26/02/2020

நோய் ஏன் வருகிறது? - நவீன சித்த மருத்துவம் 2

வாழ்க்கையில் நோய் என்பது அழையா விருந்தாளி. நோயற்ற வாழ்வு வாழ்ந்த மனிதர்கள் இல்லை.

வாழ்க்கையில் நோய் என்பது தவிர்க்கவே முடியாதது. ஆனால் கொடிய நோய்களைத் தவிர்த்தே ஆக வேண்டும். கொடிய நோய்களுடன் வாழ்வது கொடிதினும் கொடிது என்பது அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்.

காய்ச்சல், சளி போன்ற இயல்பான நோய்கள், வாதம், வலி போன்ற நாள்பட்ட நோய்கள், புற்று, உறுப்பு செயலிழப்பு போன்ற கொடிய நோய்கள் என எதுவானாலும் அவை மூன்று காரணங்களால் தான் வருகிறது.

1. நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள், 2. ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள், 3. செல்லியல் மாற்றாங்களால் ஏற்படும் நோய்கள்.

இந்த 3 வகை நோய்களும் உடலில் தேவையில்லாமல் நுழையும் புற காரணிகளாலேயே ஏற்படுகின்றன.

நுண்ணுயிரிகள், ஒட்டுண்ணிகள், தாதுக்கள் என்பவையே நோய்களை ஏற்படுத்தும் புறக் காரணிகள். இந்த மூன்று காரணிகள் தான் சாதாரண காய்ச்சல் முதல் மரண நோய்கள் வரை ஏற்படுத்துகின்றன.

நுண்ணுயிரிகள் என்பது நம் கண்ணிற்கும், இயல்பறிவுக்கும் புலப்படாதவை. உடல்உறுப்புகள் அற்ற ஒருசெல் உயிரிகளைத் தான் நுண்ணுயிரிகள் என அழைக்கிறோம்.

நுண்ணுயிரிகளை மூன்றாக பிரிக்கலாம்
1.வைரஸ் 2.பாக்டீரியா 3.பூஞ்சைகள். 

ஒட்டுண்ணிகள் என்பது நமது உடலை சார்ந்து வாழும் உயிரிகள். ஒட்டுண்ணிகள் நமது உடலின் உள்ளிலும் வெளியிலும் ஒட்டிக்கொண்டு வாழ்பவை.

இத்தகு உயிர்களுக்கு உடலே உணவாகிறது. உடல்வழியாக நமது உணவை ஒட்டுண்ணிகள் பங்குபோட்டு கொள்கின்றன. பங்கீட்டு பிரச்சனை நோயாக நம்மை சோர்வடைய செய்கிறது.
 
ஒட்டுண்ணிகளை மூன்றாக பிரிக்கலாம்
1. உடலுள் வாழும் ஒட்டுண்ணிகள், 2. உடலுக்கு வெளியே வாழும் ஒட்டுண்ணிகள், 3. உணவு ஒட்டுண்ணிகள்.

உடல் செல்லியல் மாற்றம் என்பது செல்லின் பணிகளில் ஏற்படும் தோய்வு அல்லது அதீதம் இவற்றால் ஏற்படுகிறது.

உடலுள் செல்லியல் மாற்றங்களை மூன்றாக பிரிக்கலாம். 
1.இயல்பு மாற்றம் 2.தாதுக்களால் ஏற்படும் மாற்றம் 3.சூழியல் மாற்றம்

சரி நோய் எப்படி ஏற்படுகிறது என பார்க்கலாம்

உடலுள் நுழையும் தேவை அற்ற நுண்ணுயிரிகள் மற்றும் தாதுக்கள் செல்களின் அடிப்படை செயல்களை பாதிக்கின்றன. செல்களின் பணிகள் பாதிக்கப்படும் போது உடல் நோய்வாய்ப்படுகிறது.

தேவையற்ற நுண்ணியிரிகள் மற்றும் தாதுக்கள் உடல் துளைகள் வழியாக செல்களை அடைகின்றன

உடலின் துளைகளை மூன்றாக பிரிக்கலாம்
1.முக்கு வழியான சுவாச பதை, 2.வாய் வழியான உணவுப்பாதை 3.தோல், மலம், சிறுநீர் வெளியேற்று துளைகளை உள்ளடக்கிய கழிவு வெளியேற்றுப் பாதை.

