன்று காரணிகள் தான் சாதாரண காய்ச்சல் முதல் மரண நோய்கள் வரை ஏற்படுத்துகின்றன.

நுண்ணுயிரிகள் என்பது நம் கண்ணிற்கும், இயல்பறிவுக்கும் புலப்படாதவை. உடல்உறுப்புகள் அற்ற ஒருசெல் உயிரிகளைத் தான் நுண்ணுயிரிகள் என அழைக்கிறோம்.

நுண்ணுயிரிகளை மூன்றாக பிரிக்கலாம்
1.வைரஸ் 2.பாக்டீரியா 3.பூஞ்சைகள். 

ஒட்டுண்ணிகள் என்பது நமது உடலை சார்ந்து வாழும் உயிரிகள். ஒட்டுண்ணிகள் நமது உடலின் உள்ளிலும் வெளியிலும் ஒட்டிக்கொண்டு வாழ்பவை.

இத்தகு உயிர்களுக்கு உடலே உணவாகிறது. உடல்வழியாக நமது உணவை ஒட்டுண்ணிகள் பங்குபோட்டு கொள்கின்றன. பங்கீட்டு பிரச்சனை நோயாக நம்மை சோர்வடைய செய்கிறது.
 
ஒட்டுண்ணிகளை மூன்றாக பிரிக்கலாம்
1. உடலுள் வாழும் ஒட்டுண்ணிகள், 2. உடலுக்கு வெளியே வாழும் ஒட்டுண்ணிகள், 3. உணவு ஒட்டுண்ணிகள்.

உடல் செல்லியல் மாற்றம் என்பது செல்லின் பணிகளில் ஏற்படும் தோய்வு அல்லது அதீதம் இவற்றால் ஏற்படுகிறது.

உடலுள் செல்லியல் மாற்றங்களை மூன்றாக பிரிக்கலாம். 
1.இயல்பு மாற்றம் 2.தாதுக்களால் ஏற்படும் மாற்றம் 3.சூழியல் மாற்றம்

சரி நோய் எப்படி ஏற்படுகிறது என பார்க்கலாம்

உடலுள் நுழையும் தேவை அற்ற நுண்ணுயிரிகள் மற்றும் தாதுக்கள் செல்களின் அடிப்படை செயல்களை பாதிக்கின்றன. செல்களின் பணிகள் பாதிக்கப்படும் போது உடல் நோய்வாய்ப்படுகிறது.

தேவையற்ற நுண்ணியிரிகள் மற்றும் தாதுக்கள் உடல் துளைகள் வழியாக செல்களை அடைகின்றன

உடலின் துளைகளை மூன்றாக பிரிக்கலாம்
1.முக்கு வழியான சுவாச பதை, 2.வாய் வழியான உணவுப்பாதை 3.தோல், மலம், சிறுநீர் வெளியேற்று துளைகளை உள்ளடக்கிய கழிவு வெளியேற்றுப் பாதை.

இந்த மூன்று பாதைகளில் நுழையும் நுண்ணியிரிகள், ஒட்டுண்ணிகள், தாதுக்கள் என்பவை மூன்று ஊடகங்கள் வழியாக செல்களை அடைகின்றன.

உடலின் ஊடக சுழற்சியை மூன்றாக பிரிக்கலாம்
1.சுவாச காற்று சுழற்சி, 2.இரத்த சுழற்சி, 3.நிணநீர் சுழற்சி.

இந்த ஊடகங்களில் நுழையும் தேவையற்ற நுண்ணியிரிகள், ஒட்டுண்ணிகள், தாதுக்கள் உடல் செல்லின் இயங்கியலை பாதிக்கின்றன. இந்த பாதிப்பை பொருத்து நோய்கள் பிரிக்கப்படுகின்றன.


என்னடா சித்தமருத்துவம் பற்றிய கட்டுரையில் ஆங்கில மருத்துவம் பற்றி விவரிக்கிறாரே என்ற சலிப்பு வரலாம். ஆங்கில மருத்துவத்தின் அடிப்படை விசயங்களே சித்த மருத்துவத்திலும் அடிப்படையாக உள்ளது.

ஆங்கில மருத்துவமும் சித்த மருத்துவமும் ஒன்று தான். இரண்டிற்கான மருந்துகள் தான் வேறு வேறு! - இந்த நுட்பத்தை புரிந்து கொள்ள மேற்சொன்ன ஆங்கில மருத்துவத்தின் அடிப்படைகளை அறிதல் அவசியம்.

ஆங்கில மருத்துவத்தின் அடிப்படையான ஆக்சிஜன் சுழற்சியையே வாதம் என சித்த மருத்துவத்தில் குறிப்பிடுகிறோம். சுவாசக்காற்றில் நுழையும் தேவையற்ற நுண்ணுயிரி மற்றும் தாதுக்களால் வாதநோயகள் வருகின்றன.

ஆங்கில மருத்துவத்தில் குறிப்பிடப்படும் இரத்த சுழற்சி(இரத்த அழுத்தம்) என்பதையே சித்த மருத்துவத்தில் பித்தம் என அழைக்கிறோம். பித்தம் சார்ந்த நோய்கள் அனைத்தும் இரத்தத்தில் நுழையும் தேவையற்ற நுண்ணியிரி மற்றும் தாதுக்களால் வருகிறது.

ஆங்கில மருத்துவத்தில் குறிப்பிடப்படும் நிணநீர் சுழற்சியையே சித்த மருத்துவத்தில் கபம் என அழைக்கிறோம். நிணநீரில் ஏற்படும் நுண்ணுயிர் மற்றும் தாதுக்களின் ஏற்ற தாழ்வு கபம் சார்ந்த நோய்களை தீர்மானிக்கின்றன.

சுவாச சுழற்சி = வாதம், இரத்த சுழற்சி = பித்தம், நிணநீர் சுழற்சி = கபம் என்ற அடிப்படையில் ஆங்கில மருத்துவத்தின் முன்னோடியாக சித்த மருத்துவம் திகழ்கிறது.

டெதஸ்கோப் பரிசோதனை, இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை இந்த மூன்றிலும் முறையே காற்று, இரத்தம், நிணநீர் இவைகளில் உள்ள தேவையற்ற நுண்ணியிரிகள் மற்றும் தாதுக்கள் கணக்கிடப்படுகின்றன. இதையே வாதம், பித்தம், கபம் என்ற விகிதத்தில் சித்த மருத்துவத்தில் கணிக்கின்றனர்.

மருத்துவத்தில் கணக்கீடுக்கும் கணிப்பிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் ஒன்றுதான். ஆங்கில மருத்துவத்தில் கணக்கிடும் கணக்கீடும் சராசரி கணிப்பு முறையை சார்ந்தது தானே தவிர துல்லியம் அல்ல. அதையே தான் சித்த மருத்துவத்தில் கணிப்பாக செய்கின்றனர்.

