20/02/2020

மருந்தா, மருத்துவமா? - நவீன சித்த மருத்துவம் 1

காலப்பயணம் கட்டுரையை இப்படி முடித்திருந்தேன்.
 ‘‘சித்த மருத்துவத்தை நவீன மருத்துவத்துவத்தின் வேகத்திற்கு கொண்டு சேர்த்தால் காலப்பயணம் சாத்தியமாகும்.’’ 

சித்தர்களுக்கே உள்ள சிறப்பு புதிராய் சில புதினங்களை விட்டுச்செல்வது. புதிர் என்றால் என்ன? புதினம் என்றால் என்ன? என்பதையே இன்றைய தலைமுறைக்கு விளக்க வேண்டி உள்ளது.

புதிர் என்றால் எளிமையான விடையை தாங்கிய ஒரு கேள்வி. அந்த கேள்விக்கான பதில் அந்த கேள்விக்குள்ளேயே இருக்கும். நாம் கொஞ்சம் சிந்தித்தால் பதிலை கண்டுபிடித்து விடலாம். அத்தகு கேள்விகளைத் தான் புதிர் என்கிறோம்.

புதினம் என்றால் செய்தியை நேரடியாக சொல்லாமல் மறைமுக உவமைகளோடு(உதாரணங்களோடு) சொல்வது. அப்படி புனைந்து சொல்வதைத் தான் புதினம் என்கிறோம்.

சித்தர்கள் அருளிய எல்லா சித்த மருத்துவ குறிப்புகளும் இப்படி புதிரான புதினங்களாகத் தான் இருக்கின்றன. புதிரும் தெரியாமல், புதினமும் புரியாததால் சித்த மருத்துவத்தை போலி மருத்துவமாக பார்க்கிறோம்.

இன்று தமிழகம் எங்கும் சித்தமருத்துவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசும் சித்தமருத்துவத்தை பயன்பாட்டில் வைத்துள்ளது. சித்த மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள், மருந்துகடைகள் என சித்த மருத்துவம் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனால் அது ஒரு மூன்றாம் தர மருத்துவமாக பார்க்கப்படுகிறது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.

அலோபதி என்கிற ஆங்கில மருத்துவம் தான் முதன்மையாக உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஆயுர்வேத மருத்துவத்தை தேடி மக்கள் செல்கின்றனர். முன்றாவது இடத்திலேயே சித்த மருத்துவம் உள்ளது. இன்னும் கொஞ்ச காலத்தில் சித்த மருத்துவத்தை பின்னுக்கு தள்ளி அக்குபிரசர் மருத்துவம் மூன்றாம் இடத்திற்கு வந்துவிடும் போல.

உலகில் ஏராளமான மருத்துவ முறைகள் உள்ளன. இந்தியாவில் 6 வகையான மருத்துவ முறைகள் பிரபலமாக உள்ளன. 1.ஆங்கில மருத்துவம், 2.ஆயுர்வேத மருத்துவம், 3.சித்த மருத்துவம், 4.ஹோமியோ மருத்துவம், 5.யுனானி மருத்துவம், 6.அக்குபிரசர் மருத்துவம்.

(யோகசனம் மற்றும் இயற்கை மருத்துவ முறைகள் சித்த மருத்துவத்தில் அடங்கி  விடுகிறது. இது குறித்து தனி கட்டுரையில் விவரிக்கிறேன்.)


இதில் இந்திய பாரம்பரிய மருத்துவம் என்பது ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் தான். கேரளாவில் தோன்றியது ஆயுர்வேதம். தமிழகத்தில் தோன்றியது சித்த மருத்துவம். ஹோமியோபதி ஜெர்மனிய மருத்துவம். யுனானி என்பது அரேபிய மருத்துவம். அக்குபிரசர் என்பது சீன மருத்துவம்.

இன்று உலகில் பெரும்பான்மை மக்களின் பயன்பாட்டில் இருப்பது அலோபதி மருத்துவம். இந்திய அரசின் முதன்மை முக்கியத்துவம் பெற்றிருப்பதும் இந்த அலோபதி மருத்துவம் தான்.

