24/04/2020

உயிர் என்றால் என்ன? - 1

உடலில் உயிர் எங்கு உள்ளது? இதுவரை பதில் கிடைக்காத கேள்வியாகவே இருக்கிறது.

உயிர் வேறு உடல்வேறு என மதங்கள் போதித்தாலும், அறிவியல் ரீதியில் அது உண்மை இல்லை. உடல் அல்லாத ஒரு உயிர் இதுவரை கண்டறியப் படவில்லை. உடலில் தான் உயிர் உள்ளது. உடல் இல்லாமல் உயிர் இல்லை.

உடலின் ஏதோ ஒரு மூலையில் உயிர் உள்ளதா? அல்லது உடல் முழுவதும் உயிர் உள்ளதா? இந்த கேள்விக்கான பதிலை தேட உடலை பற்றிய அறிமுகம் நமக்கு தேவை!

உடலுக்கும் உயிருக்கும் ஒரே சம்மந்தம் தான் உள்ளது! அது :- உயிர் இல்லாவிட்டால் உடல் இல்லை. உடல் இல்லாவிட்டால் உயிர் இல்லை. உடலும் உயிரும் வெவ்வேறு என்றாலும் ஒன்றில்லாமல் ஒன்றில்லை.

உயிரை பற்றிய பல குழப்பங்கள் நம்மிடம் உள்ளது. இதுதான் உயிர் என இதுவரை நம்மால் உறுதியாக கண்டறிய முடியவில்லை. உயிர் குறித்து ஆன்மீகத்தில் எவ்வளவு குழப்பங்கள் உள்ளதோ, அதைவிட அறிவியலிலும் குழப்பங்கள் உள்ளன.

சரி இங்கே உயிரை தற்காலிகமாக ஒதுக்கி வைப்போம். உயிரின் உற்ற தோழன் உடலை பற்றி கொஞ்சம் அலசிவிட்டு மீண்டும் உயிருக்கு வருவோம்.

உடல் பற்றிய தெளிவு அறிவியலில் தெள்ளத்தெளிவாக உள்ளது. உடல், உறுப்புகளால் ஆனது. உறுப்புகள் திசுக்களால் ஆனாது. திசுக்கள் செல்களால் ஆனது. செல்கள் ஒவ்வொன்றும் தனி உடல்கள். அந்த தனி செல் உடல்களுக்குள் ஏரளாமான செல் உறுப்புகள்.

உடல் - உடல் உறுப்பு - திசு - செல் - செல் உறுப்பு

ஒரு உயிரியின் மொத்த உடல் அமைப்பை தான் உடல் என்கிறோம். இறந்த உயிர்களை உடல் என அழைப்பது இல்லை. அவை பிணங்கள் அல்லது உயிரற்ற பொருட்கள் பட்டியலில் அடங்குகிறது.

உடல் என்பது உறுப்புகளின் தொகுப்பாக உள்ளது. உறுப்புகள், உயிருக்கு உயிர் வேறுபடும். உதாரணமாக கை, கால், கண், காது உட்பட புற உறுப்புகள், இதயம், நுரையீரல், சிறுநீரகம் உட்பட உள்ளுறுப்புகள் என அனைத்தும் உயிரினத்துக்கு உயிரனம் வேறுபாடு உடையது. அது எப்படி? ஏன்? எதற்கு? எதனால்? என்பது குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

உறுப்புகள் பல வடிவங்களில், பல வகைளில் இருந்தாலும் அனைத்தும் திசுக்களால் ஆனாது. தாவரங்கள், விலங்குகள் அனைத்தும் திசுக்களால் ஆனது. 


அது என்ன திசு?

திசு என்பது செல்களின் தொகுப்பு! ஒரு செல் என்பது செல். இரண்டுக்கும் மேற்றபட்ட செல்கள் சேர்ந்து இருந்தால் திசு. அவ்வளவு தான் திசுவுக்கும் செல்லுக்குள் உள்ள வேறுபாடு.

செல் என்பது உயிரினங்களின் அடிப்படை உறுப்பாக அறியப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட செல்களின் தொகுப்பு திசு. ஒன்றுக்கும் மேற்பட்ட திசுக்களின் தொகுப்பு உறுப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளின் தொகுப்பு உடல்.

சரி இனி செல்லுக்குள் நுழைவோம்!

ஒரு உடலில் நிகழும் அத்தனை நிகழ்வுகளின் அடிப்படையும் ஒரு செல்லுக்குள் நிகழ்கிறது. உதாரணமாக செல் சுவாசிக்கிறது, செல் உணவு உட்கொள்கிறது, செல் கழிவை வெளியேற்றுகிறது, செல்லுள் காம(செக்ஸ்)நிகழ்வுகளும் நடக்கின்றன. 

இதெல்லம் எப்படி நடக்கிறது? செல் எப்படி காமத்தில் ஈடுபடுகிறது? இதை பற்றி தெரிந்து கொள்ள செல் உறுப்புக்களை பற்றிய அறிதல் வேண்டும்.

நமது உடல் முழுவதும் செல்களால் ஆனது. நமது உடலில் கோடிக்கணக்கான செல்கள் இருக்கிறது. செல்லுக்கு பல வடிவங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் உள்ளது. உதாரணமாக ஒவ்வொருவர் உடலுக்கும் பல வடிவங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட அமைப்பை பெற்றிருக்கிறது. அதாவது புறத்தோல், புற உறுப்புகள், உள்தோல், உள்உறுப்புள் என உடலில் இருப்பதை போல செல்லுள்ளும் இருக்கின்றன.

செல்லின் அமைப்பை மூன்றாக பிரிக்கலாம்.

1. புற அமைப்பு, 2. உள்அமைப்பு, 3. உட்கரு அமைப்பு

செல்லின் புற அமைப்பில் செல்தோல் உள்ளது. செல்தோலை செல் சவ்வு என்று அழைக்கிறோம். செல்சவ்வு ஒரு இயந்திர கதவு போல பணியாற்றுகிறது. உள்ளே நுழைய அனுமதி உள்ளதை மட்டும் உள்ளே நுழைய அனுமதிக்கிறது. அதுபோல செல்லுள் இருந்து வெளியே வர அனுமதி உள்ளதை மட்டும் வெளியே வர அனுமதிக்கிறது. அவ்வளவு தான் செல்சவ்வின் வேலை.

செல் சவ்வை காவலாளியுடன் ஒப்பிட முடியாது. அதே நேரத்தில் காவல் இயந்திரத்துடன் ஒப்பிடலாம். காவலாளி உணர்வுபூர்வமாக செயல்படுவார். ஆனால் இயந்திரத்திடம் உணர்வுபூர்வமாக ஏமாற்ற முடியாது. அதே நேரத்தில் தந்திரமாக ஏமாற்றலாம். காவலாளி கடப்பவருக்கும் கடவுசீட்டுக்கும் வேறுபாடு இருந்தால் அனுமதிக்க மாட்டார். ஆனால் இயந்திரத்திற்கு கடவுசீட்டு மட்டும் போதும். கடவுசீட்டு உள்ள யாரும் இயந்திரத்தை ஏமாற்றி நுழைந்து விட முடியும். ஆனால் அந்த கடவுசீட்டை உண்டாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

கடவுசீட்டுடன் செல்லுக்குள் நுழைவது எப்படி?
செல்லுள் என்ன இருக்கிறது?
செல்லுள் உயிர் எங்கே இருக்கிறது? அடுத்த பதிவில்..

தொடரும்..

No comments:

Post a comment