இந்த கணிப்புகள் மூலம் எப்படி நோய்களை துல்லியமாக கண்டறிகின்றனர்?

அடுத்த பதிவில் பார்க்கலாம்..

தொடரும்...

20/02/2020

மருந்தா, மருத்துவமா? - நவீன சித்த மருத்துவம் 1

காலப்பயணம் கட்டுரையை இப்படி முடித்திருந்தேன்.
 ‘‘சித்த மருத்துவத்தை நவீன மருத்துவத்துவத்தின் வேகத்திற்கு கொண்டு சேர்த்தால் காலப்பயணம் சாத்தியமாகும்.’’ 

சித்தர்களுக்கே உள்ள சிறப்பு புதிராய் சில புதினங்களை விட்டுச்செல்வது. புதிர் என்றால் என்ன? புதினம் என்றால் என்ன? என்பதையே இன்றைய தலைமுறைக்கு விளக்க வேண்டி உள்ளது.

புதிர் என்றால் எளிமையான விடையை தாங்கிய ஒரு கேள்வி. அந்த கேள்விக்கான பதில் அந்த கேள்விக்குள்ளேயே இருக்கும். நாம் கொஞ்சம் சிந்தித்தால் பதிலை கண்டுபிடித்து விடலாம். அத்தகு கேள்விகளைத் தான் புதிர் என்கிறோம்.

புதினம் என்றால் செய்தியை நேரடியாக சொல்லாமல் மறைமுக உவமைகளோடு(உதாரணங்களோடு) சொல்வது. அப்படி புனைந்து சொல்வதைத் தான் புதினம் என்கிறோம்.

சித்தர்கள் அருளிய எல்லா சித்த மருத்துவ குறிப்புகளும் இப்படி புதிரான புதினங்களாகத் தான் இருக்கின்றன. புதிரும் தெரியாமல், புதினமும் புரியாததால் சித்த மருத்துவத்தை போலி மருத்துவமாக பார்க்கிறோம்.

இன்று தமிழகம் எங்கும் சித்தமருத்துவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசும் சித்தமருத்துவத்தை பயன்பாட்டில் வைத்துள்ளது. சித்த மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள், மருந்துகடைகள் என சித்த மருத்துவம் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனால் அது ஒரு மூன்றாம் தர மருத்துவமாக பார்க்கப்படுகிறது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.

அலோபதி என்கிற ஆங்கில மருத்துவம் தான் முதன்மையாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஆயுர்வேத மருத்துவத்தை தேடி மக்கள் செல்கின்றனர். முன்றாவது இடத்திலேயே சித்த மருத்துவம் உள்ளது. இன்னும் கொஞ்ச காலத்தில் சித்த மருத்துவத்தை பின்னுக்கு தள்ளி அக்குபிரசர் மருத்துவம் மூன்றாம் இடத்திற்கு வந்துவிடும் போல.

உலகில் ஏராளமான மருத்துவ முறைகள் உள்ளன. இந்தியாவில் 6 வகையான மருத்துவ முறைகள் பிரபலமாக உள்ளன. 1.ஆங்கில மருத்துவம், 2.ஆயுர்வேத மருத்துவம், 3.சித்த மருத்துவம், 4.ஹோமியோ மருத்துவம், 5.யுனானி மருத்துவம், 6.அக்குபிரசர் மருத்துவம்.

(யோகசனம் மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் சித்த மருத்துவத்தில் அடங்கி  விடுகிறது. இது குறித்து தனி கட்டுரையில் விவரிக்கிறேன்.)


இதில் இந்திய பாரம்பரிய மருத்துவம் என்பது ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் தான். கேரளாவில் தோன்றியது ஆயுர்வேதம். தமிழகத்தில் தோன்றியது சித்த மருத்துவம். ஹோமியோபதி ஜெர்மனிய மருத்துவம். யுனானி என்பது அரேபிய மருத்துவம். அக்குபிரசர் என்பது சீன மருத்துவம்.

இன்று உலகில் பெரும்பான்மை மக்களின் பயன்பாட்டில் இருப்பது அலோபதி மருத்துவம். இந்திய அரசின் முதன்மை முக்கியத்துவம் பெற்றிருப்பதும் இந்த அலோபதி மருத்துவம் தான்.

ஆங்கில மருத்துவம் அல்லாத மற்றவைகளை மாற்று மருத்துவ முறை என்றே அழைக்கிறோம். மாற்று மருத்துவ முறைகள் மக்களிடம் இன்னும் போதிய நம்பகத் தன்மையைப் பெறவில்லை. இதற்குக் காரணம் ஆங்கில மருத்துவம் போன்று அவை முறைப்படுத்தப் படாமல் இருப்பதே.

ஆங்கில மருத்துவத்திற்கு உலக அளவில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் மாற்று மருத்துவ முறைகள் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கின்றன.

மாற்று மருத்துவத்திற்கான முறையான ஆராய்ச்சிகள் எங்கும் நடப்பது இல்லை. அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும் அவை அங்கீகாரம் பெறுவது இல்லை.

உண்மையில் ஆங்கில மருத்துவத்திற்கும் சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளுக்கும் இடையில் ஒற்றை வேறுபாடு தான் உள்ளது. மருந்து ஒன்று தான். மருத்துவ முறைகள் தான் வேறு! - இது பலருக்கும் புரிவதில்லை.

நம் நாட்டில் மெடிக்கலுக்கும் மெடிசனுக்குமே வித்தியாசம் புரிவதில்லை. படித்த டாக்டர்கள் முதல் பாமரர்கள் வரை இதே நிலை தான். மெடிக்கல் என்றால் மருத்துவம், மெடிசன் என்றால் மருந்து. மருந்து கடைகளை மெடிசன் சென்டர் என்பதற்கு பதில் மெடிக்கல் சென்டர் என்றே அழைத்துக் கொண்டு இருக்கிறோம்.

மருத்துவம் வேறு, மருந்து வேறு! ஆங்கில மருத்துவம் மிகபெரிய வளர்ச்சி அடைய மருந்து-மருத்துவ வேறுபாட்டை கடைபிடித்ததே காரணம். மருத்துவம் பார்ப்பவர் வேறு, மருந்தை தயாரிப்பவர் வேறு! 

ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவருக்கு மருத்துவம் பார்க்கத் தான் தெரியுமே தவிர, மருந்தை பற்றிய எதுவும் தெரியாது. அதனால் தான் அன்றைய மக்கள் ஆங்கில மருத்துவருக்கும் கைராசி மருத்துவர் என்ற புனிதர் பட்டத்தை தந்தனர். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பான்மை ஆங்கில மருத்துவர்கள் மருந்துகளை நம்பியே மருத்துவம் பார்க்கின்றனர்.

கருவிகளும், மருந்துகளுமே ஒட்டுமொத்த ஆங்கில மருத்துவத்தை ஆட்சி செய்கின்றன. இதே நிலை தான் மாற்று முறை மருத்துவ முறைகளிலும் தொடர்கிறது.

மருந்துக்கும் மருத்துவத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்ற அடிப்படை விசயமே போலி மருத்துவர்கள் உருவாகக் காரணம்.

எம்.பி.பி.எஸ் படித்திருந்தாலும் மருத்துவம் வரவில்லை என்றால் நிச்சயம் அவர் போலி மருத்துவர் தான். அதே நிலை தான் சித்த மருத்துவத்திலும் நிலவுகிறது.

பல சித்த மருத்துவர்கள் மருந்தை வைத்திருக்கிறார்கள்., ஆனால் மருத்துவம் தெரிவதில்லை. சிலருக்கு மருத்துவம் தெரிகிறது ஆனால் மருந்து கிடைப்பதில்லை. சித்த மருத்துவம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்க இதுவே முதன்மை காரணம்.

மருந்துக்கும் மருத்துவத்திற்கும் என்ன வித்தியாசம்?
ஆங்கில மருந்தும் சித்த மருந்தும் எப்படி ஒன்றாகும்?

அடுத்த பதிவில் ...

தொடரும்....

12/02/2020

எல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5

இந்து மதத்தின் முழுமுதல் கடவுள் சிவன். சிவனே முழுமுதல் கடவுள் என்ற சொல்லே சனாதனத்திற்கு சம்மட்டி அடி தருகிறது. சனாதனம் சிவனை முழுமுதல் கடவுளாக அல்ல, கடவுளாக கூட ஏற்பது இல்லை.

ஆரிய மதம் சிவனை ருத்திரன் என்கிறது. ருத்திரர் என்பவர் கடவுள் அல்ல. தேவ உலகத்தில் கடவுளுக்கு சேவை செய்பவர்களே ருத்திரர்கள். தேவ உலகில் ரிஷிகள், ருத்திரர்கள், மருந்துக்கள், அதிதிகள் என பலவகை தேவர்கள் உள்ளதாக ஆரியமதம் குறிப்பிடுகிறது.

ஆரியத்தில் இருந்து பிறந்த சனாதனம் தேவலோகத்திலும் வர்ணங்களை(சாதிகளை) பிரிக்கிறது. அதில் பூலோகத்தின் சூத்திர சாதிக்கு இணையானவர்கள் ருத்திரர்கள். அந்த ருத்திரர்களின் தலைவனே ருத்திரன். இந்த ருத்திரனை தான் சிவன் என அறிவிக்கிறது பிராமணங்கள். 

திருமாலை விஷ்ணுவாக உள்வாங்கிக்கொண்ட இந்திய மக்கள், சிவனை ருத்திரனாக ஏற்கவில்லை. இந்து மதத்ததை பொருத்தவரை சிவன் தான் முழுமுதல் கடவுள். அதற்கு பின்னவர்கள் தான் விஷ்ணுவும், பிரம்மாவும்.

சிவனா/விஷ்ணுவா என்ற கேள்வியில் உடைகிறது இந்துமதத்தின் ஒற்றுமை. இந்த ஒற்றை கேள்வியில் சனாதனமும் ஓடி ஒழிந்து கொள்கிறது.

ஆரியருக்கு முந்தைய இந்தியாவில் சிவன்(சேயோன்), திருமால்(பெருமால்-மாயோன்), முருகன்(வேந்தன்), மேகலை(வருணன்), அம்மன்(பகவதி-கொற்றவை) என்ற நிலம் சார்ந்த கடவுள்களே இருந்தனர். இந்த கடவுள்களுக்குள் ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் இருந்தது.

ஆனால் காடும் காடுசார்ந்த பகுதிகளிலும் ஊடுருவிய ஆரியர்கள் காட்டின் மக்களை பல பிரிவுகளாக பிரித்தனர். காட்டு மக்களின் ஒற்றை கடவுளான திருமாலை பல அடுக்குகளில் திரித்து சனாதனம் என்ற சதிவேலையை செய்தனர்.

திருமாலின் முதன்மை பெயரை பெருமால் என்று அழைக்கின்றனர் மலைவாழ்மக்கள். பெருமாலின் கிளை பெயர்கள் தான் நாராயணன், கண்ணன், கண்ணையா, கிருஷ்ணன், ஐயனார், அய்யாசாமி, கருப்பசாமி, மதுரைவீரன், ஐயப்பன் என்பதெல்லாம்.

வேதங்களில் இருந்த ஆரிய மதம் வேதாந்தங்கள் வழி பிரம்ம மதமாக மாறியது. பிரம்மமதம் பிராமணங்கள் வழி சனாதன மதமாக மாறியது. சனாதனம் வைணவம் வழி இந்து மதமாக மாறியது.

இங்கே கொஞ்சம் உண்ணிப்பாக படித்தால் மட்டுமே மதமாற்றத்தின் காலக்கோடு உங்களுக்கு புரியும்.

ஆரிய மதத்தின் கடவுளுக்கு பெயரில்லை. யூத மதத்தின் யகோவா போல, இஸ்லாமிய மதத்தின் அல்லா போல பெயரற்ற, உருவமற்ற கடவுளே ஆரியமத கடவுள். இத்தகு கடவுளை அடைய வழிகாட்டிகளாக மீட்பர்கள் வருவார்கள். மீட்பர்கள் வழி கடவுளை அடையலாம் என்பதே ஆபிரகாமிய மதங்களின் கோட்பாடு.

ஆபிரகாம் மதங்கள் தோன்றலுக்கு முன்பாக உலகெங்கும் உருவவழிபாடு முறையே இருந்தது. உருவங்களை வழிபடும் முறையை விலக்கி பிறந்தது தான் ஆபிரகாமிய மதங்கள். அந்த வழித் தோன்றலில் வந்தது தான் யூதம், ஆரியம், பிரம்மம், ஜைனம், புத்தம், கிறிஸ்துவம், இஸ்லாமியம், சனாதனம், பாரசீகம், சீக்கியம் என்பது எல்லாம்.

மேற்சொன்ன மதங்கள் எல்லாம் உருவ வழிபாட்டுக்கு எதிரானவை. உடல் பொய்யானது ஆன்மாவே நிந்தரமானது என்ற கொள்கை உடையவை.