இந்த மூன்று பாதைகளில் நுழையும் நுண்ணியிரிகள், ஒட்டுண்ணிகள், தாதுக்கள் என்பவை மூன்று ஊடகங்கள் வழியாக செல்களை அடைகின்றன.

உடலின் ஊடக சுழற்சியை மூன்றாக பிரிக்கலாம்
1.சுவாச காற்று சுழற்சி, 2.இரத்த சுழற்சி, 3.நிணநீர் சுழற்சி.

இந்த ஊடகங்களில் நுழையும் தேவையற்ற நுண்ணியிரிகள், ஒட்டுண்ணிகள், தாதுக்கள் உடல் செல்லின் இயங்கியலை பாதிக்கின்றன. இந்த பாதிப்பை பொருத்து நோய்கள் பிரிக்கப்படுகின்றன.


என்னடா சித்தமருத்துவம் பற்றிய கட்டுரையில் ஆங்கில மருத்துவம் பற்றி விவரிக்கிறாரே என்ற சலிப்பு வரலாம். ஆங்கில மருத்துவத்தின் அடிப்படை விசயங்களே சித்த மருத்துவத்திலும் அடிப்படையாக உள்ளது.

ஆங்கில மருத்துவமும் சித்த மருத்துவமும் ஒன்று தான். இரண்டிற்கான மருந்துகள் தான் வேறு வேறு! - இந்த நுட்பத்தை புரிந்து கொள்ள மேற்சொன்ன ஆங்கில மருத்துவத்தின் அடிப்படைகளை அறிதல் அவசியம்.

ஆங்கில மருத்துவத்தின் அடிப்படையான ஆக்சிஜன் சுழற்சியையே வாதம் என சித்த மருத்துவத்தில் குறிப்பிடுகிறோம். சுவாசக்காற்றில் நுழையும் தேவையற்ற நுண்ணுயிரி மற்றும் தாதுக்களால் வாதநோயகள் வருகின்றன.

ஆங்கில மருத்துவத்தில் குறிப்பிடப்படும் இரத்த சுழற்சி(இரத்த அழுத்தம்) என்பதையே சித்த மருத்துவத்தில் பித்தம் என அழைக்கிறோம். பித்தம் சார்ந்த நோய்கள் அனைத்தும் இரத்தத்தில் நுழையும் தேவையற்ற நுண்ணியிரி மற்றும் தாதுக்களால் வருகிறது.

ஆங்கில மருத்துவத்தில் குறிப்பிடப்படும் நிணநீர் சுழற்சியையே சித்த மருத்துவத்தில் கபம் என அழைக்கிறோம். நிணநீரில் ஏற்படும் நுண்ணுயிர் மற்றும் தாதுக்களின் ஏற்ற தாழ்வு கபம் சார்ந்த நோய்களை தீர்மானிக்கின்றன.

சுவாச சுழற்சி = வாதம், இரத்த சுழற்சி = பித்தம், நிணநீர் சுழற்சி = கபம் என்ற அடிப்படையில் ஆங்கில மருத்துவத்தின் முன்னோடியாக சித்த மருத்துவம் திகழ்கிறது.

டெதஸ்கோப் பரிசோதனை, இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை இந்த மூன்றிலும் முறையே காற்று, இரத்தம், நிணநீர் இவைகளில் உள்ள தேவையற்ற நுண்ணியிரிகள் மற்றும் தாதுக்கள் கணக்கிடப்படுகின்றன. இதையே வாதம், பித்தம், கபம் என்ற விகிதத்தில் சித்த மருத்துவத்தில் கணிக்கின்றனர்.

மருத்துவத்தில் கணக்கீடுக்கும் கணிப்பிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் ஒன்றுதான். ஆங்கில மருத்துவத்தில் கணக்கிடும் கணக்கீடும் சராசரி கணிப்பு முறையை சார்ந்தது தானே தவிர துல்லியம் அல்ல. அதையே தான் சித்த மருத்துவத்தில் கணிப்பாக செய்கின்றனர்.

இந்த கணிப்புகள் மூலம் எப்படி நோய்களை துல்லியமாக கண்டறிகின்றனர்?

அடுத்த பதிவில் பார்க்கலாம்..

தொடரும்...

No comments:

Post a comment