15/03/2020

யோகாசனமா? ஓகாசனமா? - தியானம் 1

தியானம் என்றதும் நினைவுக்கு வருவது புத்தர், விவேகானந்தர், பதஞ்சலி.

தியானம் குறித்து வடஇந்திய இலக்கியங்களே அதிகமாக பேசுகிறது. தமிழ் இலக்கியங்கள் தியானத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரவில்லை.

ஆபிரகாமிய மதங்கள், புத்தம், சைனம், போன்றவை தியானத்தை வலியுறுத்துகின்றன. இந்து மதத்தில் தியானம் என்பது பொறுமையோடு நின்றுவிடுகிறது. தியானத்தால் பெரிய மாற்றங்களை பெற முடியாது என்பதே இந்து மத கோட்பாடு.

தியானம் என்றால் என்ன? தியானம் எதற்கு பயன்படுகிறது? தியானத்தால் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பவை குறித்த அடிப்படை புரிதல் அவசியம். இந்த புரிதல் இருந்தால் தியானத்திற்காக இழக்கும் நேரத்தையும், தியானத்தின் பெயரில் ஏமாற்றப்படும் மன உளைச்சலையும் தவிர்க்கலாம்.

தியானம் என்ற சொல்லுக்கு பொறுமை என்று அர்த்தம். ஆனால் இன்றைய உலகில் மனிதர்களால் அவ்வளவு பொறுமையாக இருக்க முடியாது. அதனால் தியானத்தை விட்டு யோகம், மற்றும் பக்தியை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். தியானத்தை விட யோகம் அதிக வருவாய் ஈட்டுவதால் யோக பயிற்சி மையங்கள் புற்றீசலாக பெருகி வருகின்றன.

பக்தி போரடித்து போனவர்களுக்கு தியானம் உயர்வாக தெரிந்தது. தியானத்திற்கான பொறுமை இல்லாதவர்களுக்கு யோகம் எளிதாக தெரிந்தது. யோகத்தில் திருப்தி அடையாதவர்கள் மோட்சத்திற்கான இடம் தேடுகிறார்கள். ஆக எல்லாமே ஒரு வித மன உளைச்சலையே மிச்சப்படுத்துகின்றன. 

அது என்ன தியானம், பக்தி, யோகம், மோட்சம்? தியானத்திற்கும் பக்திக்கும், யோகத்திற்கும் மோட்சத்திற்கும் என்ன தொடர்பு?

தியானத்தை பற்றி ஆய்வு செய்யும் போது முதலில் வந்து நிற்பது பதஞ்சலி யோக சூத்திரம் என்ற நூல். பதஞ்சலி யோக சூத்திரம் முழுக்க முழுக்க தியானத்தை பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் தற்போது பதஞ்சலி யோகத்தை  உடற்பயிற்சியுடன் தொடர்புபடுத்தி வியாபாரம் செய்கின்றனர்.

ஆசனம் வேறு! தியானம் வேறு! முதலில் இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். ஆசனம் என்பது உடற்பயிற்சி தொடர்புடையது. தியானம் என்பது மனபயிற்சி தொடர்புடையது.

உடற்பயிற்சிக்கும் மனபயிற்சிக்கும் நீண்டநெடிய வேறுபாடு உண்டு. உடற்பயிற்சி என்பது எதார்த்தமானது. மனபயிற்சி என்பது மாயையானது, போலியானது.

பதஞ்சலி யோக சூத்திர நூல் மோட்சம் அடைய தேவையான தியானத்தை வலியுறுத்துகிறது. சமாதி, சாதனை, விபூதி, கைவல்யம் என்ற நான்கு பிரிவுகளில் 8 நிலைகளில் தியானத்தை போதிக்கிறார் பதஞ்சலி முனிவர்.