ஆன்மாவை போற்றும் மதங்களுக்கு எதிர்திசையில் இருப்பது உடலை போற்றும் மதங்கள். தமிழகத்தில் தோன்றிய சாங்கியம், சமணம், சீவகம், அசீவகம், சைவம், கௌமாரம், சக்தி போன்றவை உடலை போற்றும் மதங்கள். உடலை தாண்டி கடவுள் இல்லை என்கின்றன இந்த மதங்கள்.

உடல் தான் எல்லாம். ‘‘உடலே கோயில், உள்ளமே கடவுள்’’ என்ற கோட்பாட்டை உடையவை தென்னிந்திய மதங்கள். உடலை போற்றும் விதமாக உருவ வழிபாட்டை பின்பற்றுகின்றன இந்த மதங்கள்.

கட்டுரையின் இறுதிக்கு வந்துவிட்டோம். இனி மிக சுருக்கமாக முடிக்க வேண்டி உள்ளது. 

கி.பி துவக்க நூற்றாண்டுகளில் வடஇந்தியாவில் குப்தர்கள் தென் இந்தியாவில் பல்லவர்கள் கூட்டாட்சி அமைத்திருந்தனர். இந்த காலகட்டத்தில் வடஇந்திய பிராமணர்கள் மற்றும் தென்னிந்திய அந்தணர்கள் இணைந்து சனாதன மதத்தை கட்டமைத்தனர். 


தென்னிந்திய அந்தணர்கள் வழிபட்ட திருமால், சிவன், முருகன், சாத்தன்(கருப்பசாமி), மாரி(அம்மன்), பிள்ளையார்(கணபதி) ஆகிய தெய்வங்களை வேதாந்தங்களோடு இணைத்துக் கொண்டனர். இப்படி இணைக்கையில் ஆரிய பிராமணர்களுக்கும், தென்னிந்திய அந்தணர்களுக்கும் கடுமையான சண்டை நடந்தது. முழுமுதல் கடவுள் யார் என்பதில் தான் அந்த சண்டை.

திருமாலை விஷ்ணுவுடனும், சிவனை ருத்திரனுடனும், முருகனை சுப்பிரமணியனுடனும், சாத்தன், மாரி, பிள்ளையார் இவர்களை காவல் தெய்வங்களுடனும் இணைத்தனர்.

இணைப்பை ஏற்ற மக்கள் கடவுளுக்குள்ளும் சனாதனம் இருக்கிறது என்பதை ஏற்கவில்லை. சனாதனத்தை உடைத்து உண்டான ஆறு மதங்களை தான் இந்து மதம் என இன்று அழைக்கிறோம். 

விஷ்ணுவை பிராமணியத்தின் வழி வழிபடுபவர்கள் வடகலை பிராமணர்கள் எனவும், விஷ்ணுவை கண்ணனாக, நாராயணனாக, பெருமாலாக வழிபட்டவர்கள் தென்கலை பிராமணர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவ் இருவினரும் வைணவர் என்ற மதத்திற்குள் அடைபட்டனர்.

சிவனை முழுமுதல் கடவுளாக வழிபட்ட அந்தணர்கள் சைவம் என்ற புதிய மதத்தை தோற்றுவித்தனர். பிராமணியத்திற்குள் அடைபடாத முருக வழிபாடு கௌமாரம் என்று தளைத்தது.

பிரமாணத்திற்குள் அடைபடாத திருமால் வழிபாடு ஐய்யாசாமி, மதுரைவீரன், கருப்பசாமி, சுடலைமாடன், சாத்தன் வழிபாடாக பரிணமித்தது.

கொற்றவை காளி, கங்கை, காவேரி, மாரி என தனி வழிபாடாக பிராமணியத்தை புறம்தள்ளி சக்திவழிபாடு சுடர்விட்டது.

எல்லாம் கடவுளே, எல்லாம் சிவமயம், எம்மதமும் சம்மதம் என்பவர்கள் பெரும்பான்மை இந்துக்களாக மாறினர்.  

இந்திய மதங்களை ஒருங்கிணைக்க நினைத்தனர் சங்கராச்சாரியார்கள். ஆனால் தங்களின் பிடிவாத சனாதன கொள்கையால் இந்து மதத்தை அழிவு பாதைக்குள் விட்டு சென்றனர்.

சனாதனம் என்ற நச்சால் கொஞ்சம் கொஞ்சாமாக ஆழிந்து வருகிறது இந்து மதம். சனாதனத்தில் இருந்து விடுபட இந்துமதம் ஒவ்வொரு நூற்றாண்டிலும் போராடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் சனாதனத்தை தங்களின் வாழ்வாதாரமாக கொண்ட சில பிராமணர்களின் அதிகார சுரண்டலின் முன்பு இந்த போராட்டங்கள் தோற்றுப்போகின்றன.

சனாதனம் என்பது இந்த காலகட்டத்தில் தேவை இல்லை என பெரும்பான்மை பிராமணர்கள் கூறுகின்றனர். ஆனால் சில கழுசடை பிராமணர்கள் இன்றும் அதை பற்றிக்கொண்டு இருக்கின்றனர். இந்த கழுசடைகளாக சில ஆயிரம் பிராமணர்களே உள்ளனர். 

இவர்களின் சனாதன அடுக்கு சில ஆயிரம் சாதிவெறியர்களை ஊக்குவிக்கிறது. இந்த ஊக்கம் இந்து மதத்தை செதில் செதிலாக சிதைத்து வருகிறது. இது நீடித்தால் இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்துமதம் இல்லாமல் போகும்.

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற உயரிய ஆன்மிக கோட்பாடுகளை கொண்டது இந்து மதம். ஆனால் சனாதனம் என்ற ஒற்றை கோட்பாட்டில் சாக்கடைக்குள் கிடக்கிறது.

சனாதனம் இல்லாத இந்துமதம் வேண்டும். அதுவே என்மதம் என்பதில் எனக்கும் பெருமையே.

முற்றும். நன்றி.
 
பின்குறிப்பு : (சிவன், முருகன், ஐயப்பன், மாரி உட்பட தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை தனி ஒரு கட்டுரையில் விளக்குகிறேன். இந்து மத கிளைகளான பிரம்ம மதம், சமண மதம், சீக்கியம் குறித்தும் விரிவாக விளக்க வேண்டி உள்ளது. சனாதனத்தின் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் குறித்த விளக்கங்களை சனாதனம் என்ற கட்டுரை தொடரில் எழுதுகிறேன்.)

10/02/2020

ஓயாத இராமாயணம் - இந்து மதம் 4

இந்துமத இதிகாசங்களில் இராமாயணமும், மகாபாரதமும் முக்கியமானவை. மகாபாரதம் என்பது பல கதைகளின் ஒரு கதை. ஆனால் இராமாயணம் என்பது ஒரு கதையின் பல கதை.

