26/03/2020

ஓம் மந்திரம் - தியானம் 3

உடல் நலனுக்கு பல ஆசன முறைகளை கற்பித்துள்ளனர் சித்தர்கள். ஆசன வரிசையில் மனதை பக்குவப்படுத்த உதவும் ஆசனமாக ஓகாசனத்தை போதித்துள்ளனர். ஓகாசனமே யோகாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஓகாசனம் மனதுக்கானது என்றாலும் அது மனதை போல கருத்தியல் தொடர்பானது அல்ல. ஓகாசனம் என்பது முழுக்க முழுக்க உடலியல் (பொருளியல்) தொடர்பானது.

உடல் ஆசன முறைகளில் ஒன்று தான் ஓகாசனம். உடலின் மூச்சை கையாளும் உடற்பயிற்சியே ஓகாசனம். மூச்சை கையாளும்போது நம் எண்ணங்களும் இயல்பாகவே ஒடுக்கம் பெறுகிறது. இதனாலேயே ஓகாசனத்தை மனதுடன் தொடர்புடையதாக குறிப்பிடுகிறோம்.

மற்ற உடல் ஆசனங்களை செய்யும்போது மனம் ஒடுக்கம் பெறுவது இல்லை. ஆனால் ஓகாசனம் செய்யும்போது மனம் இயல்பாக ஒடுக்கம் பெறுகிறது. மனதை அடக்கும் தந்திரமாக ஒகாசனம் அமைகிறது.

ஓகாசனத்தின் மந்திரமாக ஓம்காரம் வலியுறுத்தப்படுகிறது. ஓம்காரம் என்றால் அடங்கி போவது., அமைதியாவது., ஆமோதிப்பது., ஒத்துக்கொள்வது., அப்படியே என சம்மதிப்பது., என்ற அர்த்தங்கள் தமிழில் விவரிக்கப்படுகிறது.

ஆபிரகாமிய மதங்களின் ஆமேன் என்ற சொல்லும், ஓம் என்ற சொல்லும் ஒரே அர்த்தத்தையே குறிக்கின்றன. ஆமேன் என்றால், ஆமாம், அப்படியே, அதுதான் என ஒத்துக்கொள்ளும் மனநிலையையே குறிக்கிறது. இதே மனநிலை தான் ஒம் என்ற சொல்லிற்கும் உடையது.

ஓம் என்பது ஓங்காரம் என்ற சொல்லின் சுருக்க குறியீடாக உள்ளது. ஓம்காரம் என்பது அகங்காரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல். அகங்காரம் என்பது மனதின் பிறப்பு பெயர். ஒங்காரம் என்பது மனதின் இறப்பு பெயர். 

தமிழ் உயிர் எழுத்து வரிசையில் முதல் எழுத்தான ‘அ’ மனதின் பிறப்பு பெயருக்கு குறியீடாக இலக்கணப் படுகிறது. அ என்பதன் விரிவாக்கமே அங்காரம். அங்காரமே அகங்காரம் எனப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்து வரிசையில் இறுதி எழுத்தான ‘ஓ’ மனதின் இறப்பு பெயருக்கு குறியீடாக இலக்கணப் படுகிறது. ‘ஓ’ என்பதன் விரிவாக்கமே ஓங்காரம்.

தான் என்ற முதல் எண்ணத்திலேயே மனம் பிறக்கிறது. தான் என்ற எண்ணத்தை மனம் எப்போதும் விடுவதில்லை. தான், தன்னுடையது, தனக்கானது, என்ற அடிப்படையிலேயே மனதின் எண்ணங்கள் கட்டமைக்கப்படுகிறது. (மனம் குறித்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.)

தான், தனக்கு, தனக்குறியது என்ற மனதின் அடிப்படை எண்ணங்களை அகங்காரம் என்ற சொல்லில் அழைக்கிறோம். தான் என்ற மனதின் எண்ணங்கள் முழுமையாக ஒடுக்கப்படும் போது மனம் இறப்பை சந்திக்கிறது. மனதின் இறப்பை ஓங்காரம் என அழைக்கிறோம். 

ஒருவர் ‘தான்’ என்ற இறுதி சுயநினைவையும் இழக்கும் போது மனதால் இறந்தவராகிறார். அந்த இறப்பின் நிலையே ஓங்காரம்.

நான் ஒன்றும் இல்லை. எல்லாம் இறைவனே. என் மனதை இறைவனிடம் ஒப்படைக்கிறேன் என்பதன் குறியீட்டு சொல்லாக ஓங்காரத்தை சைவசித்தர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

சரி இனி ஓங்காரத்திற்கும் ஓகாசனத்திற்கும் என்ன தொடர்பு என்பதை பார்த்து விடுவோம்.

