12/02/2020

எல்லாம் சிவ மயம் - இந்து மதம் 5

இந்து மதத்தின் முழுமுதல் கடவுள் சிவன். சிவனே முழுமுதல் கடவுள் என்ற சொல்லே சனாதனத்திற்கு சம்மட்டி அடி தருகிறது. சனாதனம் சிவனை முழுமுதல் கடவுளாக அல்ல, கடவுளாக கூட ஏற்பது இல்லை.

ஆரிய மதம் சிவனை ருத்திரன் என்கிறது. ருத்திரர் என்பவர் கடவுள் அல்ல. தேவ உலகத்தில் கடவுளுக்கு சேவை செய்பவர்களே ருத்திரர்கள். தேவ உலகில் ரிஷிகள், ருத்திரர்கள், மருந்துக்கள், அதிதிகள் என பலவகை தேவர்கள் உள்ளதாக ஆரியமதம் குறிப்பிடுகிறது.

ஆரியத்தில் இருந்து பிறந்த சனாதனம் தேவலோகத்திலும் வர்ணங்களை(சாதிகளை) பிரிக்கிறது. அதில் பூலோகத்தின் சூத்திர சாதிக்கு இணையானவர்கள் ருத்திரர்கள். அந்த ருத்திரர்களின் தலைவனே ருத்திரன். இந்த ருத்திரனை தான் சிவன் என அறிவிக்கிறது பிராமணங்கள். 

திருமாலை விஷ்ணுவாக உள்வாங்கிக்கொண்ட இந்திய மக்கள், சிவனை ருத்திரனாக ஏற்கவில்லை. இந்து மதத்ததை பொருத்தவரை சிவன் தான் முழுமுதல் கடவுள். அதற்கு பின்னவர்கள் தான் விஷ்ணுவும், பிரம்மாவும்.

சிவனா/விஷ்ணுவா என்ற கேள்வியில் உடைகிறது இந்துமதத்தின் ஒற்றுமை. இந்த ஒற்றை கேள்வியில் சனாதனமும் ஓடி ஒழிந்து கொள்கிறது.

ஆரியருக்கு முந்தைய இந்தியாவில் சிவன்(சேயோன்), திருமால்(பெருமால்-மாயோன்), முருகன்(வேந்தன்), மேகலை(வருணன்), அம்மன்(பகவதி-கொற்றவை) என்ற நிலம் சார்ந்த கடவுள்களே இருந்தனர். இந்த கடவுள்களுக்குள் ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் இருந்தது.

ஆனால் காடும் காடுசார்ந்த பகுதிகளிலும் ஊடுருவிய ஆரியர்கள் காட்டின் மக்களை பல பிரிவுகளாக பிரித்தனர். காட்டு மக்களின் ஒற்றை கடவுளான திருமாலை பல அடுக்குகளில் திரித்து சனாதனம் என்ற சதிவேலையை செய்தனர்.

திருமாலின் முதன்மை பெயரை பெருமால் என்று அழைக்கின்றனர் மலைவாழ்மக்கள். பெருமாலின் கிளை பெயர்கள் தான் நாராயணன், கண்ணன், கண்ணையா, கிருஷ்ணன், ஐயனார், அய்யாசாமி, கருப்பசாமி, மதுரைவீரன், ஐயப்பன் என்பதெல்லாம்.

வேதங்களில் இருந்த ஆரிய மதம் வேதாந்தங்கள் வழி பிரம்ம மதமாக மாறியது. பிரம்மமதம் பிராமணங்கள் வழி சனாதன மதமாக மாறியது. சனாதனம் வைணவம் வழி இந்து மதமாக மாறியது.

இங்கே கொஞ்சம் உண்ணிப்பாக படித்தால் மட்டுமே மதமாற்றத்தின் காலக்கோடு உங்களுக்கு புரியும்.