‘‘என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனும் அல்ல, -தசரதனின் மகனும் அல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் வணங்க மாட்டேன்!’’ - இந்த பிரபலமான வரிகள் இந்தியாவின் தேசதந்தை மகாத்மா காந்தியடிகள் உடையது. 

பகவத் கீதையை வெகுவாக புகழ்ந்த காந்தியடிகள், இராமாயணத்தை தூக்கி குப்பையில் வீசியிருந்தார். (இராம பக்தர்கள் காந்தியடிகளை வெறுத்ததற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.) அந்த வம்புக்குள் நாம் நுழைய வேண்டாம். கட்டுரைக்குள் வருவோம்.

தென்னிந்தியாவில் சைவம் வைணவம் போல வட இந்தியாவில் இராம/கிருஷ்ண பக்தர்களுக்கு இடையே மத சண்டைகள் இருந்த காலங்கள் உண்டு.

இங்கே எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம் வரலாம். இராமர் வேறு மதம், கிருஷ்ணர் வேறு மதமா? இருவருமே விஷ்ணுவின் அவதாரங்கள் தானே. இருவருமே வைணவம் தானே! இருவருமே இந்து மதம் தானே! அப்படி இருக்கும் போது எப்படி இராம/கிருஷ்ண பக்தர்களுக்கு இடையே மத சண்டை இருந்திருக்கும்?

 சின்ன உதாரணம்: தமிழகத்தில் தென்கலை, வடகலை என்ற மதக்கலவரம் இப்போதும் உண்டு. இது இராமர் என்ற ஒரே கடவுளை வணங்கும் இரு மதங்களுக்கு இடையேயான மோதல்.

வடகலைக்கும் தென்கலைக்கும் ஏன் சண்டை வருகிறது? இவர்களை அவர்கள் ஏற்பதில்லை. அவர்களை இவர்கள் ஏற்பது இல்லை ஏன்? இங்கே இருக்கிறது சனாதனத்தின் ஆணிவேர்.

அடுத்தவர் மனைவியை அபகரிக்காதே என்ற அடிப்படை கொள்கையை கொண்ட ஆபிரகாமிய மதங்களின் ஒரு கிளையே ஆரிய மதம். 

தன் மனைவியை கவர்ந்த அரசனிடம் போர்புரிந்து மனைவியை மீட்கும் கணவனின் வரலாறே ஒடிசி மற்றும் இலியட் கதைகள். உலகின் மிக பழமையான இதிகாசங்கள் என அழைக்கப்படும் இந்த இரண்டும் கிரேக்கர்களுடையது.

தன் மனைவியை கவர்ந்த எகிப்த்து மன்னனிடம் இருந்து கடவுளின் உதவியுடன் மனைவியை மீட்கிறார் ஆபிரகாம். இதே கதை தோன்றலே ஒடிசியும் இலியட்டும். இலியட் கதையின் இந்திய பதிப்பே இராமாயணம்.

இராமாயணம் என்பது ஒற்றை படைப்பு அல்ல. இந்தியாவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட இராமாயணங்கள் உள்ளன. உலகம் எங்கும் 700க்கும் மேற்பட்ட இராமாயணங்கள் உள்ளன.

700க்கும் மேற்பட்ட இராமாயணங்கள் இருந்தாலும் இந்து மதத்தின் அடிப்படையாக இருப்பது வால்மிகி இராமாயணம்.


இந்து மதத்தின் அடிப்படையாக இருக்கும் வால்மிகி இராமாயணம் தான் இந்து மதத்தின் அவமானமாகவும் இருக்கிறது. இது கடுமையான சொல் தான். ஆனால் சனாதனம் என்ற கொடிய விசத்தை இந்துமதத்திற்குள் பாய்ச்சியதில் முதன்மை பங்களிப்பு வால்மிகி இராமாயணத்திற்கு உள்ளது.

இராமர் என்பவர் கடவுளின் அவதாரம் என்றும். சூத்திரர்களை அழிக்கவே இராம அவதாரம் எடுத்தார் என்றும் விவரிக்கிறது வால்மிகி இராமாயணம். இதில் துவக்கமும் இறுதியும் இடைச்செருகல்., இந்த இடைச்செருகளில் தான் சனாதனம் வருகிறது என்பது ஏற்புடையதே.

அப்படியானால் சனாதன தர்மத்தை வலியுறுத்தும் வால்மிகி இராமாயணத்தை தீயில் எரிக்க வேண்டும். அல்லது இடைசெருகலாக உள்ள சனாதனத்தை நீக்கி வால்மிகி இராமாயணத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.

இந்த இரண்டில் ஒன்றை செய்யாவிட்டால் வால்மிகி இராமாயணம் என்றுமே ஓயாத தீண்டாமையாக தான் இருக்கும். சனாதனத்தை போதிக்கும் இராமன்கள் எப்போதும் செருப்படி வாங்கிக்கொண்டு தான் இருப்பார்கள்.

இராமன் என்ற உயரிய கதாபாத்திரத்தை அல்லது உயரிய அரசனை சனாதனம் கொண்டு அசிங்கப் படுத்தியவர்கள் ஆரிய பிராமணர்கள். 

நாராயணனுக்கும், கண்ணனுக்கும், திருமாலுக்கும் பூசப்பட்ட சனாதன சாயம் இராமருக்கும் பூசப்பட்டு உள்ளது. சனாதனத்தை எதிர்த்து மக்கள் மனங்களை கவர்ந்த இவர்களை, சனாதனத்தின் படைப்பாளியாக மாற்றிய கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் ஆரிய பிராமணர்கள். அதற்கு துணைபோனவர்கள் தமிழ் பார்ப்பனர்கள். 

நாடோடிகளான ஆரியர்கள் சிந்து/கங்கை சமவெளியில் நிலைத்து வாழ முற்பட்டனர். இந்த நிலைப்பு அரசாங்கத்தின் தேவையை உணர்த்தியது. ஆரியர்கள் தங்களின் அரசாட்சிக்கான அடிப்படை கோட்பாடுகளை வகுத்தனர். ஆபிரகாமிய மதத்தின் 10 கட்டளைகளை அப்படியே ஏற்றனர். அவற்றை ஒட்டிய புதிய சட்டங்களை எழுதினர். அப்படி தொகுக்கப்பட்டவையே பிராமணங்கள். அவற்றுள் மிகவும் பிரலமானது மனுஸ்மிருதி என்கிற மனுதர்ம சாஸ்த்திரம்.

