07/03/2020

மருத்துவ முறைகள் - நவீன சித்த மருத்துவம் 4

நோய்களை தீர்க்க இரண்டு வழிகளை கையாளலாம்.
1. மருந்து, 2. மருத்துவம்

மருத்துவத்தை மூன்றாக பிரிக்கலாம்.

1. மருந்து வழி மருத்துவம், 2. அறுவை சிகிச்சை மருத்துவம்,
3. உடலியல் மருத்துவம். 

இதில் மூன்றையுமே தன்னகத்தே கொண்டது சித்த மருத்துவம். தற்போது சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை கைவிடப்பட்ட ஒன்றாக உள்ளது. காரணம் உலகளாவிய மருத்துவ கட்டுப்பாடுகள் தான்.

மருந்து வழி மருத்துவமானது சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் உட்பட எல்லா மருத்துவ முறைகளிலும் கடைபிடிக்கப்படுகிறது.

நோயின் தன்மைக்கு ஏற்ப மருந்தை 1. உணவு வழியாக, 2. இரத்தத்தின் வழியாக, 3. நேரடியாக செலுத்துதல் என்ற அடிப்படையில் மருந்து வழி மருத்துவம் செயல்படுகிறது.

அறுவை சிகிச்சை என்பது நோயுற்ற உடலின் பாகங்களை அறுத்து அகற்றுதல் அல்லது அறுத்து சீர்செய்தல் என்ற அடிப்படையில் செயலாற்றுகிறது.

அறுவை சிகிச்சை என்பது சித்த மருத்துவம் உட்பட எல்லா மருத்துவ முறைகளிலும் நடைமுறையில் இருந்த ஒன்று தான். ஆனால் அரிய மருத்துவ முறை என்பதால் அறுவை சிகிச்சை பொது மருத்துவத்தில் இருந்து தனித்துவம் ஆக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நாம் கருதுவது போல அறுவை சிகிச்சை என்பது ஆங்கில மருத்துவத்திற்கு மட்டும் உரியது அல்ல. ஆங்கில மருத்துவத்தில் இருந்து தனித்துவப் படுத்தப்பட்டது தான் அறுவை சிகிச்சை. 

அறுவை சிகிச்சை என்பது தனி மருத்துவ முறை. உடல் உறுப்புகளை நீங்குதல் மற்றும் சேர்த்தல் என்பது மனிதகுல வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரக் கூடியது. இது மதசட்டங்களுடனும் முரண்பாடு கொண்டது. இந்த தனித்துவ காரணங்களால் சித்த மருத்துவம், ஆங்கில மருத்துவம் உட்பட உலகின் அனைத்து மருத்துவ முறைகளில் இருந்தும் அறுவை சிகிச்சை பிரித்து வைக்கப்பட்டு உள்ளது. 


உடலியல் மருத்துவமானது மருந்தில்லா மருத்துவம் என பொதுவாக அழைக்கப்படுகிறது. சில உடல் அசைவுகள் வழி உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை துண்டுதலே உடலியல் மருத்துவம் எனப்படுகிறது.

உடலுக்கு ஒய்வு அளித்தல் உடலியல் மருத்துவத்தின் முதன்மை மருத்துவமாக பார்க்கப்படுகிறது.

நன்னம்பிக்கை, உடற்பயிற்சி, மனஅமைதி, ஆழ்ந்த உறக்கம் என்பவை உடலியல் மருத்துவத்தின் படிநிலைகள்.

மருந்து மருத்துவமா? அறுவை மருத்துவமா? உடலியல் மருத்துவமா? மூன்றில் எது சிறந்தது என்றால் மூன்றுமே தேவையானது தான்.

சித்த மருத்துவத்தை பொருத்தவரை பொதுவாக வாத நோய்களுக்கு உடலியல் மருத்துவம் சிறந்த பலனை தருகிறது. பித்த, கப நோய்களுக்கு மருந்து மருத்துவம் நல்ல தீர்வாக உள்ளது. அறுவை சிகிச்சை என்பது அரிதிலும் அரிதாக செய்யப்படுகிறது.