ஆரிய மதத்தின் கடவுளுக்கு பெயரில்லை. யூத மதத்தின் யகோவா போல, இஸ்லாமிய மதத்தின் அல்லா போல பெயரற்ற, உருவமற்ற கடவுளே ஆரியமத கடவுள். இத்தகு கடவுளை அடைய வழிகாட்டிகளாக மீட்பர்கள் வருவார்கள். மீட்பர்கள் வழி கடவுளை அடையலாம் என்பதே ஆபிரகாமிய மதங்களின் கோட்பாடு.

ஆபிரகாம் மதங்கள் தோன்றலுக்கு முன்பாக உலகெங்கும் உருவவழிபாடு முறையே இருந்தது. உருவங்களை வழிபடும் முறையை விலக்கி பிறந்தது தான் ஆபிரகாமிய மதங்கள். அந்த வழித் தோன்றலில் வந்தது தான் யூதம், ஆரியம், பிரம்மம், ஜைனம், புத்தம், கிறிஸ்துவம், இஸ்லாமியம், சனாதனம், பாரசீகம், சீக்கியம் என்பது எல்லாம்.

மேற்சொன்ன மதங்கள் எல்லாம் உருவ வழிபாட்டுக்கு எதிரானவை. உடல் பொய்யானது ஆன்மாவே நிந்தரமானது என்ற கொள்கை உடையவை.

ஆன்மாவை போற்றும் மதங்களுக்கு எதிர்திசையில் இருப்பது உடலை போற்றும் மதங்கள். தமிழகத்தில் தோன்றிய சாங்கியம், சமணம், சீவகம், அசீவகம், சைவம், கௌமாரம், சக்தி போன்றவை உடலை போற்றும் மதங்கள். உடலை தாண்டி கடவுள் இல்லை என்கின்றன இந்த மதங்கள்.

உடல் தான் எல்லாம். ‘‘உடலே கோயில், உள்ளமே கடவுள்’’ என்ற கோட்பாட்டை உடையவை தென்னிந்திய மதங்கள். உடலை போற்றும் விதமாக உருவ வழிபாட்டை பின்பற்றுகின்றன இந்த மதங்கள்.

கட்டுரையின் இறுதிக்கு வந்துவிட்டோம். இனி மிக சுருக்கமாக முடிக்க வேண்டி உள்ளது. 

கி.பி துவக்க நூற்றாண்டுகளில் வடஇந்தியாவில் குப்தர்கள் தென் இந்தியாவில் பல்லவர்கள் கூட்டாட்சி அமைத்திருந்தனர். இந்த காலகட்டத்தில் வடஇந்திய பிராமணர்கள் மற்றும் தென்னிந்திய அந்தணர்கள் இணைந்து சனாதன மதத்தை கட்டமைத்தனர். 


தென்னிந்திய அந்தணர்கள் வழிபட்ட திருமால், சிவன், முருகன், சாத்தன்(கருப்பசாமி), மாரி(அம்மன்), பிள்ளையார்(கணபதி) ஆகிய தெய்வங்களை வேதாந்தங்களோடு இணைத்துக் கொண்டனர். இப்படி இணைக்கையில் ஆரிய பிராமணர்களுக்கும், தென்னிந்திய அந்தணர்களுக்கும் கடுமையான சண்டை நடந்தது. முழுமுதல் கடவுள் யார் என்பதில் தான் அந்த சண்டை.

திருமாலை விஷ்ணுவுடனும், சிவனை ருத்திரனுடனும், முருகனை சுப்பிரமணியனுடனும், சாத்தன், மாரி, பிள்ளையார் இவர்களை காவல் தெய்வங்களுடனும் இணைத்தனர்.

இணைப்பை ஏற்ற மக்கள் கடவுளுக்குள்ளும் சனாதனம் இருக்கிறது என்பதை ஏற்கவில்லை. சனாதனத்தை உடைத்து உண்டான ஆறு மதங்களை தான் இந்து மதம் என இன்று அழைக்கிறோம். 

