06/02/2020

பகவத் கீதையில் கறை சனாதனம் - இந்து மதம் 3

இந்து மத வரலாற்றை சனாதன தர்மத்தை தவிர்த்து எழுத முடியாது. சனாதன தர்மத்தை தோற்றுவித்தது யார்? என்ற கேள்விக்கு கிருஷ்ணர் என பதிலளிக்கிறது பகவத் கீதை. பைபிள், குரான் வரிசையில் இந்துக்களின் புனிதநூலாக மதிக்கப்படுவது பகவத்கீதை.

பகவத்கீதையில் சனாதன தர்மம் என்ற கறை சேர்க்கப்பட்டதா? அல்லது பகவத்கீதையால் சனாதனதர்மம் கரை சேர்ந்ததா? - மிகப்பெரிய விவாததத்திற்கு உரிய கேள்வி இது! 

இந்து மதத்தில் ஏராளமான கீதைகள் உள்ளன. ஆனால் பகவத்கீதை மட்டுமே பிரபலமாக இருக்கிறது. கிருஷ்ணர் என்ற ஆன்மீக குருவின் சொற்பொழிவுகளின் தொகுப்பே கீதைகள் என அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணர் என்பவர் பாகவதம் என்ற மதத்தின் நிறுவனர் அல்லது முக்கிய மதகுரு. கி.மு துவக்க நூற்றாண்டுகள் அல்லது புத்தருக்கு அடுத்த தலைமுறை கிருஷ்ணரின் காலமாக இருந்திருக்கலாம்.

ஆரிய மதத்தின் வேதங்களை மன்னர்களும் மக்களும் வெறுத்த காலம். சைனமும் புத்தமும் பிரபலமடைந்திருந்த காலம். இந்த காலகட்டத்தில் கங்கை சமவெளியில் தோன்றிய இன்னும் ஒரு மதவழிபாடு தான் பாகவதம்.

ஆரிய வேதங்களை எதிர்த்து, வேள்விகளை எதிர்த்து, வேதக் கடவுள்களை எதிர்த்து தோன்றியதே பாகவதம். சைனம் மற்றும் புத்த மதத்தின் கருத்தியல் மோதலை பின்னுக்கு தள்ளி பாகவதம் வேகமாக முன்னேறியது.

கிருஷ்ணர் என்பவர் புத்தரை போல பாகவதம் என்ற தனிமதத்தின் குருவாக இருந்தார். ஆரிய மதத்தின் யாகத்திற்கு மாற்றாக, சைன மதத்தின் யோகத்திற்கு மாற்றாக, புத்த மதத்தின் துறவுக்கு மாற்றாக கிருஷ்ணர் பக்தி மார்க்கத்தை போதித்தார். கிருஷ்ணரின் பக்தி வழிபாடு பாகவத மதமாக வளர்ந்தது. கிருஷ்ணரை பின்தொடர்ந்து பல பாகவதர்கள் பக்திமதத்தை இந்தியா முழுவதும் பரப்பினர்.

பக்தியால் கடவுளின் அருளை பெறமுடியும் என்பதே பாகவத மதத்தின் கோட்பாடு. ஆரியத்தின் யாகம், சைனத்தின் யோகம், புத்தத்தின் துறவு இந்த மூன்றுக்கும் இணைப்பு பாலமாக இருந்தது பாகவதம். 


மகாவீரர், புத்தர், கிருஷ்ணர் காலத்தில் ஆரிய மதத்தை எதிர்த்து ஏராளமான இந்திய மதங்கள் பிறந்தன. ஆரியர்களின் இனவாதம், பிறப்பின் அடிப்படையிலான வர்ண அடுக்குமுறை, குலதெய்வம் இவற்றை எதிர்த்து பிறந்த முக்கிய மதங்கள் தான் சைனம், புத்தம், பாகவதம் உட்பட ஏராளமான மதங்கள்.

நாராயணர், கிருஷ்ணர், இவர்களை தொடர்ந்து வியாசர், ஆதிசங்கரர் என 18ம் நூற்றாண்டு இராமகிருஷ்ணபரமஹம்சர், வரை ஏராளமானவர்கள் பாகவத மதத்தின் குருக்களாக உள்ளனர்.

முழுக்க முழுக்க ஆரியத்தின் சனாதனத்தை எதிர்த்து வந்த பாகவத மதத்தில் எப்படி புகுந்தது சனாதனம் என்பது தான் வியப்பின் உச்சம். அதனால் தான் கீதையில் சனாதனம் என்ற கறை படிந்துள்ளது என்கிறேன்.