பதஞ்சலி யோகசூத்திரத்தில் ஆசன நிலைகள் விளக்கப்படுவதில்லை. மோட்சம் அடைய தியானம் உதவுகிறது. தியானத்திற்கு யோகாசனம் உதவுகிறது என மட்டுமே பதஞ்சலி யோக சூத்திரம் குறிப்பிடுகிறது. ஆசன நிலைகள் தமிழக சித்தரியல் இலக்கியங்களிலேயே விளக்கப்பட்டு உள்ளன.

யோகசனம் என்பது ஓகாசனம் என்ற தமிழ்சொல்லின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு. சித்தர்கள் மூச்சுபயிற்சியை ஓகாசனமாக குறிப்பிட்டு உள்ளனர். ஓகாசனம் என்பது பல ஆசனங்களில் மூச்சுபயிற்சி என்ற ஒரு ஆசனம் மட்டுமே. இதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். அப்போது தான் உங்களுக்கு ஓகாசனத்திற்கும், யோகாசனத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியும்.

இன்று யோகசனம் என்ற பெயரில் வட இந்தியாவில் ராம்தேவும், தென்னிந்தியாவில் ஜக்கி வாசுதேவும் செய்வது வெற்று கூத்துக்களே. (இந்த வார்த்தைகள் கடுமையானதாக இருக்கலாம். ஆனால் ஓகாசனத்திற்கும் யோகசனத்திற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளும்போது உங்களுக்கே இந்த ரௌத்திரம் வந்துவிடும்.)

யோகம் என்றால் தவம் என்று பொருள், தவம் என்றால் தியானம் என்று பொருள். அல்லாமல் யோகம் என்றால் ஆசனம் என்று பொருள் அல்ல! ஆசனம் வேறு! யோகம் வேறு! ஆசனம் என்பது உடற்பயிற்சி தொடர்புடையது. யோகம் என்பது தியானம் என்ற மனப்பயிற்சியுடன் தொடர்புடையது.

தியானம் செய்வதற்கான படிப்படியான நிலைகளில் ஒன்று மட்டுமே யோகாசனம். அதாவது ஓகாசனம். இன்னும் தெளிவாக சொன்னால் மூச்சு பயிற்சி! சமஸ்கிருதத்தில் பிரணாயாமம்! அவ்வளவு தான். மூச்சு பயிற்சி அல்லாமல் வேறு எந்த ஆசனங்களும் பதஞ்சலி யோகாசனத்தில் இல்லை. 

மூச்சு பயிற்சி மட்டுமே யோகாசனம். அல்லாமல் பிற உடல் பயிற்சிகள் யோகாசனம் ஆகாது. பிற உடற்பயிற்சிகள் ஆசனம் என்ற பெயரில் சித்தர் இலக்கியங்களில் ஏராளம் உள்ளன.

உதாரணத்திற்கு சிரசாசனம், பத்மாசனம், சிம்மாசனம் என பல ஆசனங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் யோகாசனம் என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்குவது மடத்தனம். அந்த மடத்தன ஆசனத்தின் மீது அமர்ந்தே இன்று உலகம் முழுவதும் பல யோகா பயிற்சி மையங்கள் கொடிகட்டி பறக்கின்றன.

ஆசனத்திற்கும் யோகாசனத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியாபார உலகின் வித்துக்களாக மாறிவிட்டனர்.

வித்துக்களாக மாறக்கூடாது என்பதே பதஞ்சலி யோகத்தின் கடைசி சூத்திரம். ஆனால் அதுவே புரியாமல் பதஞ்சலியின் பெயரில் யோகா மையங்கள் செயல்படுவது உச்சகட்ட கேலிகூத்து. 

உண்மையில் பதஞ்சலி யோக சூத்திரம் என்றால் என்ன?

ஓம் என்ற மூச்சில் யோகாசனம் என்ற தியான நிலையை அடைவது எப்படி?

அடுத்த பகுதியில் பார்க்கலாம்..

தொடரும்...

No comments:

Post a comment