மனுஸ்மிருதி என்பது ஒன்றல்ல. பல காலகட்டங்களில் பல மனுஸ்மிருதிகள் நடைமுறையில் இருந்தது. யுகங்கள், காலங்கள், ஆட்சிகள், சமூகங்கள் என காலத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மனுஸ்மிருதிகள் வேறுபட்டது. பல மனுஸ்மிருதிகள் இருந்தாலும் எல்லா மனுஸ்மிருதியிலும் சனாதனம் என்ற அடிப்படை மட்டும் மாறாமல் இருந்தது. அதனாலேயே எல்லா மனுஸ்மிருதிகளும் வெறுக்கத்தக்கதாக மாறியது.

அது என்ன சனாதனம்?

எளிமையானது தான். ஆபிரகாமிய மத கோட்பாடை ஒட்டி பிறப்பிலேயே மனிதர்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப் படுகின்றனர். இந்த 5 பிரிவினர் கடவுளை அடைவதில் பிறப்பிலேயே தகுதி/தகுதியின்மை பெற்று விடுகின்றனர். வாழும் காலத்தில் என்ன நல்லது செய்தாலும் பிறப்பின் தகுதியை தாண்டி இவர்களால் கடவுளை அடைய முடியாது என்பதே சனாதனம்.

4 வர்ணங்கள் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் 5 எப்படி என்ற சந்தேகம் வரலாம். அங்கே தான் சனாதனத்தின் உச்சகட்ட கொடூரம் உள்ளது.

பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுக்கு தான் கடவுளை அடையும் தகுதி உள்ளது. 5வதாக உள்ள பஞ்சமர் என்பவர்கள் கடவுள் பெயரை நினைக்க கூட உரிமை இல்லாதவர்கள்.

ஆபிரகாமிய மதங்களின் சனாதனத்தை எதிர்த்து தோன்றியது தான் இந்து மதம். ஆனால் இந்து மதத்தையே சனாதனத்தின் சாட்சியாக மாற்றிவிட்டனர் பிராமணர்கள். 

யார் இந்த பிரமாணர்கள்? எப்படி அவர்களால் இந்து மதத்தை சனாதன மதமாக மாற்ற முடிந்தது?

தொடர்ச்சி அடுத்த இறுதி பதிவில்...

தொடரும்... 

06/02/2020

பகவத் கீதையில் கறை சனாதனம் - இந்து மதம் 3

இந்து மத வரலாற்றை சனாதன தர்மத்தை தவிர்த்து எழுத முடியாது. சனாதன தர்மத்தை தோற்றுவித்தது யார்? என்ற கேள்விக்கு கிருஷ்ணர் என பதிலளிக்கிறது பகவத் கீதை. பைபிள், குரான் வரிசையில் இந்துக்களின் புனிதநூலாக மதிக்கப்படுவது பகவத்கீதை.

பகவத்கீதையில் சனாதன தர்மம் என்ற கறை சேர்க்கப்பட்டதா? அல்லது பகவத்கீதையால் சனாதனதர்மம் கரை சேர்ந்ததா? - மிகப்பெரிய விவாததத்திற்கு உரிய கேள்வி இது! 

இந்து மதத்தில் ஏராளமான கீதைகள் உள்ளன. ஆனால் பகவத்கீதை மட்டுமே பிரபலமாக இருக்கிறது. கிருஷ்ணர் என்ற ஆன்மீக குருவின் சொற்பொழிவுகளின் தொகுப்பே கீதைகள் என அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணர் என்பவர் பாகவதம் என்ற மதத்தின் நிறுவனர் அல்லது முக்கிய மதகுரு. கி.மு துவக்க நூற்றாண்டுகள் அல்லது புத்தருக்கு அடுத்த தலைமுறை கிருஷ்ணரின் காலமாக இருந்திருக்கலாம்.

ஆரிய மதத்தின் வேதங்களை மன்னர்களும் மக்களும் வெறுத்த காலம். சைனமும் புத்தமும் பிரபலமடைந்திருந்த காலம். இந்த காலகட்டத்தில் கங்கை சமவெளியில் தோன்றிய இன்னும் ஒரு மதவழிபாடு தான் பாகவதம்.

ஆரிய வேதங்களை எதிர்த்து, வேள்விகளை எதிர்த்து, வேதக் கடவுள்களை எதிர்த்து தோன்றியதே பாகவதம். சைனம் மற்றும் புத்த மதத்தின் கருத்தியல் மோதலை பின்னுக்கு தள்ளி பாகவதம் வேகமாக முன்னேறியது.

கிருஷ்ணர் என்பவர் புத்தரை போல பாகவதம் என்ற தனிமதத்தின் குருவாக இருந்தார். ஆரிய மதத்தின் யாகத்திற்கு மாற்றாக, சைன மதத்தின் யோகத்திற்கு மாற்றாக, புத்த மதத்தின் துறவுக்கு மாற்றாக கிருஷ்ணர் பக்தி மார்க்கத்தை போதித்தார். கிருஷ்ணரின் பக்தி வழிபாடு பாகவத மதமாக வளர்ந்தது. கிருஷ்ணரை பின்தொடர்ந்து பல பாகவதர்கள் பக்திமதத்தை இந்தியா முழுவதும் பரப்பினர்.

பக்தியால் கடவுளின் அருளை பெறமுடியும் என்பதே பாகவத மதத்தின் கோட்பாடு. ஆரியத்தின் யாகம், சைனத்தின் யோகம், புத்தத்தின் துறவு இந்த மூன்றுக்கும் இணைப்பு பாலமாக இருந்தது பாகவதம். 


மகாவீரர், புத்தர், கிருஷ்ணர் காலத்தில் ஆரிய மதத்தை எதிர்த்து ஏராளமான இந்திய மதங்கள் பிறந்தன. ஆரியர்களின் இனவாதம், பிறப்பின் அடிப்படையிலான வர்ண அடுக்குமுறை, குலதெய்வம் இவற்றை எதிர்த்து பிறந்த முக்கிய மதங்கள் தான் சைனம், புத்தம், பாகவதம் உட்பட ஏராளமான மதங்கள்.

நாராயணர், கிருஷ்ணர், இவர்களை தொடர்ந்து வியாசர், ஆதிசங்கரர் என 18ம் நூற்றாண்டு இராமகிருஷ்ணபரமஹம்சர், வரை ஏராளமானவர்கள் பாகவத மதத்தின் குருக்களாக உள்ளனர்.

முழுக்க முழுக்க ஆரியத்தின் சனாதனத்தை எதிர்த்து வந்த பாகவத மதத்தில் எப்படி புகுந்தது சனாதனம் என்பது தான் வியப்பின் உச்சம். அதனால் தான் கீதையில் சனாதனம் என்ற கறை படிந்துள்ளது என்கிறேன்.

