02/02/2020

ஆரியம், சைனம், புத்தம் - இந்து மதம் 2

இந்திய வரலாற்றை போல இந்து மத வரலாறும் தெற்கு வடக்கு என இரண்டானது.

வடக்கில் இருந்து ஆரம்பித்தால் ஆரியம், சைனம், புத்தம், பிராமணியம், சனாதனம், என்ற நெடிய போராட்ட வரலாற்றை பார்க்கலாம். தெற்கில் இருந்து ஆரம்பித்தால், சாங்கியம், சமணம், சீவகம், அசீவகம், என்ற தொன்று தொட்ட வரலாற்றை பார்க்கலாம்.

வடக்கில் இருந்து தெற்கு நகர்ந்த இந்து மதமும், தெற்கில் இருந்து வடக்கு நகர்ந்த இந்துமதமும் பிராமணியத்தால் ஒன்று சேர்க்கப்பட்டது. சனாதனம் என்ற அந்த ஒன்று கூடலால் இந்துமதம் இன்றுவரை புத்துயிர் பெற்று நிற்கிறது.

இந்து மதத்தை 1.பிராமணியம் 2.பிராமணியம் அல்லாதார் என இரண்டாக பிரிக்கலாம். இதை 1.ஆத்திகம் 2.நாத்திகம் என்று பல காலமாக பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.

நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பு என தற்போது தான் பேசப்படுகிறது. உண்மையில் நாத்திகம் என்றால் பிராமணியம் அல்லாத கடவுள் வழிபாடு என்பதே பொருள்.

பிராமணிய இந்து மதம் மிகவும் குழப்பமான வரலாற்றை கொண்டது. தொன்மையோ, தொடர்ச்சியோ இல்லாத மலுப்பல்களை மட்டுமே வரலாறாக கொண்டது.

வடக்கே குப்தர்கள் தெற்கே பல்லவர்கள் ஒருங்கே ஆட்சி செய்தபோது தோன்றியது தான் பிராமணிய இந்து மதம். அதற்கு முன்னதாக அதற்கான சரியான வரலாறு இல்லை. பிராமணிய இந்து மதத்தின் முன்னோடி ஆரியமதம்.

வடக்கே கங்கை சமவெளி நாகரீகத்தில் இருந்து ஆரிய மதத்தின் அரிச்சுவடு துவங்குகிறது. கங்கை சமவெளிப் பகுதியில் அறியப்படும் முதல் நாகரீகம் மகத ஆட்சியளார்களுடையது. மகதர்களால் ஆரிய மதம் பின்பற்றப்பட்டது.

கடவுள் ஒருவரே. கடவுள் நெருப்பானவர். கடவுளுக்கு உருவம் இல்லை. யாகங்கள் செய்வதன் மூலம் கடவுளை அடையலாம் இதுவே ஆரிய மதத்தின் ஆரம்பகால கோட்பாடுகள்.

யாகங்கள் செய்வதற்காக ஏராளமான மந்திரங்களை உருவாக்கி கொண்டனர். மந்திரம் ஓதுபவர்கள் கடவுளின் நேரடி தூதுவர்களாக அறியப்பட்டனர். அதில் இருந்து பிறந்தது தான் பிற்கால பிராமணியம்.

யாகங்கள் மூலமாக அரசர்களை தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினர் ஆரியர்கள். இதனால் யாகம் செய்பவர்களுக்கு கீழ்நிலையிலேயே அரசர்கள் இருந்தனர். ஆரிய மதத்தில் யாகத்தின் மூலமே அனைத்தும் தீர்மானிக்கப்பட்டது. வீரம், விவேகம், கலை, நீதி என அனைத்தையும் யாகங்களே தீர்மானித்தன.

ஆரிய குருக்கள் அரசர்களை அடிமையாகவே வைத்திருந்தனர். கலைஞர்கள் மற்றும் வணிகர்களையும் யாகங்களுக்கு கட்டுபட்டு இருக்க செய்தனர். வணிகத்தின் வெற்றி தோல்வியை யாகங்கள் தீர்மானிப்பதை வணிகர்கள் விரும்பவில்லை. அரசு வருவாயில் பெரும்பகுதி யாகத்திற்கு செலவிடவேண்டும் என்பதையும் அரசர்களும் பொதுமக்களும் ஏற்கவில்லை.

குறிப்பாக வட்டிக்கு எதிரான ஆரிய மதக்கொள்கை வணிகர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது. ஆரிய மத்திற்கு எதிராக வணிகர்கள் ஏற்படுத்திய புரட்சி சைன மத தோற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது. 