விஷ்ணுவை பிராமணியத்தின் வழி வழிபடுபவர்கள் வடகலை பிராமணர்கள் எனவும், விஷ்ணுவை கண்ணனாக, நாராயணனாக, பெருமாலாக வழிபட்டவர்கள் தென்கலை பிராமணர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவ் இருவினரும் வைணவர் என்ற மதத்திற்குள் அடைபட்டனர்.

சிவனை முழுமுதல் கடவுளாக வழிபட்ட அந்தணர்கள் சைவம் என்ற புதிய மதத்தை தோற்றுவித்தனர். பிராமணியத்திற்குள் அடைபடாத முருக வழிபாடு கௌமாரம் என்று தளைத்தது.

பிரமாணத்திற்குள் அடைபடாத திருமால் வழிபாடு ஐய்யாசாமி, மதுரைவீரன், கருப்பசாமி, சுடலைமாடன், சாத்தன் வழிபாடாக பரிணமித்தது.

கொற்றவை காளி, கங்கை, காவேரி, மாரி என தனி வழிபாடாக பிராமணியத்தை புறம்தள்ளி சக்திவழிபாடு சுடர்விட்டது.

எல்லாம் கடவுளே, எல்லாம் சிவமயம், எம்மதமும் சம்மதம் என்பவர்கள் பெரும்பான்மை இந்துக்களாக மாறினர்.  

இந்திய மதங்களை ஒருங்கிணைக்க நினைத்தனர் சங்கராச்சாரியார்கள். ஆனால் தங்களின் பிடிவாத சனாதன கொள்கையால் இந்து மதத்தை அழிவு பாதைக்குள் விட்டு சென்றனர்.

சனாதனம் என்ற நச்சால் கொஞ்சம் கொஞ்சாமாக ஆழிந்து வருகிறது இந்து மதம். சனாதனத்தில் இருந்து விடுபட இந்துமதம் ஒவ்வொரு நூற்றாண்டிலும் போராடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் சனாதனத்தை தங்களின் வாழ்வாதாரமாக கொண்ட சில பிராமணர்களின் அதிகார சுரண்டலின் முன்பு இந்த போராட்டங்கள் தோற்றுப்போகின்றன.

சனாதனம் என்பது இந்த காலகட்டத்தில் தேவை இல்லை என பெரும்பான்மை பிராமணர்கள் கூறுகின்றனர். ஆனால் சில கழுசடை பிராமணர்கள் இன்றும் அதை பற்றிக்கொண்டு இருக்கின்றனர். இந்த கழுசடைகளாக சில ஆயிரம் பிராமணர்களே உள்ளனர். 

இவர்களின் சனாதன அடுக்கு சில ஆயிரம் சாதிவெறியர்களை ஊக்குவிக்கிறது. இந்த ஊக்கம் இந்து மதத்தை செதில் செதிலாக சிதைத்து வருகிறது. இது நீடித்தால் இன்னும் சில நூற்றாண்டுகளில் இந்துமதம் இல்லாமல் போகும்.

அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற உயரிய ஆன்மிக கோட்பாடுகளை கொண்டது இந்து மதம். ஆனால் சனாதனம் என்ற ஒற்றை கோட்பாட்டில் சாக்கடைக்குள் கிடக்கிறது.

சனாதனம் இல்லாத இந்துமதம் வேண்டும். அதுவே என்மதம் என்பதில் எனக்கும் பெருமையே.

முற்றும். நன்றி.
 
பின்குறிப்பு : (சிவன், முருகன், ஐயப்பன், மாரி உட்பட தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை தனி ஒரு கட்டுரையில் விளக்குகிறேன். இந்து மத கிளைகளான பிரம்ம மதம், சமண மதம், சீக்கியம் குறித்தும் விரிவாக விளக்க வேண்டி உள்ளது. சனாதனத்தின் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் குறித்த விளக்கங்களை சனாதனம் என்ற கட்டுரை தொடரில் எழுதுகிறேன்.)

No comments:

Post a comment