ஆங்கில மருத்துவம் அல்லாத மற்றவைகளை மாற்று மருத்துவ முறை என்றே அழைக்கிறோம். மாற்று மருத்துவ முறைகள் மக்களிடம் இன்னும் போதிய நம்பகத் தன்மையைப் பெறவில்லை. இதற்குக் காரணம் ஆங்கில மருத்துவம் போன்று அவை முறைப்படுத்தப் படாமல் இருப்பதே.

ஆங்கில மருத்துவத்திற்கு உலக அளவில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் மாற்று மருத்துவ முறைகள் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கின்றன.

மாற்று மருத்துவத்திற்கான முறையான ஆராய்ச்சிகள் எங்கும் நடப்பது இல்லை. அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும் அவை அங்கீகாரம் பெறுவது இல்லை.

உண்மையில் ஆங்கில மருத்துவத்திற்கும் சித்த ஆயுர்வேத மருத்துவ முறைகளுக்கும் இடையில் ஒற்றை வேறுபாடு தான் உள்ளது. மருந்து ஒன்று தான். மருத்துவ முறைகள் தான் வேறு! - இது பலருக்கும் புரிவதில்லை.

நம் நாட்டில் மெடிக்கலுக்கும் மெடிசனுக்குமே வித்தியாசம் புரிவதில்லை. படித்த டாக்டர்கள் முதல் பாமரர்கள் வரை இதே நிலை தான். மெடிக்கல் என்றால் மருத்துவம், மெடிசன் என்றால் மருந்து. மருந்து கடைகளை மெடிசன் சென்டர் என்பதற்கு பதில் மெடிக்கல் சென்டர் என்றே அழைத்துக் கொண்டு இருக்கிறோம்.

மருத்துவம் வேறு, மருந்து வேறு! ஆங்கில மருத்துவம் மிகபெரிய வளர்ச்சி அடைய மருந்து-மருத்துவ வேறுபாட்டை கடைபிடித்ததே காரணம். மருத்துவம் பார்ப்பவர் வேறு, மருந்தை தயாரிப்பவர் வேறு! 

ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவருக்கு மருத்துவம் பார்க்கத் தான் தெரியுமே தவிர, மருந்தை பற்றிய எதுவும் தெரியாது. அதனால் தான் அன்றைய மக்கள் ஆங்கில மருத்துவருக்கும் கைராசி மருத்துவர் என்ற புனிதர் பட்டத்தை தந்தனர். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பான்மை ஆங்கில மருத்துவர்கள் மருந்துகளை நம்பியே மருத்துவம் பார்க்கின்றனர்.

கருவிகளும், மருந்துகளுமே ஒட்டுமொத்த ஆங்கில மருத்துவத்தை ஆட்சி செய்கின்றன. இதே நிலை தான் மாற்று முறை மருத்துவ முறைகளிலும் தொடர்கிறது.

மருந்துக்கும் மருத்துவத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்ற அடிப்படை விசயமே போலி மருத்துவர்கள் உருவாகக் காரணம்.

எம்.பி.பி.எஸ் படித்திருந்தாலும் மருத்துவம் வரவில்லை என்றால் நிச்சயம் அவர் போலி மருத்துவர் தான். அதே நிலை தான் சித்த மருத்துவத்திலும் நிலவுகிறது.

பல சித்த மருத்துவர்கள் மருந்தை வைத்திருக்கிறார்கள்., ஆனால் மருத்துவம் தெரிவதில்லை. சிலருக்கு மருத்துவம் தெரிகிறது ஆனால் மருந்து கிடைப்பதில்லை. சித்த மருத்துவம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்க இதுவே முதன்மை காரணம்.

மருந்துக்கும் மருத்துவத்திற்கும் என்ன வித்தியாசம்?
ஆங்கில மருந்தும் சித்த மருந்தும் எப்படி ஒன்றாகும்?

அடுத்த பதிவில் ...

தொடரும்....

No comments:

Post a comment