13/03/2020

மரணத்தை வெல்லும் மருந்து - நவீன சித்த மருத்துவம் 5

மருந்துவத்தை விட மருந்து மிக முக்கியமானது. சரியான மருந்தை கொடுத்துவிட்டால் உடல் சுயமாக மருத்துவம் செய்துகொள்ளும்.

மருந்தை மூன்றாக பிரிக்கலாம். 1. உணவு வழி மருந்து, 2. இரத்த வழி மருந்து, 3. காற்று வழி மருந்து.

வாய்வழியாக உட்கொள்ளும் உணவு, தண்ணீர், மாத்திரைகள், மருந்துகள் எல்லாம் உணவு வழி மருந்தைச் சார்ந்தவை.

ஊசி வழி செலுத்தப்படும் மருந்துகள், காயங்களுக்கு மேல் பூசப்படும் ஆயில்மெண்ட், கிரீம், பொடி, உட்பட வகை மருந்துகள் இரத்தத்தின் வழி மருந்தைச் சார்ந்தவை.

ஆவிபிடித்தல், புகைபிடித்தல், சுவாசித்தல் ஆகியவை காற்றின் வழி செலுத்தும் மருந்துகள்.

சித்த மருத்துவத்தில் காற்று வழி மருந்துகள் தனிச்சிறப்பை பெற்றுள்ளன. ஆங்கில மருத்துவத்தில் ஊசியின் வழி செலுத்தும் மருந்துகளுக்கு இணையானது சித்த மருத்துவத்தில் காற்று வழி மருந்துக்கள். 

ஊசி மருந்துகளை போல காற்றுவழி மருந்துகள் உடனடி நிவாரணத்தை தருகின்றன. அதே நேரத்தில் ஊசியைப் போல் பக்கவிளைவுகளை தருவதில்லை.

சித்த மருத்துவத்தில் காற்று வழி மருந்துகள் முறைப்படுத்தப் படாமல் உள்ளன. குறிபிட்ட சில மருந்துவர்கள் மட்டுமே இதை செய்கின்றனர்.

சாம்பிராணி புகை, வரமிளகாய்+குறுமிளகு+உப்பு+துளசி புகை, வேப்பிலை ஆவிபிடித்தல் போன்றவை பொதுவான காற்றுவழி மருந்துகள்.

மூலிகைகளை மருத்துவர் தன் வாயில் மென்று காற்றை நோயாளியின் மூக்கு மற்றும் காதுகளில் ஊதுதல் மற்றொருவகை காற்று மருந்து. இப்படி பலவகை காற்று மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஆனால் இவை அடிப்படை அளவில் கூட முறைப்படுத்தப் படாமல் உள்ளன.

சித்த மருத்துவத்தில் இரத்த வழி மருந்துகள் முற்றிலும் தவிர்க்கப்படுகின்றன. இரத்த வழி மருந்துகளுக்கு மாற்றாக காற்று மற்றும் நிணநீர் வழி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

சித்த மருந்துவத்தில் இரத்தம் சார்ந்த மருந்துகள் நிணநீர் வழியாகவே செலுத்தப்படுகிறது. காயங்களில் வழியும் நிணநீர்கள் மீது மருந்தை பூசுவதால் அவை இரத்தத்தில் கலக்கின்றன. நிணநீருடன் இணைந்து கலப்பதால் பக்கவிளைவுகள் குறைக்கப்படுகிறது.

நிணநீரையே மருந்தாக பயன்படுத்தும் வழக்கம் சித்த மருத்துவத்தில் உண்டு. நோயாளியின் இரத்த உறவினரின்  எச்சில், சிறுநீர் இவற்றுடன் தாவர சாம்பலை சேர்த்து நிணநீர் மருந்தாக பயன்படுத்தப் படுகிறது.