சனாதனம் என்பது முழுக்க முழுக்க ஆரிய/அரேபிய/ஆபிரகாமிய மதங்களில் பின்பற்றப்படும் அடிப்படை விதி. அது எப்படி இந்து மதத்திற்குள் நுழைந்தது? இந்த கேள்வியில் தான் பிராமணிய மதம் பிறக்கிறது.

சனாதனம், மனுதர்மம், வர்ணதர்மம் என்ற இந்த பெயர்களின் முன்னோடி பிராமணியம். பிராமணியத்தின் பிறப்பை தெரிந்தால் மட்டுமே சனாதனத்தின் வீரியத்தையும் விசத்தையும் புறிந்து கொள்ள முடியும்.

சனாதனம் என்றால் என்ன? சனாதனம் எங்கே துவங்கியது? சனாதனத்தை தோற்றுவித்தவர் யார்?

நானே சனாதனத்தை தோற்றுவித்தேன் என பகவத்கீதையில் கிருஷ்ணர் சொல்வது எல்லாம், பிற்சேர்க்கையும், பிராமணர்களின் பித்தலாட்ட சேர்க்கையுமே ஆகும். பகவத் கீதை சனாதனத்தை போற்றுவதும் இல்லை. கிருஷ்ணர் சனாதனத்தை தோற்றுவிக்கவும் இல்லை, போதிக்கவும் இல்லை. 

அப்படியானால் சனாதனம் எப்படி கீதையில் வந்தது? இந்த கேள்விக்கான பதிலை கீதைக்கு முன்னோடியான பிரம்ம சூத்திரம் நூலில் தேடவேண்டி உள்ளது.

பிரம்ம சூத்திரம் என்பது கீதையை எழுதிய அதே வியாசரால் எழுதப்பட்ட நூல் தான். இன்று இந்து மதத்தின் அடிப்படை வேத நூல்களாக மூன்று பட்டியலிடப்படுகிறது. 1.உபநிடங்கள், 2.பிரம்மசூத்திரம், 3.பகவத்கீதை. இந்த மூன்று நூல்களையும் எழுதியவர் ஒரே நபர் தான். அவர் தான் வியாசர்.

வியசர் என்பவர் பாகவத மதத்தின் முதன்மை மதகுருவாக அறியப்பட்டவர். கிருஷ்ணருக்கு பின்னர் பாகவத மதத்தை இந்திய முழுவதும் கொண்டு செல்வதில் தீவிர பணியாற்றியவர் வியாசர். வியாசருக்கு பின்னர் தான் ஆதி சங்கரர் உட்பட சங்கராச்சாரியார்கள் வருகிறார்கள். (வியாசருக்கு பின்னர் பலரால் பல உபநிடதங்கள் பலகாலகட்டங்களில் எழுதப்பட்டது என்பதை இங்கு நினைவில் கொள்ளுங்கள்.)

உபநிடங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை இவைகளில் முழுக்க முழுக்க பக்தி, ஆன்மா, முக்தி இவற்றை பற்றி மட்டுமே பேசப்படுகிறது. எங்கேயும் சனாதனத்தையோ, வேள்வி யாகங்களை பற்றியோ பேசுவது இல்லை.

அப்படியானால் சனாதனம், வேள்வி, யாகங்களை பற்றி எங்கே பேசப்படுகிறது என்றால் வேதங்கள், சாஸ்திரங்கள், பிராமணியங்களில் தான் சனாதனம் பேசப்படுகிறது.

வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் தொடர்பே இல்லை. வேதங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் தொடர்பே இல்லை. உண்மையில் வேதங்களை விளக்க அல்ல, விலக்க வந்ததே வேதாந்தங்கள்.

எதிரும் புதிருமாக தோன்றிய வேதமும் வேதாந்தமும் பிற்காலத்தில் எப்படி ஒன்றானது?
அங்கே தான் இராமாயணம் பிறக்கிறது.
அங்கே தான் ஆரிய திராவிட யுத்தம் துவங்குகிறது.
அங்கே தான் பெண்ணுக்கும், மண்ணுக்கும், பொன்னுக்கும் வேண்டி உண்டாக்கிய சனாதனம் நிலைக்கிறது.

விரிவாக அடுத்த பதிவில்...

தொடரும்... 

No comments:

Post a comment