ஓகாசனம் என்பது மூச்சு பயிற்சியை குறிக்கிறது. மூச்சு பயிற்சியின் போது சிந்தனை முழுவதும் மூச்சின் மீது கவனமாக இருக்க வேண்டும். இயல்பாகவே இது சாத்தியப்படும். மூச்சு பயிற்சியின் போது வேறு சிந்தனைகள் வராது. அப்படி வந்தால் மூச்சின் ஆளுகை இயல்பாகவே கைவிடப்படும்.
மூச்சு ஆசனத்தின் போது மனம் இயல்பாகவே ஒற்றை சிந்தனையில் ஒடுங்குகிறது. எனவே மன ஒடுக்கத்தின் பெயரையே மூச்சு ஆசனத்திற்கு பெயராக சூட்டி உள்ளனர் சித்தர்கள். மன ஒடுக்கத்தின் ஓங்காரமே மூச்சு ஆசனத்தின் ஓகாசனமாக பெயர் பெற்றுள்ளது அவ்வளவே.

இனி ஓம் என்ற சொல்லிற்கான விளக்கத்தை பார்ப்போம்.

ஓம் என்ற சொல்லிற்கு இந்துமத நூல்கள் பல விளக்கங்கள் தருகின்றன. அ.உ.ம என்ற எழுத்துக்களின் சுருக்கமாக ஓம் விவரிக்கப்படுகிறது.

ஓம் என்பது உயிர் மூச்சின் பிறப்பாகவும், உயிர் மந்திரமாகவும், மந்திரங்களுக்கும், சொல்லுக்கும், ஒலிக்கும் முதன்மையானதாகவும் கூறப்படுவது தவறான கருத்து. உண்மையில் ஓம் என்பது துவக்க ஒலியோ, துவக்க மந்திரமோ அல்ல. ஓம் என்பது இறுதி ஒலியும், இறுதி மந்திரமாகவுமே சித்தர்கள் விளக்கி உள்ளனர்.

தன் எல்லாவித எண்ணங்களையும் கைவிட்டு இறைநிலை என்ற ஒற்றை எண்ணத்தில் இருப்பதற்கான மந்திரமாகவே ஓம் வலியுறுத்தப்படுகிறது. ஒம் என்ற இறுதி எண்ணத்தில் நிலைத்திருப்பதையே தியானம் என சித்தர்கள் விளக்கி உள்ளனர்.

ஓம் என்ற ஒற்றை எண்ணம் மனதின் இறுதி எண்ணமாக கொள்ளப்படுகிறது. ஓம் என்ற இறுதி எண்ணத்தில் தொடர்ந்து மனதை நிலை நிறுத்துவதையே தியானம் என்கிறோம்.

மனதில் ‘தான்’ என்ற எண்ணம் அகன்று ஓம் என்ற எண்ணத்தை நிலைநிறுத்தம் கலையையே வீடுபேறு, சமாதி என்ற சொற்களில் அழைக்கிறோம்.

மனதில் ‘தான்’ எனும் எண்ணம் அகலும் போது உடல் மீதான எண்ணம் இல்லாமல் போகிறது. இதனால் உயிர் பயமும் அற்றுப்போகிறது. உயிர் பயம் இல்லாத போது பிறப்பு-இறப்பு என்ற கவலை இல்லை. இந்த நிலையை வீடுபேறு என சித்தர்கள் வியம்புகின்றனர்.

தியானம் செய்வதால் ‘தான்’ எனும் எண்ணத்தை தற்காலிகமாக ஒடுக்க முடியும். ஆனால் அது ஒரு மாயை மட்டுமே. இது போதை, மயக்கம் மற்றும் தூக்கம் போன்றது. போதை, தூக்கம், மயக்கம் தீர்ந்ததும் உடல்வலியும், மனவலியும் திரும்ப வந்துவிடும்.

தியானத்தால் கிடைக்கும் வீடுபேறு வெற்று மாயை. தியானத்திற்கும் அறத்திற்கும் தொடர்பே இல்லை. அறத்தை பேணி தியான நிலையை அடைவதை விட, போதையை பேணி தியான நிலையை அடைவது எளிது. இந்த குறுக்கு வழியே சித்தர்கள் தியானத்தை கைவிட காரணமாக அமைந்தது.

அந்த குறுக்குவழி சுவாரசியத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்..

தொடரும்...

No comments:

Post a comment