காற்று, நிணநீர் மருந்துகள் பயன்பாட்டில் இருந்தாலும் உணவு மருந்தே சித்த மருத்துவத்தின் முக்கிய மருந்தாக உள்ளது. ‘‘உணவே மருந்து’’ என்பதே சித்தமருத்துவத்தின் சித்தாந்தம். அந்த வகையில் அன்றாட உணவுடன் மருந்தை இணைத்தே உண்கின்றனர் தமிழர்கள்.
கட்டுரையின் இறுதிக்கு வந்துவிட்டோம். நவீன சித்த மருத்துவம் குறித்து சுருக்கமாகப் பார்த்து நிறைவு செய்யலாம்.

ஆங்கில மருத்துவம் பொது மருத்துவமாக அங்கீகாரம் பெற முக்கிய காரணம் அதன் வெளிப்படை தன்மையும், காலத்திற்கு ஏற்ப நவீனப்படுவதும் தான்.

சித்தமருத்துவத்திலும் வெளிப்படை தன்மையும், நவீனமும் மிக அவசியமாக உள்ளது. சித்த மருத்துவம் என்பது நாள்பட்ட நோய்களுக்கான மருத்துவமோ, இரகசிய நோய்களுக்கான மருத்துவமோ அல்ல. அது உலகின் பொது மருத்துவம். ஆங்கில மருத்துவத்திற்கு இணையான எல்லா நவீன தன்மையும் கொண்டதே சித்த மருத்துவம்.

90% நோய்கள் பொதுவான நோய்கள் தான். பொதுவான நோய்களுக்கான மருந்துக்கள் ஆங்கில மருத்துவத்தில் நவீனமாகவும் வெளிப்படை தன்மையுடனும் உள்ளது.

உதாரணமாக காய்ச்சலை அடக்க பாரசிட்டாமால் மருந்து வெளிப்படையாக உள்ளது. மாத்திரை, மருந்து, ஊசி, காற்று என அனைத்திலும் நவீன முறையில் கிடைக்கிறது. பாரசிட்டாமால் மருந்தின் வேலையை சித்த மருந்துக்களான துளசியும் நிலவேம்பும் எளிதாக செய்கின்றன.

இன்று தமிழகத்தின் எல்லா மருந்து கடைகளிலும் வெளிப்படையாக கிடைக்கிறது நிலவேம்பு பொடி. மாத்திரை, மருந்து, பொடி என நவீன வடிவங்களில் நிலவேம்பு கிடைக்கிறது. குழந்தைகள் முதல் வயதானவர் வரை நேரடியாக பயன்படுத்தும் நவீனத்தை பெற்றுள்ளது நிலவேம்பு.

சின்னச் சின்ன காய்ச்சல்களுக்கு மருத்துவரை அணுகாமல் பாரசிட்டமால் பயன்படுத்துவதை போல நிலவேம்பை பயன்படுத்த முடிகிறது. பழக்கப்பட்டவர்கள் பாராசிட்டமாலை தவிர்த்து நிலவேம்பையே பயன்படுத்த துவங்கி விட்டனர். இது சித்தமருத்துவத்தின் மகத்தான சாதனைகளுள் ஒன்று.

நிலவேம்பு போல பொது நோய்களுக்கான அனைத்து சித்த மருந்துகளும் நவீனபட வேண்டும். சித்த மருத்துவத்தின் பொது மருந்துகளை வெளிப்படை தன்மைக்கு கொண்டுவர வேண்டும். எல்லா மருத்துக்களையும் முறைப்படுத்தி, நவீனப்படுத்தி, வெளிப்படையாக வைக்க வேண்டும். இது நிகழுமானால் அதுவே மரணத்தை வெல்லும் மருந்தாக அமையும்.

சித்த மருத்துவத்தை நவீனப்படுத்த அரசு முன்வர வேண்டும். தனியார் ஆராய்ச்சிகள் வெளிப்படையாக வேண்டும். அவற்றிற்கான அங்கீரத்தை தர மக்கள் முன்வர வேண்டும். இது நிகழ்ந்தால் ஆங்கில மருத்துவத்தின் பெரியண்ணன் போக்கு மாறும். சித்த மருத்துவமும் பொது மருத்துவத்தின் ஒரு அங்கமாகும்.

முற்றும். நன்றி...

No comments:

Post a comment