சனாதனம் என்பது முழுக்க முழுக்க ஆரிய/அரேபிய/ஆபிரகாமிய மதங்களில் பின்பற்றப்படும் அடிப்படை விதி. அது எப்படி இந்து மதத்திற்குள் நுழைந்தது? இந்த கேள்வியில் தான் பிராமணிய மதம் பிறக்கிறது.

சனாதனம், மனுதர்மம், வர்ணதர்மம் என்ற இந்த பெயர்களின் முன்னோடி பிராமணியம். பிராமணியத்தின் பிறப்பை தெரிந்தால் மட்டுமே சனாதனத்தின் வீரியத்தையும் விசத்தையும் புறிந்து கொள்ள முடியும்.

சனாதனம் என்றால் என்ன? சனாதனம் எங்கே துவங்கியது? சனாதனத்தை தோற்றுவித்தவர் யார்?

நானே சனாதனத்தை தோற்றுவித்தேன் என பகவத்கீதையில் கிருஷ்ணர் சொல்வது எல்லாம், பிற்சேர்க்கையும், பிராமணர்களின் பித்தலாட்ட சேர்க்கையுமே ஆகும். பகவத் கீதை சனாதனத்தை போற்றுவதும் இல்லை. கிருஷ்ணர் சனாதனத்தை தோற்றுவிக்கவும் இல்லை, போதிக்கவும் இல்லை. 

அப்படியானால் சனாதனம் எப்படி கீதையில் வந்தது? இந்த கேள்விக்கான பதிலை கீதைக்கு முன்னோடியான பிரம்ம சூத்திரம் நூலில் தேடவேண்டி உள்ளது.

பிரம்ம சூத்திரம் என்பது கீதையை எழுதிய அதே வியாசரால் எழுதப்பட்ட நூல் தான். இன்று இந்து மதத்தின் அடிப்படை வேத நூல்களாக மூன்று பட்டியலிடப்படுகிறது. 1.உபநிடங்கள், 2.பிரம்மசூத்திரம், 3.பகவத்கீதை. இந்த மூன்று நூல்களையும் எழுதியவர் ஒரே நபர் தான். அவர் தான் வியாசர்.

வியசர் என்பவர் பாகவத மதத்தின் முதன்மை மதகுருவாக அறியப்பட்டவர். கிருஷ்ணருக்கு பின்னர் பாகவத மதத்தை இந்திய முழுவதும் கொண்டு செல்வதில் தீவிர பணியாற்றியவர் வியாசர். வியாசருக்கு பின்னர் தான் ஆதி சங்கரர் உட்பட சங்கராச்சாரியார்கள் வருகிறார்கள். (வியாசருக்கு பின்னர் பலரால் பல உபநிடதங்கள் பலகாலகட்டங்களில் எழுதப்பட்டது என்பதை இங்கு நினைவில் கொள்ளுங்கள்.)

உபநிடங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை இவைகளில் முழுக்க முழுக்க பக்தி, ஆன்மா, முக்தி இவற்றை பற்றி மட்டுமே பேசப்படுகிறது. எங்கேயும் சனாதனத்தையோ, வேள்வி யாகங்களை பற்றியோ பேசுவது இல்லை.

அப்படியானால் சனாதனம், வேள்வி, யாகங்களை பற்றி எங்கே பேசப்படுகிறது என்றால் வேதங்கள், சாஸ்திரங்கள், பிராமணியங்களில் தான் சனாதனம் பேசப்படுகிறது.

வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் தொடர்பே இல்லை. வேதங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் தொடர்பே இல்லை. உண்மையில் வேதங்களை விளக்க அல்ல, விலக்க வந்ததே வேதாந்தங்கள்.

எதிரும் புதிருமாக தோன்றிய வேதமும் வேதாந்தமும் பிற்காலத்தில் எப்படி ஒன்றானது?
அங்கே தான் இராமாயணம் பிறக்கிறது.
அங்கே தான் ஆரிய திராவிட யுத்தம் துவங்குகிறது.
அங்கே தான் பெண்ணுக்கும், மண்ணுக்கும், பொன்னுக்கும் வேண்டி உண்டாக்கிய சனாதனம் நிலைக்கிறது.

விரிவாக அடுத்த பதிவில்...

தொடரும்... 

02/02/2020

ஆரியம், சைனம், புத்தம் - இந்து மதம் 2

இந்திய வரலாற்றை போல இந்து மத வரலாறும் தெற்கு வடக்கு என இரண்டானது.

வடக்கில் இருந்து ஆரம்பித்தால் ஆரியம், சைனம், புத்தம், பிராமணியம், சனாதனம், என்ற நெடிய போராட்ட வரலாற்றை பார்க்கலாம். தெற்கில் இருந்து ஆரம்பித்தால், சாங்கியம், சமணம், சீவகம், அசீவகம், என்ற தொன்று தொட்ட வரலாற்றை பார்க்கலாம்.

வடக்கில் இருந்து தெற்கு நகர்ந்த இந்து மதமும், தெற்கில் இருந்து வடக்கு நகர்ந்த இந்துமதமும் பிராமணியத்தால் ஒன்று சேர்க்கப்பட்டது. சனாதனம் என்ற அந்த ஒன்று கூடலால் இந்துமதம் இன்றுவரை புத்துயிர் பெற்று நிற்கிறது.

இந்து மதத்தை 1.பிராமணியம் 2.பிராமணியம் அல்லாதார் என இரண்டாக பிரிக்கலாம். இதை 1.ஆத்திகம் 2.நாத்திகம் என்று பல காலமாக பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.

நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பு என தற்போது தான் பேசப்படுகிறது. உண்மையில் நாத்திகம் என்றால் பிராமணியம் அல்லாத கடவுள் வழிபாடு என்பதே பொருள்.

பிராமணிய இந்து மதம் மிகவும் குழப்பமான வரலாற்றை கொண்டது. தொன்மையோ, தொடர்ச்சியோ இல்லாத மலுப்பல்களை மட்டுமே வரலாறாக கொண்டது.

வடக்கே குப்தர்கள் தெற்கே பல்லவர்கள் ஒருங்கே ஆட்சி செய்தபோது தோன்றியது தான் பிராமணிய இந்து மதம். அதற்கு முன்னதாக அதற்கான சரியான வரலாறு இல்லை. பிராமணிய இந்து மதத்தின் முன்னோடி ஆரியமதம்.