மருத்துவத்தைப் பற்றி பார்த்துவிட்டோம். இனி மருந்தை குறித்தும் சுருக்கமாக பார்த்து சித்த மருத்துவத்தின் இறுதிக்கு கடந்து விடலாம்.

மருத்துவத்தை போல மருந்தையும் மூன்றாக பிரிக்கலாம். 1. உணவு வழி மருந்தை செலுத்துதல், 2. இரத்தத்தில் நேரடியாக செலுத்துதல், 3. சுவாச காற்றின் வழி செலுத்துதல்.

சித்த மருத்துவத்தில் பொதுவாக உணவு வழி மருந்து பயன்பாடே அதிகமாக உள்ளது. உணவின் வழி மருந்தை தருவதால் மருந்தின் அளவு துள்ளியமாக இருக்கிறது. அதிகப்படியான மருந்தை கழிவாக வெளியேற்றுவது எளிதாக உள்ளது. மருந்து உணவின் ஒரு பகுதியாக இருப்பதால் பக்க விளைவுகள் தவிர்க்கப்படுகிறது.

ஆங்கில மருத்துவத்தில் வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து மற்றும் மாத்திரைகள், உணவு மருத்தின் ஒரு அங்கம் தான். ஆங்கில மருந்து மாத்திரைகள் பதப்படுத்தப்பட்டவை. சித்த மருத்துக்கள் பதப்படுத்தப்படாதவை அவ்வளவு தான் வேறுபாடு. மற்றபடி பாரசிட்டாமால் மாத்திரைக்கும், துளசிச்சாருக்கும் எந்த வித்தியசமும் இல்லை.

ஆங்கில மாத்திரைகள் கெமிக்கல்., சித்த மருத்துவம் இயற்கை என்பது எல்லாம் வெற்றுப்பேச்சுகளே. நாம் இயற்கை உணவாக உண்டாலும், கெமிக்கலாக உண்டாலும் உடலுக்கு கெமிக்கல்கள் தான் தேவை.

உணவில் உள்ள தேவையான கெமிக்கல்களை எடுத்துக்கொண்டு மற்றவற்றை கழிவாக உடல் வெளியேற்றி விடும். எனவே மருந்து உணவா? கெமிக்கலா என்று விவாதம் செய்வதில் அர்த்தம் இல்லை. 

இரத்தத்தின் வழி மருந்தை செலுத்துதல் கொஞ்சம் அபாயகரமானது. இயன்றவரை தவிர்க்கலாம். சித்த மருத்துவத்தில் அரிதினும் அரிதாகவே இரத்தத்தின் வழி மருந்து கொடுக்கப் படுகிறது. ஆனால் ஆங்கில மருத்துவத்தில் இதுவே முதன்மையாக உள்ளது.

ஊசி மூலம் மருந்தை செலுத்துவதால் உடனடி நிவாரணம் கிடைக்கிறது. அதே நேரத்தில்  பக்கவிளைவுகளும் உடனடியாக வந்து விடுகின்றன.

ஊசி வழி மருந்தை செலுத்துவதால் சிறுநீரகத்திற்கு அதிகப்படியான வேலைப் பளுவை தருகிறோம். மேலும் நிணநீர் பாதைகளும் பாதிக்கப்படுகின்றன. அதிகப்படியான மருந்து உடலியல் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கின்றன.  இதனாலேயே சித்த மருத்துவத்தில் ஊசி தவிர்க்கப்பட்டு உள்ளது.

காற்றின் வழி மருந்தை தருவது சித்த மருத்துவத்திற்கே உரிய தனிச்சிறப்பாக உள்ளது.

அது என்ன காற்று மருத்துவம்?

ஆங்கில மருத்துவர்களுக்கே ஆச்சரியத்தை தரும் சித்த மருத்துவத்தின் காற்றுமருந்து குறித்து அடுத்த இறுதிபகுதியில் பார்க்கலாம்.

தொடரும்...

No comments:

Post a comment