யாகங்கள் போலியானது. யாகங்கள் மூலம் எதுவும் நடந்துவிடாது. மாறாக யோகங்களே கடவுளை அடையும் வழி என போதித்தது சைன மதம். ஆரிய மதத்தின் மீது அரசர்கள் மற்றும் வணிகர்கள் கொண்டிருந்த வெறுப்பு சைனமத வளர்ச்சியை ஊக்கப்படுத்தியது. யாகங்களுக்கு எதிராக சைன மதக் கோட்பாடுகள் வேகமாக பரவியது.

ஆரிய மதத்தின் யாகங்களை எதிர்த்து சைனமதம் தோன்றியது. சைனத்தை எதிர்த்து புத்த மதம் தோன்றியது.

கடவுளை அடைய யாகங்களே வழி என்றது ஆரியமதம். யாகங்கள் தேவையில்லை யோகங்கள் போதும் என்றது சைனம். யோகமும் தேவையில்லை தியானம் போதும் என்றது புத்தம். 

உயிர்பலி யாகங்களை வலியுறுத்தியது ஆரியம். உயிர்பலி கூடாது மாறாக சுயம் வருத்திக்கொள்ள வேண்டும் என்றது சைனம், சுயம்வருத்த தேவையில்லை ஆசையை விட்டால் போதும் என்றது புத்தம்.

ஆரியம், சைனம், புத்தம் மூன்று மதங்களின் போட்டா போட்டி மகதத்தை வீழ்த்தி மௌரிய பேரரசு அமைய வித்திட்டது. மௌரியர்கள் மூன்று மதத்திற்கும் முக்கியத்துவம் அளித்தனர். இந்த மூன்று மதங்களால் மக்களை பலவாக பிரிந்தனர்.

பொதுமக்கள் மத்தியில் யாகம் பிரபலமடைந்தது. ஆட்சியாளர்களும், கலைஞர்களும் புத்தம் மற்றும் ஆரியத்தை மாறிமாறி ஆதரித்தனர். சுயம் வருத்துதல் காரணமாக சைனத்தை மன்னர்களும் மக்களும் தூரத்திலேயே வைத்தனர்.

யோகமும் தியானமும் பொதுமக்களை கவர்வதில் யாகத்திடம் தோல்வியை சந்தித்தன.  யாகத்தை பின்பற்றிய மௌரிய மன்னர் அசோகர் பெரும் சாம்ராஜியத்தை அமைத்தார். இந்த வெற்றிக்கு காரணம் ஆரியர்களின் யாகங்களே என்ற கருத்து பொதுமக்களிடம் பிரபலமடைந்தது.

சிறு காரியங்கள் முதல் பெரிய போர் வரையிலான செயல்களுக்கு யாகங்கள் செய்யப்பட்டது. யாகங்களின் மீது மன்னரும் மக்களும் கொண்ட வெறி உச்சகட்ட உயிர்பலிகளுக்கு வித்திட்டது.

யாகங்களில் மனித உயிர்பலி உச்சகட்டம் அடைந்தது. இதனால் புத்தம் மற்றும் ஆரியமத்திற்கு இடையே கடுமையான மதக்கலவரங்கள் தொடர்ந்தன. ஒருகட்டத்தில் கூட்டு உயிர்பலியிடல் முக்கிய யாகமாக இருந்தது. ஏராளமான புத்த சைன மதகுருக்கள் கூட்டுபலிக்கு பலியானார்கள்.

இந்த நிலையில் தான் அசோகர் மனம் உடைந்து புத்த மதத்தை தழுவினார். அசோகரது மனமாற்றம் ஆரிய மதத்திற்கு முற்றுபுள்ளி வைத்தது. யாகம் செய்வோர் நாடுவிட துவங்கினர்.

அசோகருக்கு பின்னர் புத்தமும் சைனமும் குறுநில மன்னர்களிடேயே பிரபலம் அடைந்தது. யாகங்கள் வெறுக்கத்தக்க செயலாக மாறியது. ஆரிய குருக்கள் மீண்டும் நாடோடிகளாக மறைந்து வாழ துவங்கினர்.

சைனம் மற்றும் புத்தமதத்திற்கு இடையேயான கருத்து மோதல் நூற்றாண்டுகள் தொடர்ந்தது. இது இரு மதங்களையும் சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளியது. இந்த வீழ்ச்சி மீண்டும் ஆரியம் புத்துயிர் பெற வழிவகுத்தது. 

தொடர்ச்சி அடுத்த பதிவில்..

No comments:

Post a comment