வடக்கே கங்கை சமவெளி நாகரீகத்தில் இருந்து ஆரிய மதத்தின் அரிச்சுவடு துவங்குகிறது. கங்கை சமவெளிப் பகுதியில் அறியப்படும் முதல் நாகரீகம் மகத ஆட்சியளார்களுடையது. மகதர்களால் ஆரிய மதம் பின்பற்றப்பட்டது.

கடவுள் ஒருவரே. கடவுள் நெருப்பானவர். கடவுளுக்கு உருவம் இல்லை. யாகங்கள் செய்வதன் மூலம் கடவுளை அடையலாம் இதுவே ஆரிய மதத்தின் ஆரம்பகால கோட்பாடுகள்.

யாகங்கள் செய்வதற்காக ஏராளமான மந்திரங்களை உருவாக்கி கொண்டனர். மந்திரம் ஓதுபவர்கள் கடவுளின் நேரடி தூதுவர்களாக அறியப்பட்டனர். அதில் இருந்து பிறந்தது தான் பிற்கால பிராமணியம்.

யாகங்கள் மூலமாக அரசர்களை தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினர் ஆரியர்கள். இதனால் யாகம் செய்பவர்களுக்கு கீழ்நிலையிலேயே அரசர்கள் இருந்தனர். ஆரிய மதத்தில் யாகத்தின் மூலமே அனைத்தும் தீர்மானிக்கப்பட்டது. வீரம், விவேகம், கலை, நீதி என அனைத்தையும் யாகங்களே தீர்மானித்தன.

ஆரிய குருக்கள் அரசர்களை அடிமையாகவே வைத்திருந்தனர். கலைஞர்கள் மற்றும் வணிகர்களையும் யாகங்களுக்கு கட்டுபட்டு இருக்க செய்தனர். வணிகத்தின் வெற்றி தோல்வியை யாகங்கள் தீர்மானிப்பதை வணிகர்கள் விரும்பவில்லை. அரசு வருவாயில் பெரும்பகுதி யாகத்திற்கு செலவிடவேண்டும் என்பதையும் அரசர்களும் பொதுமக்களும் ஏற்கவில்லை.

குறிப்பாக வட்டிக்கு எதிரான ஆரிய மதக்கொள்கை வணிகர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது. ஆரிய மத்திற்கு எதிராக வணிகர்கள் ஏற்படுத்திய புரட்சி சைன மத தோற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது. 


யாகங்கள் போலியானது. யாகங்கள் மூலம் எதுவும் நடந்துவிடாது. மாறாக யோகங்களே கடவுளை அடையும் வழி என போதித்தது சைன மதம். ஆரிய மதத்தின் மீது அரசர்கள் மற்றும் வணிகர்கள் கொண்டிருந்த வெறுப்பு சைனமத வளர்ச்சியை ஊக்கப்படுத்தியது. யாகங்களுக்கு எதிராக சைன மதக் கோட்பாடுகள் வேகமாக பரவியது.

ஆரிய மதத்தின் யாகங்களை எதிர்த்து சைனமதம் தோன்றியது. சைனத்தை எதிர்த்து புத்த மதம் தோன்றியது.

கடவுளை அடைய யாகங்களே வழி என்றது ஆரியமதம். யாகங்கள் தேவையில்லை யோகங்கள் போதும் என்றது சைனம். யோகமும் தேவையில்லை தியானம் போதும் என்றது புத்தம். 

உயிர்பலி யாகங்களை வலியுறுத்தியது ஆரியம். உயிர்பலி கூடாது மாறாக சுயம் வருத்திக்கொள்ள வேண்டும் என்றது சைனம், சுயம்வருத்த தேவையில்லை ஆசையை விட்டால் போதும் என்றது புத்தம்.

ஆரியம், சைனம், புத்தம் மூன்று மதங்களின் போட்டா போட்டி மகதத்தை வீழ்த்தி மௌரிய பேரரசு அமைய வித்திட்டது. மௌரியர்கள் மூன்று மதத்திற்கும் முக்கியத்துவம் அளித்தனர். இந்த மூன்று மதங்களால் மக்களை பலவாக பிரிந்தனர்.

பொதுமக்கள் மத்தியில் யாகம் பிரபலமடைந்தது. ஆட்சியாளர்களும், கலைஞர்களும் புத்தம் மற்றும் ஆரியத்தை மாறிமாறி ஆதரித்தனர். சுயம் வருத்துதல் காரணமாக சைனத்தை மன்னர்களும் மக்களும் தூரத்திலேயே வைத்தனர்.

யோகமும் தியானமும் பொதுமக்களை கவர்வதில் யாகத்திடம் தோல்வியை சந்தித்தன.  யாகத்தை பின்பற்றிய மௌரிய மன்னர் அசோகர் பெரும் சாம்ராஜியத்தை அமைத்தார். இந்த வெற்றிக்கு காரணம் ஆரியர்களின் யாகங்களே என்ற கருத்து பொதுமக்களிடம் பிரபலமடைந்தது.

சிறு காரியங்கள் முதல் பெரிய போர் வரையிலான செயல்களுக்கு யாகங்கள் செய்யப்பட்டது. யாகங்களின் மீது மன்னரும் மக்களும் கொண்ட வெறி உச்சகட்ட உயிர்பலிகளுக்கு வித்திட்டது.

யாகங்களில் மனித உயிர்பலி உச்சகட்டம் அடைந்தது. இதனால் புத்தம் மற்றும் ஆரியமத்திற்கு இடையே கடுமையான மதக்கலவரங்கள் தொடர்ந்தன. ஒருகட்டத்தில் கூட்டு உயிர்பலியிடல் முக்கிய யாகமாக இருந்தது. ஏராளமான புத்த சைன மதகுருக்கள் கூட்டுபலிக்கு பலியானார்கள்.

இந்த நிலையில் தான் அசோகர் மனம் உடைந்து புத்த மதத்தை தழுவினார். அசோகரது மனமாற்றம் ஆரிய மதத்திற்கு முற்றுபுள்ளி வைத்தது. யாகம் செய்வோர் நாடுவிட துவங்கினர்.

அசோகருக்கு பின்னர் புத்தமும் சைனமும் குறுநில மன்னர்களிடேயே பிரபலம் அடைந்தது. யாகங்கள் வெறுக்கத்தக்க செயலாக மாறியது. ஆரிய குருக்கள் மீண்டும் நாடோடிகளாக மறைந்து வாழ துவங்கினர்.

சைனம் மற்றும் புத்தமதத்திற்கு இடையேயான கருத்து மோதல் நூற்றாண்டுகள் தொடர்ந்தது. இது இரு மதங்களையும் சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளியது. இந்த வீழ்ச்சி மீண்டும் ஆரியம் புத்துயிர் பெற வழிவகுத்தது. 

தொடர்ச்சி அடுத்த பதிவில்..